

இந்திய ஆன்மிக வரலாற்றில் மத வேற்றுமைகளைக் கடந்து அனைவரின் இதயத்திலும் இடம் பிடித்த மகான் சீரடி சாயி பாபா. "எல்லோரையும் நேசி... அனைவருக்கும் உதவி செய்ய " என்ற எளிய வாழ்க்கை முறையை மக்களுக்கு கற்றுத்தந்தவர். இன்று வரை கோடிக்கணக்கான பக்தர்களுக்கு நம்பிக்கையின் ஒளியாகவும், கருணையின் வடிவமாகவும் திகழ்கிறார்..
சீரடி சாயி பாபாவின் வாழ்க்கை முழுவதும் அன்பு,சேவை, சமத்துவம் ஆகிய உயரிய பண்புகளால் நிறைந்திருந்தது.. பசியோடு இருப்பவர்களுக்கு உணவளிப்பதை அவர் மிக உயர்ந்த தர்மமாகக் கருதினார். தாமே உணவு சமைத்து அனைவருக்கும் அன்போடு வழங்கிய நிகழ்வுகள் சாய்சத்சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளன.
" பசியுடன் இருக்கும் ஒருவருக்கு உணவளிப்பது இறைவனுக்கு நிவேதனம் செய்வதற்கு சமம்" என்ற எண்ணத்தை அவர் தனது வாழ்வால் எடுத்துக் காட்டினார். அன்னதானம் என்பது வெறும் உணவு வழங்குவது மட்டும் அல்ல. அன்பையும் கருணையையும் பகிர்வதாகும்.
சாய் சத் சரித்திரத்தில் வரும் ஒரு சம்பவம் ஆழ்ந்த சிந்தனையைத் தருகிறது. ஒரு பக்தர் பாபாவிடம் " வைக்கோல் தீயில் எரிவதுபோல் என் கர்ம வினைகள் அனைத்தும் அழிந்துபோக வேண்டும் என்று வேண்டினார். அதற்கு பாபா " உனக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் அப்படியே செய்வேன் ' என்று அருளினார்.
இந்த சம்பவம் இறைவன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் முழுமையான சரணாகதியும் இருந்தால் இறையருள் மனிதனை துன்பங்களில் இருந்தும் கர்மத்தின் சுமையில் இருந்தும் காப்பாற்றி உயர்த்தும் என்பதை உணர்த்துகிறது.
சாயிபாபா எப்போதும் ' ஸ்ரத்தா " ( நம்பிக்கை) மற்றும்"சபூரி " (பொறுமை) ஆகிய இரண்டு தத்துவங்களையே வலியுறுத்தினார். இந்த இரண்டு பண்புகளும் வாழ்க்கையை அமைதியாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற்றும் என்பதில் சந்தேகமில்லை.
சீரடியில் இருக்கும் சீரடி சாய்பாபா சமாதி மந்திரில் தினமும் நடைபெறும் நான்கு ஆரத்திகள் பக்தர்களின் மனதை ஆன்மிக உணர்வால் நிரப்புகின்றன.
அதிகாலையில் நடைபெறும் காகட் ஆரத்தி( kakad Aarti) புதிய நாளை இறை நினைவுடன் தொடங்குவதை குறிக்கிறது. நண்பகலில் நடைபெறும் மதிய ஆரத்தி (Madyan Aarti) பாபாவின் அருளுக்கு நன்றியை வெளிப்படுத்தும் வழிபாடாகக் கருதப்படுகிறது.
மாலை நேரத்தில் நடைபெறும் தூப் ஆரத்தி ( Dhoop Aarti) நாள் முழுவதும் கிடைத்த அருளுக்கு நன்றி செலுத்தும் தருணமாகும். இரவு நடைபெறும் ஷேஜ் ஆரத்தி( Shej Aarti) பாபாவை உறங்கச் செல்லும் முறைப்படி அன்போடு வணங்கும் வழிபாடாக நடைபெறுகிறது.
இந்த நான்கு ஆரத்திகளிலும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று இறை நாமம் பாடி மன அமைதியைப் பெறுகின்றனர். மேலும் சீரடியில் தினந்தோறும் நடைபெறும் அன்னதானச் சேவையில் ஏராளமானோர் பங்கேற்று பசியோடு வருபவர்களுக்கு உணவு வழங்குகின்றனர். "பசியால் வாடுபவர்களுக்கு உணவளிப்பதே உயர்ந்த வழிபாடு" என்ற சாயிபாபாவின் போதனை இன்றளவும் அங்கு செயல்பாட்டில் உள்ளது.
அன்பு , சமத்துவம்,சேவை இறைநம்பிக்கை ஆகியவற்றை வாழ்வியல் நெறியாகக்கொண்டு செயல்படும் சீரடி தலம் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களுக்கு ஆன்மிக நம்பிக்கையின் மையமாகத் திகழ்கிறது. சாயிபாபாவின் போதனைகள் காலம் கடந்தும் மனித குலத்திற்கு வழிகாட்டுகின்றன. அன்னதானம், அன்பு, நம்பிக்கை, பொறுமை, சேவை ஆகியவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்தால் மனித வாழ்க்கை நிறைவடையும்.
சாயிபாபாவின் திருவுருவத்தை தரிசிப்பதற்காக ஆண்டு தோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் சீரடிக்கு வருகை தருகின்றனர். அவர்களின் வாழ்க்கையில் நம்பிக்கையையும் மன அமைதியையும் சாயிபாபா தொடர்ந்து அருள்வதாக அவர்கள் உறுதியாக நம்புகின்றனர்.
சீரடி சாயிபாபாவின் உதி அல்லது விபூதி அவரது வாழ்விலும் போதனைகளிலும் மிகவும் முக்கியமான இடம் பெற்றுள்ளது. உதி என்றால் என்ன? சீரடி யில் உள்ள துவாரகாமாய் மசூதியில் சாயிபாபா எப்போதும் ஒரு புனித நெருப்பை ( துனி) எரிய வைத்திருந்தார். அந்த நெருப்பிலிருந்து கிடைக்கும் புனித சாம்பலே உதி என்று அழைக்கப்படுகிறது. பக்தர்களுக்கு இதை பிரசாதமாக வழங்குவது பாபாவின் வழக்கமாக இருந்தது.
உதியின் ஆன்மீக அர்த்தம்
மனித உடலும் உலகச் செல்வங்களும் நிலையற்றவை என்பதை உதி நினைவூட்டுகிறது. இறைவன் மீது நம்பிக்கையுடனும் பணிவுடனும் வாழவேண்டும் என்ற செய்தியை உணர்த்துகிறது. அகங்காரம்,பேராசை போன்றவற்றை எரித்து நல்ல எண்ணங்களுடன் வாழ வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பக்தர்களின் நம்பிக்கை
பல பக்தர்கள் உதியை நெற்றியில் இட்டுக் கொள்வார்கள் அல்லது சிறிதளவு உட்கொள்ளுவார்கள். இதனால் மன அமைதி, தைரியம், காரியத்தில் வெற்றி கிடைக்கும் என்று நம்புகின்றனர். சாயிபாபாவின் காலத்திலேயே உதி பெற்ற பலருக்கு உடல்நலக் குறைகள் மற்றும் துன்பங்கள் நீங்கியதாக பக்தர்களின் அனுபவக் குறிப்புகளில் இடம் பெறுகிறது.
சாயிபாபா உதியை வெறும் சாம்பலாக அல்ல இறை நம்பிக்கை மற்றும் பொறுமை ஆகிய இரண்டின் அடையாளமாகவே பக்தர்களுக்கு வழங்கினார். "இறைவன் மீது உறுதியான நம்பிக்கையுடன் பொறுமையாக இருங்கள். நல்லதே நடக்கும்" என்பதே பாபாவின் வாழ்க்கையின் மையச்செய்தியாகும்.
இக் கட்டுரையை வாசிப்பதின் மூலம் சீரடி சாயி பாபாவின் அன்பு,கருணை அன்னதானத்தின் மகத்துவம் நம்பிக்கை மற்றும் பொறுமையின் அவசியம் ஆகியவற்றை நாம் உணர்ந்து அவற்றை நம் அன்றாட வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும்.