

எந்த ஒரு காரியத்தையும் நல்ல நேரம் பார்த்து செய்வது பெரியோர்களின் வழக்கம். அந்த வகையில் ஹோரைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. ஹோரைகள் தரும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சூரிய ஹோரை: இந்த ஹோரையில் அரசு சம்பந்தப்பட்ட விஷயங்கள், வழக்கு தொடர்பான விஷயங்களை மேற்கொள்ள சிறப்பானதாக இருக்கும். மேலதிகாரிகள் மற்றும் பெருந்தலைவர்களை சந்திக்க இந்நேரம் நல்லது. இந்த நேரத்தில் புதிதாக எந்த அலுவல்களையோ, உடன்பாடுகளையோ செய்வது நல்லதல்ல. சுப கார்யங்கள் செய்யவும் இந்த ஹோரை ஏற்றதல்ல. இந்நேரத்தில் பொருள் காணாமல் போனால் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தாலும் அப்பொருளின் நினைவு மறைந்த பின் கிடைக்கும். இந்த நேரத்தில் உயில் சாசனம் எழுதலாம்.
சுக்கிர ஹோரை: சகல சுப காரியங்களுக்கும், வீடு, நிலம், வண்டி வாகனம், ஆடை ஆபரணம் வாங்கவும் ஏற்றது. குறிப்பாக, பெண்கள் தொடர்பான சகல கார்யங்களிலும் நன்மை ஏற்படும். விவசாயத்திற்கும், பயணம் செல்வதற்கும் நல்லது. இந்த ஹோரையில் காணாமல்போன பொருள் மேற்கு திசையில் சில நாட்களில் கிடைக்கும்.
புதன் ஹோரை: கல்வி மற்றும் எழுத்து தொடர்பான வேலை தொடங்குவதற்கும், ஆலோசிப்பதற்கும் ஏற்ற நேரம். சுப கார்யங்கள் செய்யலாம். நேர்மையான விஷயங்களைப் பற்றிப் பேச உகந்தது. இந்த ஹோரையில் காணாமல்போன பொருள் அதிக சிரமமின்றி கிடைத்துவிடும்.
சந்திர ஹோரை: வளர்பிறை காலத்தில் சந்திர ஹோரை நல்லதாகவே கருதப்படுகிறது. இந்த நேரத்தில் திருமணம், சீமந்தம் நடத்தலாம். புது வியாபாரம் தொடங்கலாம். தண்ணீர் மற்றும் பால் வியாபாரம் விருத்தியாகும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் இறங்கலாம். வங்கிக் கணக்கு தொடங்கலாம். கண் சம்பந்த மருத்துவரை சந்திக்கலாம். அபிஷேக ஆராதனைகள் செய்யலாம்.
செவ்வாய் ஹோரை: வீடு, தோட்டம், நிலம் போய் பார்க்கலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்து இடலாம். ரத்த தானம் செய்யலாம். சகோதர உதவிகளை நாடலாம். முருகன் தலங்களுக்கும் செல்லலாம். கடன் அடைக்கலாம். இந்த ஹோரையில் கடன் வசூலுக்குப் போகக் கூடாது. பெண் பார்க்கும் வைபவங்கள் தடுக்கப்பட வேண்டும்.
புதன் ஹோரை: கல்வி சம்பந்தமாக எல்லா விஷயங்களையும் செய்யலாம். ஜாதகம் பார்க்கலாம். கணக்கு வழக்கு பார்க்கலாம். மாமன் வகை உறவுகளை நாடி உதவி பெறலாம். கம்ப்யூட்டர் வாங்கலாம். கம்ப்யூட்டர் பயிற்சியில் சேரலாம். பெருமாள் தலங்களுக்கும் செல்லலாம். இந்த ஹோரையில் பெண் பார்க்கக் கூடாது. சொத்துக்களைப் பார்வையிடக் கூடாது.
குரு ஹோரை: சகல சுப காரியங்களுக்கும் ஏற்றது. பொன் நகைகள் வாங்கலாம். வங்கியில் டெபாசிட் செய்யலாம். முருகன் மற்றும் தட்சிணாமூர்த்தியை வணங்கலாம். பெண்கள் கணவரிடம் விரும்பியதைக் கேட்கலாம். யாகங்கள், ஹோமங்கள் செய்ய பொருட்களை வாங்கலாம். இந்த ஹோரையில் நீங்கள் முதலில் சந்திக்கும் ஒருவருக்கு விருந்து வைக்கக் கூடாது. புதுமண தம்பதிக்கு விருந்து உபசாரம் செய்யக் கூடாது.
சுக்கிர ஹோரை செய்யக் கூடியவை: பெண் பார்க்கும் சம்பிரதாயத்துக்கு மிக சிறப்பானது. காதலை வெளிப்படுத்தலாம். வெள்ளிப் பொருட்கள், ஆபரணங்கள் வாங்கலாம். கணவன், மனைவி மனம் விட்டுப் பேசலாம். பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவார். அம்பாள், ஆண்டாள் தலங்களுக்கும் சென்று வழிபடலாம். இந்த ஹோரையில் நகையை இரவல் கொடுக்கக் கூடாது. குடும்பப் பிரச்னை பேசக் கூடாது. துக்கம் விசாரிக்கக் கூடாது.
சனி ஹோரை: சொத்து சம்பந்தமாக பேசலாம். இரும்பு சாமான்கள், வண்டி வாங்கலாம். நவக்ரக பரிகார பூஜை செய்யலாம். மரக்கன்றுகள் நடலாம். ஆன்மிகத் தலங்களுக்கும் செல்லலாம். இந்த நேரத்தில் நோய்க்கு முதல் முதலாக மருந்து சாப்பிடக் கூடாது. மருத்துவரை சந்திக்கக் கூடாது. பிறந்த குழந்தையை முதல் முதலாக போய் பார்க்கக் கூடாது. துக்கம் விசாரிக்கக் கூடாது. பொதுவாக, சுக்கிரன், புதன் மற்றும் குரு ஹோரை நல்லதாகக் கருதப்படுகிறது.
ஹோரை என்பது சூரிய உதயத்தில் இருந்து கணக்கிடப்படுகிறது.