துலியா நகர் மாஜிஸ்ட்ரேட்டிற்கு முன்னால் ஒரு விசித்திர வழக்கு விசாரணைக்கு வந்தது. ஒருவன் நகைகளைத் திருடி விட்டான் என்பதே அந்த வழக்கு. அந்த நகைகளை வைத்திருந்தவனோ அவற்றை ஷீர்டி சாயிபாபா தான் தனக்குக் கொடுத்தார் என்றான்.
“அவரையே கேட்டுப் பாருங்கள். அவர் தான் இதற்கு சாக்ஷி” என்றான் அவன். அனைவரும் திகைத்தனர்.
மாஜிஸ்ட்ரேட்டிற்கு வேறு வழி இல்லை. அவர் ஷீர்டி சாயிபாபாவிற்கு சம்மனை அனுப்பினார்.
கான்ஸ்டபிள் ஒருவன் சம்மனைக் கொண்டு வந்து ஷீர்டி சாயிபாபாவிடம் கொடுக்க முனைந்தார்.
“அதை அந்தத் தீயில் போடு” என்றார் பாபா. அங்கிருந்த சீடர் ஒருவர் அதை வாங்கித் தீயில் போட்டார்.
இது கோர்ட்டுக்குத் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு சம்மன் கொடுக்கப்பட்டது என்பது தெரிந்தும் அவர் வராமல் இருந்ததற்காக அவருக்கு பிடி வாரண்ட் அனுப்பப்பட்டது.
கண்பத்ராம் என்ற கான்ஸ்டபிள் பாபாவிடம் வந்து, “பாபா, அவர்கள் வாரண்டை அனுப்பி இருக்கிறார்கள். என்னுடன் தயவு செய்து துலியாவிற்கு வர முடியுமா?” என்று பணிவுடன் கேட்டார்.
“அதைத் தூக்கி எறி” என்றார் பாபா. அவர் திகைத்துப் போனார்.
அங்கிருந்த சீடர் என்.ஜி. சந்தோர்கர் ஒரு யோசனை கூறினார். அதன் படி ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டது. அதில் பாபா ஏராளமான பக்தர்களால் வணங்கப்படுபவர் என்றும் இப்படி வாரண்ட் அனுப்புவது முறையற்றது என்றும் சாட்சியம் நிச்சயம் தேவைப்பட்டது என்றால் ஒரு கமிஷனரை அனுப்பலாம் என்றும் மகஜரில் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி முதல் வகுப்பு மாஜிஸ்ட்ரேட்டான நானா ஜோஷி கமிஷனராக ஷீரடிக்கு வந்தார்.
விசாரணை ஆரம்பமானது.
கமிஷனர்: உங்கள் பெயர் என்ன?
பாபா: என்னை எல்லோரும் சாயி பாபா என்று அழைக்கிறார்கள்.
கமிஷனர்: உங்களுடைய தந்தையின் பெயர் என்ன?
பாபா: அவர் பெயரும் சாயிபாபா தான்.
கமிஷனர்: உங்கள் குருவின் பெயர் என்ன?
பாபா: வெங்கூசா
ககமிஷனர்: அவரதி ஜாதி, மதம் என்ன?
பாபா: கபீர்
கமிஷனர்: ஜாதி? இனம் என்ன?
பாபா : பரவார்திகர் (இந்தச் சொல்லுக்கு கடவுள் என்று அர்த்தம்)
கமிஷனர்: வயது என்ன?
பாபா: பல லட்சம் வருஷங்கள்.
கமிஷனர்: நீங்கள் சொல்வதெல்லாம் சத்தியம் என்று சத்தியம் செய்வீர்களா?
பாபா: நான் சொல்வதெல்லாம் சத்தியமே.
கமிஷனர்: உங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டவரைத் தெரியுமா?
பாபா: தெரியும். எனக்கு எல்லோரையும் தெரியும்.
கமிஷனர்: அந்த குற்றம் சாட்டப்பட்டவர் உங்களது பக்தன் என்று தன்னைச் சொல்லிக் கொள்கிறார். அது உண்மையா?
பாபா : ஆம், நான் ஒவ்வொருவருடனும் இருக்கிறேன். அனைவரும் என்னுடையவரே.
கமிஷனர்: நீங்கள் அந்த நகைகளைக் கொடுத்ததாக அவர் சொல்கிறார். கொடுத்தீர்களா?
பாபா; ஆம். நான் கொடுத்தேன். யார் யாருக்குக் கொடுக்கிறார்கள்?
கமிஷனர்: நீங்கள் அவற்றை அவருக்குக் கொடுத்தீர்கள் என்றால், அவை உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? அதை எப்படி உங்கள் வசம் நீங்கள் வைத்திருந்தீர்கள்?
பாபா: இதெல்லாம் என்ன? இந்த சனியனோடு எனக்கு என்ன தொடர்பு?
கமிஷனர் திகைத்தார். பிறகு அனைவரும் கூடி யோசித்தனர்.
கிராமத்திலிருந்த குறிப்புகளைக் கொண்டு வருமாறு அனைவரும் கூறினர். அதில் கிராமத்தைச் சேராத அந்நியர்கள் வந்ததற்கான குறிப்புகளை எடுத்தனர்.
அதில் நகைகளைத் திருடியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் அந்த கிராமத்திற்கு வந்து குறிப்பிட்ட தேதியில் பாபாவைச் சந்தித்தற்கான எந்த வித குறிப்பும் பதிவாகியிருக்கவில்லை.
பாபா கிராமத்தை விட்டு எங்கும் செல்பவர் இல்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
இவற்றையெல்லாம் கமிஷனர் எழுதி பாபாவிடம் காட்டினார்.
பாபா அவை உண்மை தான் என்றார். கமிஷனர் ஒருவாறாக தனது அறிக்கையைத் தயார் செய்தார்.
பாபாவிடம் கையெழுத்து கேட்கவில்லை கமிஷனர்.
அங்கிருந்து அவர் சென்றார். சாட்சியம் இப்படியாக முடிந்தது.
பாபா எந்த ஒரு காலத்திலும் எந்த ஒரு பேப்பரிலும் தன் கையெழுத்தை இட்டதே இல்லை.
விசித்திரமான இந்த வழக்கு இப்படியாக முடிந்தது!
ஆதாரம்: Sri Sai Baba’s Charters and Sayings – B.V. Narasimhaswami Chapter Baba’s independence