
108 வைணவ ஸ்தலங்களில் ஒன்றான மதுரை கள்ளழகர் கோவிலின் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை திருவிழாவாக 10 நாட்களுக்கு கொண்டாடி வருகின்றனர் மதுரை மக்கள்.
அந்த வகையில் தென் மாவட்டங்களில் மிகப்பெரியதும், உலக அளவில் பிரபலமானதுமானதும்,'கோவில் மாநகர்' என்ற பெருமைக்கு உரிய மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இன்று அதிகாலை தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வந்த கள்ளழகரை தண்ணீரை பீய்ச்சி அடித்து வரவேற்ற பக்தர்கள், 'கோவிந்தா கோவிந்தா' என பக்தி முழக்கத்துடன் வழிபாடு செய்தனர்.
கள்ளழகர் பச்சை, சிவப்பு, வெள்ளை, மஞ்சள் ஆகிய நிறங்களில் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்குவது ஆண்டாண்டு காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியமாகும்.
அந்த வகையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது எந்த வண்ணப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. நாட்டில் நடக்கப்போகும் நிகழ்வுகளை தான் கட்டும் பட்டு மூலம் உணர்த்தி விடுவாராம் கள்ளழகர்.
விழாவில் அபிஷேகம் முடிந்ததும் அழகருக்கு சிறப்பு அலங்காரம் நடக்கும். அழகருக்கான ஆடைகள், அலங்காரப் பொருட்கள் அனைத்தும் ஒரு பெரிய மரப்பெட்டியில் இருக்கும். இந்தப் பெட்டிக்குள் சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள், ஊதா... என பல வண்ணங்களில் பட்டுகள் இருக்கும்.
கோவிலின் தலைமைப்பட்டர் அந்தப் பெட்டிக்குள் கைவிட்டு ஏதாவதொரு பட்டை எடுப்பார். அவர் கையில் எந்த வண்ண பட்டு சிக்குகிறதோ, அது அன்றைய தினம் கள்ளழகருக்கு அணிவிக்கப்படும். அழகர் எந்த வண்ணப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் நல்லது - கெட்டது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதாவது பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும். சிவப்புப் பட்டு கட்டிவந்தால் அந்த வருடம் போதிய விளைச்சல் இருக்காது. நாட்டில் அமைதியும் இருக்காது. பேரழிவு ஏற்படும். வெள்ளை மற்றும் ஊதாப்பட்டு கட்டி வந்தால் நாடு இடைப்பட்ட நிலையில் இருக்கும். மஞ்சள்பட்டு கட்டிவந்தால், அந்த வருடத்தில் மங்களகர நிகழ்வுகள் நடக்கும். இப்படி நம்பிக்கை இருப்பதால் ‘ஆற்றில் இறங்க வரும்போது அழகர் என்ன கலர் பட்டுடுத்தி வரப் போறாரோ?' என பக்தர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள்.