சந்திராஷ்டம பாதிப்பிலிருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்!

Chandrashtama Pariharam
Chandrashtamam
Published on

தினசரி நாள்காட்டியில் நாம் பார்க்கும் ஒரு வார்த்தை சந்திராஷ்டமம். ஒருவரது ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தை சந்திராஷ்டமம் என்கிறோம். சந்திராஷ்டமம் என்ற வார்த்தையை கேட்டவுடன் பெரும்பாலானவர்கள் பயப்படுகிறார்கள். ஆனால், உண்மையில் பயப்படவேண்டியதில்லை. விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் ஆகும். அந்த வகையில் சந்திராஷ்டமம் குறித்த விஷயங்கள் குறித்து இப்பதிவில் காண்போம்.

சந்திராஷ்டமம் = சந்திரன் + அஷ்டமம் ஆகும். 27 நட்சத்திரங்களைக் கடந்து சந்திரன் பயணிக்கும் சுழற்சியில் 25 நாட்களுக்கு ஒரு முறை ஏறக்குறைய 2.25 நாட்கள் (இரண்டேகால் நாட்கள்) உங்கள் நட்சத்திரத்திற்கு சந்திரன் எட்டாம் இடத்திற்கு பயணிக்கும்போது சந்திராஷ்டமம் வரும்.

இதையும் படியுங்கள்:
தலையெழுத்தை மாற்றும் ரகசிய ஸ்லோகம்: பிரம்மா எழுதியதை மாற்ற முடியுமா?
Chandrashtama Pariharam

சந்திரனை மனதிற்கு அதிபதி (மனோகாரகன்) என்று அழைப்பதால் நமது உடலுக்கும் மனதிற்கும் நெருக்கமான கோளாக இருக்கிறது. அதனால் எட்டாம் இடத்தில் சந்திரன் மறையும்போது மனநிலையில் சில குழப்பங்களும் தேவையற்ற கோபமும், படபடப்பும் சந்திராஷ்டமம் காலங்களில் ஏற்பட வாய்ப்புண்டு.

இதனாலேயே ஒரு முடிவை தெளிவான மனநிலையில் எடுக்க வேண்டும் என்பதால் முக்கிய ஒப்பந்தங்கள் அல்லது புதிய முயற்சிகளை சந்திராஷ்டமம் நேரத்தில் தவிர்க்க சொல்கிறார்கள்.

ரத்த ஓட்டத்திற்கும் சந்திரனுக்கும் தொடர்பு இருப்பதால் சந்திராஷ்டமம் காலங்களில் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதயம் தொடர்பான பாதிப்பு உள்ளவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். மேலும், முக்கிய நிகழ்வுகளை தவிர்ப்பதோடு, சுப முயற்சிகளையும் ஒத்திப்போடுவது நல்லது என்பது முன்னோர்களின் கூற்றாக உள்ளது.

ஒருவரது ராசிக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாட்களிலேயே திருமணம், காது குத்து, கிரகப்பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்துவது நல்லது. மேலும், அவசர சிகிச்சைகள் இல்லாமல் திட்டமிட்ட பெரிய அறுவை சிகிச்சைகளுக்கும் நோயாளிகளுக்கு சந்திராஷ்டமம் இல்லாத நாளை தேர்ந்தெடுப்பது நல்ல பலன் கொடுக்கும்.

இதையும் படியுங்கள்:
ஜாதகத்தில் நாக தோஷம் ஏற்படுவது ஏன்? அதன் பாதிப்புகளும் தீர்வு முறைகளும்...
Chandrashtama Pariharam

புதிய பொறுப்புகள், புதிய முதலீடுகள் போன்றவற்றை சந்திராஷ்டமம் இல்லாத நாட்களில் மேற்கொள்வது நல்லது. எந்த வேலையும் செய்யாமல் முடங்கி இருப்பதற்கான நாள் சந்திராஷ்டமம் அல்ல. பேசும் வார்த்தையிலும் செய்யும் செயலிலும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் யாரிடமும் ஈடுபடாமல் இருப்பதே சந்திராஷ்டமத்திற்கான சிறந்த பரிகாரம்.

சந்திராஷ்டமத்தின் தாக்கத்தை குறைத்து மனதை அமைதியாக சில எளிய வழிகள்:

குளிர்ச்சிக்கு உரியவர் சந்திரன் என்பதால் மனதை குளிரூட்ட பாலில் செய்த உணவுகள் அல்லது பாதாம் பால் அருந்துவது நல்ல பலன் கொடுக்கும். முதலிரவின்போது திருமணமான தம்பதிகளுக்கு பால் கொடுக்கும் வழக்கம் பதற்றத்தை குறைத்து நிதானத்தை தருவதற்காக கொண்டு வந்ததும் இதன்  காரணமாகத்தான்.

சூரியனை மேகம் மறைக்கும்பொழுது வெளிச்சம் குறைந்து காணப்படும். அதேபோல, சந்திரன் எட்டாம் இடத்தில் இருக்கும்போது நம் புத்தி சற்று தடுமாறலாம். அதற்காக மனதை கட்டுப்படுத்தவும், நிதானமாக இருக்கவும் தியானம் அல்லது நமக்குப் பிடித்த இஷ்டமான தெய்வத்தை வழிபடுவதால் இந்த இரண்டே கால் நாட்கள் நம்மை எந்த பாதிப்பும் அணுகாது.

சந்திராஷ்டமம் காலங்களில் மட்டுமல்ல, நம் வாழ்வில் அனைத்து நாட்களிலுமே பேச்சில் நிதானத்தையும், செயலில் முழு கவனத்தையும் செலுத்தினால் எந்நாளும் நமக்கு நன்னாளே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com