
நிறம் மாறும் அதிசய சிவலிங்கம்... வியக்க வைக்கும் மர்மங்கள்... தெரிஞ்சிக்கலாம் வாங்க.!
கருப்பான சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள்; பனியால் செய்த சிவலிங்கத்தைப் பார்த்திருப்பீர்கள்; ஆனால் கலர் மாறும் சிவலிங்கத்தைப் பார்த்திருக்கிறீர்களா?
அப்படி ஆச்சரியப்படுத்த போகும் நிறமாறும் சிவலிங்கத்தைப் பற்றித்தான் பார்க்க போகிறோம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள தோல்பூரில் அமைந்துள்ளது அச்சலேஸ்வர் கோவில். இந்தக் கோவிலானது சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலாகும்.
இங்கு மூலவரான சிவன், அச்சலேஸ்வர் மஹாதேவ் என்ற திருநாமத்தில் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சிவலிங்கத்தின் நிறம் ஒரு நாளைக்கு மூன்று முறை தானாகவே நிறம் மாறிக்கொள்ளும் பேரதிசயம் தினமும் நடந்து கொண்டு இருக்கிறது.
இது எப்படி நிகழ்கிறது என்பது இதுவரை யாரும் அறியாத ஒரு அதிசயமாகவே உள்ளது.
நிற மாற்றம்:
இந்த லிங்கமானது காலையில் செக்கச் சிவந்த நிறத்தில் காட்சியளிக்கிறது; மதிய நேரங்களில் காவி நிறத்தில் காட்சியளிக்கிறது; அடுத்து இரவு நேரங்களில் கருப்பாகக் காட்சியளிக்கிறது.
லிங்கம் திரும்பவும் காலையில் சிவப்பாக மாறிவிடுகிறது. இப்படிப் பிரம்மிக்க வைக்கும் சிவலிங்கத்தைப் பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.
இரவு முழுக்கக் கருப்பு நிறத்தில் இருக்கும் சிவன் பகல் நேரங்களில் பக்தர்களை முழுமையாக ஆசிர்வதிக்கிறார் என்பதற்கான குறியீடாகவே இந்த நிற மாற்றம் ஏற்படுகிறது என்று அங்குள்ள மக்கள் நம்புகின்றனர்.
இந்த ஆலயத்தில் ஏராளமான ரகசியங்கள் புதைந்திருக்கின்றன என்றும் கூறப்படுகிறது.
அதில் முக்கியமாகக் கருதப்படுவது இந்தச் சிவலிங்கத்தின் உயரம்தான். சிவலிங்கத்தின் அடிப்பாகம் ஆயிரம் அடிகளுக்கு மேல் தரைக்குக் கீழே புதைந்து இருப்பதாகவும், சிவபெருமான் அடிமுடி காண முடியாதவர் என்பதை உணர்த்தும் தலமாகவும் இது விளங்குகிறது.