
ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் (Sai Baba) 107 ஆவது மஹாசமாதி ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி எல்லா சாயிபாபா ஆலயங்களிலும் மிக விசேஷமாக அனுசரிக்கப்படுகிறது. ஷீரடி சமாதி மந்திரில் அக்டோபர் 1 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 4 ஆம் தேதி வரை 'ஸ்ரீ சாயிபாபா புண்யதிதி' என்ற பெயரில் மிக விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 1 ஆம் தேதி ஸ்ரீ சாயி சத்சரித அகண்ட பாராயணம் நடைபெறுகிறது. அக்டோபர் 2 ஆம் தேதி விஜயதசமியன்று சமாதி மந்திர் பக்தர்கள் வந்து வழிபாடு செய்வதற்காக நாள் முழ்வதும் திறக்கப்பட்டு இருக்கிறது.
நாக்பூரைச் சேர்ந்த கோடீஸ்வரரான பாபு சாஹேப் பூட்டி தனது குடும்பத்துடன் ஷீரடியில் வசித்து வந்தார். அங்கு தனக்குச் சொந்தமான கட்டடம் ஒன்று வேண்டுமென்று அவர் மனதில் எண்ணம் ஒன்று எழுந்தது. ஷீரடியில் ஒரு வாதா (தங்குமிடம்) கட்டுவதற்காக காகா சாஹேப் தீக்ஷித், ஷாமா ஆகியோருடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினார்.
வேலை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, அங்கே ஒரு திறந்த வெளி முற்றம் அல்லது மேடை அமைத்து அதில் குழலூதும் கண்ணனான முரளிதரனின் உருவம் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்கிற எண்ணம் பூட்டியின் மனதில் உதித்தது. "கோவில் கட்டப்பட்டதும் நான் அங்கு தங்குவேன்! வாதா பூர்த்தியானதும் நாம் அதை உபயோகித்துக் கொள்ளலாம். நாம் அங்கு நடப்போம்; விளையாடுவோம், வாழ்வோம். பரஸ்பரம் ஆனந்தமாக இருப்போம்!" என்றார் பாபா. இந்த சமயத்தில் பாபா கடுமையாக நோய்வாய்ப்பட்டு உடல் நலம் குன்றிப் படுத்துக் கொண்டார்.
மஹான்கள் எப்போதுமே தாங்கள் சமாதியடையப்போகும் தருணத்தை பட்டவர்த்தனமாக அறிவிப்பதில்லை. ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவும் தான் சமாதியடையப்போவதைப் பற்றி அப்படித்தான் பூடகமாக ஒரு அறிவிப்பு செய்தார்.
1916 ஆம் ஆண்டு விஜயதசமியன்று மாலையில் பாபா திடீரென்று கடுங்கோபத்துடன் லங்கோடு, தலைப்பாகை, தான் அணியும் கஃப்னி என்னும் மேலாடை எல்லாவற்றையும் கழற்றி, கிழித்து நாள் முழுவதும் எறிந்து கொண்டிருக்கும் 'துனி' எனப்படும் அக்னியில் விட்டெறிந்தார். பாபா ஹிந்துவா, முஸ்லீமா என்று சதா சர்ச்சையிட்டுக் கொண்டிருந்த ஷீரடி மக்கள் முன் முழு நிர்வாணத்துடன் நின்று, "ஜனங்களே! இப்போது என்னை நன்றாகப் பார்த்து நான் முஸ்லீமா அல்லது ஹிந்துவா என்று தீர்மானித்துக்கொள்ளுங்கள்!" என்றார் உரத்தக் குரலில்.
உடனே பாபா, "இது என்னுடைய சீமொல்லங்கன்!" என்றார். சீமொல்லங்கன் என்றால் எல்லையைத் தாண்டுதல் என்று பெயர். அன்றே சூசகமாக, தான் விஜயதசமியன்று சமாதியடையப் போவதைப் பற்றி ஒரு குறிப்பு கொடுத்து விட்டார் பாபா.
அதன் பிறகும் ஒரு குறிப்பு கொடுத்தார் பாபா. ராமச்சந்திர பாட்டீல் என்கிற அடியவருக்கு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டது.
பாபா (Sai Baba) திடீரென்று அவர் முன் தோன்றி, "கவலைப்படாதே! உன் மரணஓலை வாபஸ் பெறப்பட்டு விட்டது. நீ பிழைத்துக் கொண்டாய்! ஆனால், தாத்யா பாட்டீலைப் பற்றித் தான் என் கவலையெல்லாம். ஏனென்றால் 1918 ஆம் ஆண்டு விஜயதசமியன்று அவனுடைய மரணம் உறுதியாகி விட்டது!" என்றார்.
ராமச்சந்திர பாட்டீல் விரைவில் குணமடைந்து விட்ட போதிலும் தாத்யா பாட்டீலை நினைத்து கவலையுற்றார். இந்த ரகசியத்தை பாலா ஷிம்பி என்கிற தையல்காரரிடம் மட்டும் பகிர்ந்து கொண்டார். பாபாவின் வார்த்தைகள் சத்தியமானவை என்பதால் இருவரும் தாத்யாவின் நிலையை நினைத்து பயந்து நடுங்கினார்கள். விஜயதசமி வரப் போகிறது. அதற்கு முன்பே தாத்யா காய்ச்சலில் படுத்த படுக்கையானார். அதே நேரத்தில் பாபாவும் காய்ச்சலில் விழுந்தார்.
தனது பூத உடலை துறப்பதற்கு முன் தமது கைகளை கஃப்னியின் பாக்கெட்டில் போட்டு ஒன்பது ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து பக்தை லட்சுமி பாயி ஷிண்டேவிற்கு தானமாகக் கொடுத்தார். பற்றற்ற மஹாபுருஷரான பாபா கடைசி தருணத்தில் பாசவலையில் சிக்கி விடாமலிருக்க எல்லா அடியவர்களையும் பகல் உணவுக்காகப் போகச் சொல்லி விட்டார்.
லட்சுமி பாயிக்கு ஒன்பது ரூபாய் கொடுத்த பின் பாபா (Sai Baba) "எனக்கு மசூதி சவுகரியமாக இல்லை, பாபு சாஹேப் பூட்டியின் வாதாவுக்கு என்னை எடுத்துச் செல்லுங்கள்! அங்கே நான் நலம் பெற்று விடுவேன்!" என்றார். இந்தக் கடைசி வார்த்தைகள் அவர் திருவாயிலிருந்து உதிர்ந்தவுடன் அவர் உயிர் பிரிந்தது. பாபா தரையில் விழவில்லை. தமது படுக்கையிலும் படுத்திருக்கவில்லை. அமைதியாக தமது இருக்கையில் அமர்ந்து கொண்டே பயாஜி கோதேயின் மடியில் படுத்திருந்தவாறே தர்மம் செய்துகொண்டே தமது பூதவுடலை நீத்தார். தாத்யா பிழைத்து விட்டார். பாபா சமாதியாகி விட்டார்.
ஒரு பரிவர்த்தனை நடந்ததாக ஜனங்கள் நம்பினார்கள். "தாத்யாவுக்காக பாபா தன் உயிரைக் கொடுத்து விட்டார்!" என்றார்கள். ஆனால் தாத்யாவின் பெயரைப் போட்டு பாபா தன் முடிவைப் பற்றி தான் குறிப்பு கொடுத்திருக்கிறார் என்பதை ஒருவரும் புரிந்து கொள்ளவில்லை.
107 ஆண்டுகளுக்கு முன்பு 1918 அக்டோபர் 15ஆம் நாள் விஜயசதமி தினத்தன்று மஹான் ஸ்ரீ ஷீரடி சாயிபாபா மஹாசமாதியடைந்தார்.
பாபாவின் திருமேனி ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு உரிய சம்பிரதாயங்களுடன் முரளிதரின் மூலஸ்தானத்திற்காக ஒதுக்கப்பட்ட வாதாவின் மத்திய பாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது. உண்மையில் பாபா முரளீதரர் ஆனார்.
உலகில் அதர்ம போக்கு அதிகரிக்கும்போது, அதர்மத்தை ஒழித்து தர்மத்தை நிலை நாட்டவே கடவுளின் அவதாரங்கள் நிகழ்கின்றன. மஹான்களும் மக்களுக்கு நன்மை செய்யவே தான் அவதரிக்கிறார்கள். அவர்கள் மக்களோடு மக்களாக கலந்து சாதாரணமாகப் பழகினாலும் தங்கள் அவதார நோக்கத்தைப் பற்றிய விழிப்புணர்வோடு தான் எப்போதும் இருக்கிறார்கள். அவதார புருஷர்கள் தாங்கள் இந்த உலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியபின் தாங்கள் வந்தது போலவே மிக அமைதியாகவும், எளிதாகவும் இயற்கை எய்துகிறார்கள்.