நீங்கள் ஏதோ ஒரு தொழில் அல்லது வியாபாரத்தில் ஈடுபட்டிருந்து அதில் வருமானமின்றியும் நஷ்டமடைந்தும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலோ அல்லது புதிதாக வியாபாரமோ அல்லது தொழிலோ தொடங்குவதாக இருந்தால் நீங்கள் வழிபட வேண்டிய கோயில் ஒன்று உள்ளது. அதுதான் திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகே அய்யன்பேட்டையில் அமைந்திருக்கும், அருள்மிகு படி அளந்த நாயகி சமேத செட்டி அப்பர் திருகோயில் ஆகும். இத்தலத்தில் சிவபெருமான் கையில் தராசு பிடித்த கோலத்திலும், அம்பிகை கையில் அளவைப் படியை ஏந்தியபடியும் காட்சி தருகிறார்கள்.
ஒருசமயம் இப்பகுதியில் கடும் பஞ்சம் ஏற்பட்ட பொழுது மக்கள் உணவுக்கு பெரும் வறுமைக்கு உள்ளானார்கள். அப்போது திருநாவுக்கரசரும் திருஞானசம்பந்தரும், திருவீழிமிழலை ஈசனிடம் முறையிட, அவர் முன்கோபுர வாசலில் திருநாவுக்கரசருக்கும், பின்கோபுர வாசலில் திருஞானசம்பந்தருக்கும் தினந்தோறும் தங்கப் படிக்காசு தந்தார். ‘இதைக் கொண்டு எங்கே பொருள் வாங்குவது? மக்களுக்கு எங்கே உணவு படைப்பது?’ என்று இறைவனிடம் கேட்க, அதற்கு ஈசன், ‘அய்யன்பேட்டையில் பொருள் வாங்கும்படியும், ஆண்டார்பந்தியில் உணவு படைக்கும்படியும் உத்தரவிட்டார்.
அதன்படி, அய்யன்பேட்டை சென்றபோது அங்கே இறைவன் தராசோடும், இறைவி படியோடும் வாணிகம் செய்திருந்தனர். அங்கு பொருட்கள் வாங்கி பக்கத்து ஊரான ஆண்டார்பந்தியில் மக்களுக்கு உணவு படைத்திருக்கிறார்கள். இதனால் இங்கு செட்டியப்பர் என்கிற சுந்தரேஸ்வரர் சுவாமி, படியளந்த நாயகி என்கிற மீனாட்சி அம்பாள் வீற்றிருக்கிறார்கள்.
திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரின் பாடல் பெற்ற தலமாக இது விளங்குகிறது. ஆண்டுதோறும் சித்திரை பரணி நட்சத்திர தினத்தன்று இத்தலத்தில் ‘வியாபார விழா’வெகு விமரிசையாக நடைபெறுகிறது. அச்சமயம் ஏராளமான வியாபாரிகள் மற்றும் தொழில் புரிவோர் இத்தல இறைவனை வந்து தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். வியாபரம், தொழில் செய்பவர்கள் இத்தலம் வந்து இறைவனை தரிசனம் செய்தால் அவை செழிக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.