
பண்டைய காலம் தொட்டு தமிழர்களின் தலைமை தெய்வமாக முருகப்பெருமான் வணங்கப்பட்டு வருகிறார். இவரை அதிகம் வழிபடுபவர்கள் தமிழர்களே என்பதால் இவர் தமிழ்க் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார். 'முருகு' என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பது பொருளாகும். முருகன் வலிமை, தைரியம் மற்றும் ஞானத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். அனைத்து கடவுள்களுக்கும் தளபதியாகவும், போர்வீரர் கடவுள் என்றும் அழைக்கப்படுகிறார்.
சிவபெருமான் தன் நெற்றிக்கண் நெருப்பினை வெளியிட, அதைத் தாங்கிய வாயு பகவான் சரவணப்பொய்கை ஆற்றில் விட்டார். அந்த நெருப்புகள், ஆறு குழந்தைகளாக உருவெடுத்தன. அந்த ஆறு குழந்தைகளும் கார்த்திகைப் பெண்களிடம் வளர்ந்தனர். அன்னையான பார்வதி தேவியார் ஆறு குழந்தைகளையும் ஒருசேர அன்புடன் அணைக்கும் பொழுது, ஆறுமுகனாக முருகன் தோன்றினார் என்று இந்து சமய நூல்கள் கூறுகின்றன.
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம் போன்ற நாட்கள் முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் நாட்களாகும்.
அந்த வகையில் வைகாசி விசாகம் தமிழகத்தில் முருகப்பெருமானுக்காக கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். முருகன் விசாக நட்சத்திரத்தில் பௌர்ணமி திதியில் பிறந்தார். இது தமிழ் மாத நாட்காட்டியின் இரண்டாவது மாதமான வைகாசியில் (மே-ஜூன்) விசாக நட்சத்திரத்தை சந்திரன் கடக்கும் நாளில் விழுகிறது. விசாகம் (விசாகம்) என்பது இருபத்தேழு நட்சத்திரங்களில் 16வது நட்சத்திரமாகும். இந்துக் கடவுளான முருகனின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது.
அந்தவகையில் இந்தாண்டு வைகாசி விசாகம் அடுத்த மாதம் அதாவது ஜூன் 9-ம்தேதி கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகத்திற்கு விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபாடு செய்தால் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். அந்த வகையில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் 48, 21, 11, 6 நாட்கள் விரதம் அனுஷ்டிக்கலாம். 48 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 21 நாளும், 21 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 11 நாளும், 11 நாட்கள் விரதம் இருக்க முடியாதவர்கள் 6 நாளும் அல்லது வைகாசி விசாகம் அன்று மட்டும் விரதம் அனுஷ்டிக்கலாம்.
அதுமட்டுமின்றி முருகப்பெருமானின் அருள் முழுவதும் கிடைக்க இந்த வைகாசி விசாகம் விரதம் இருந்தாலே போதும். 21 நாட்கள் விரதத்தை மே மாதம் 20-ம்தேதியும், 11 நாட்கள் விரதத்தை மே 30-ம்தேதியும், 6 நாட்கள் விரதத்தை ஜூன் 4-ம்தேதி தொடங்கி வைகாசி விசாக நாளான ஜூன் 9-ம்தேதி வரை விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.
வைகாசி விசாகத்திற்கு விரதம் அனுஷ்டிப்பவர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டை சுத்தம் செய்த பின்னர் முருகப்பெருமானுக்கு பூக்களால் அலங்காரம் செய்து காலை, மாலை என இருவேளையில் விளக்கேற்ற வேண்டும். ஏதாவது ஒருவேளை நைவேத்தியம் வைத்து பூஜை செய்ய வேண்டும். பிரசாதமாக பால், பழம், கல்கண்டு, பாயாசம் என்று வைத்து வழிபாடு செய்யலாம். விரதம் அனுஷ்டிக்கும் நாட்களில் அசைவம், மது, போதைப்பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அதேபோல் யாரையும் தகாத சொற்களால் திட்டவோ, அடிக்கவோ, காயப்படுத்தவோ கூடாது என்பதை மறக்க வேண்டாம்.
குழந்தை பாக்கியம், தொழில் முன்னேற்றம், திருமண தடை, நல்ல திருமண வரன், ஆரோக்கியம், குடும்ப நலன் என அனைத்திற்கும் வேண்டி இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். அந்த விரதத்தை அனுஷ்டித்தால் நம் வேண்டுதல்கள் நிச்சயம் நிறைவேறும். மறக்காமல் விரதம் அனுஷ்டித்து முருகனின் அருளை பெறுங்கள்!