
அத்ரி மகரிஷியும் அவரது பத்தினியான அனுசுயாவும் ஒரு காட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது. அனுசுயா தமக்குக் குழந்தை பாக்கியம் இருந்தால் மும்மூர்த்திகளே தனக்கு குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என்று மும்மூர்த்திகளையும் வேண்டி நின்றாள்.
மும்மூர்த்திகள் மூவரும் தத்தம் பத்தினிகளிடம் ஆலோசனை கேட்க, மூவரும் ஒருமனதாக, ‘அனுசுயாவிற்கு ஒரு சோதனை வைக்க வேண்டும். அவள் அதில் வெற்றி பெற்றால் மட்டுமே மூவரும் அவளுக்குக் குழந்தைகளாக ஜனிக்கலாம்’ என்று கூறி விட்டார்கள்.
அதன்படி மும்மூர்த்திகளும் ரிஷி வடிவை எடுத்து, அதிதிகளாக, அத்ரி மகரிஷியின் குடிலின் வாயிலில் நின்று தங்களுக்கு உணவு அளிக்கும்படி கேட்டார்கள். கணவருக்கு பணிவிடைகள் செய்வதையே பெரும் பாக்கியமாகக் கருதி இருந்த அனுசுயா, எந்த விதத்திலும் குறை இல்லாமல் அதை செவ்வனே நிறைவேற்றி வந்தாள். பணிவிடை மட்டுமல்ல, அதிதிக்கு உணவு அளிப்பதிலும் மிகுந்த அக்கறை காட்டுபவள் அனுசுயா.
மும்மூர்த்திகளும் குடிலின் வாயில் வந்து அன்னம் இடும்படி கேட்டபொழுது, மிகவும் மகிழ்ந்த அவள், மூவரையும் உள்ளே வரும்படி அழைத்தாள். அன்னமிடத் தயாராக வந்தபொழுது அனுசுயாவிடம் அவர்கள் மூவரும், ‘தாங்கள் நிர்வாணமாக வந்து எங்களுக்கு அன்னமிட்டால் மட்டுமே அதை புசிப்போம்’ என்று பிடிவாதமாகக் கூறி விட்டார்கள்.
அதைக்கேட்ட அனுசுயா சிறிதும் தயங்கவில்லை. 'நான் என் கணவருக்கு செய்யும் பணிவிடைகள் சத்தியம் என்றால் இந்தத் துறவிகள் மூவரும் குழந்தைகளாக மாற வேண்டும்' என்று கூறி, கணவருக்கு பாத பூஜை செய்த தீர்த்தத்தை அவர்களின் மேல் தெளித்தாள். அடுத்த கணமே மும்மூர்த்திகளும் சிறு குழந்தைகளாக மாறினர். அதோடு, தனக்கு பால் சுரக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டாள். அதன்படி குழந்தை இல்லாத அனுசுயாவிற்கு தாய்ப்பால் சுரந்தது. நிர்வாண நிலையில் மூன்று குழந்தைகளையும் அள்ளி எடுத்து தாய்ப்பால் புகட்டினாள் அனுசுயா.
வெளியே சென்றிருந்த அத்ரி மகரிஷி, குடிலுக்குத் திரும்பினார். நடந்தவை அனைத்தையும் தனது ஞானதிருஷ்டியால் அறிந்து கொண்டார். அந்த மூன்று குழந்தைகளையும் ஒன்றுசேர அணைத்தார். அம்முவரும் ஒரு உடலையும் மூன்று தலைகளையும் கொண்டவர்களாக மாறினர். மூவரும் ஒருங்கிணைந்த அந்த தெய்வீக வடிவத்திற்கு ‘தத்தாத்ரேயர்’ என்று பெயரிட்டார்.
தங்கள் கணவன்மார்களுக்கு ஏற்பட்ட நிலையை மூன்று தேவியரும் அறிந்து கொண்டனர். பழைய வடிவில் அவர்களைத் திருப்பித் தரும்படி அனுசுயாவிடம் அவர்கள் வேண்டினர். அத்ரி மகரிஷியோ, ‘குழந்தை இல்லாத தங்களுக்கு தத்தாத்ரேயரே குழந்தையாக இருக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார். அதன்படி, ஒரு தலை, ஆறு கைகள், ஓர் உடல், இரண்டு கால்கள் என்கிற வடிவத்தில் தத்தாத்ரேயர் அவர்களுக்கு புத்திரனானார். முப்பெரும் தேவியரும் மும்மூர்த்திகளுடன் தத்தம் இருப்பிடம் ஏகினார்கள். பிரயாகையில் தத்தாத்ரேயருக்கு தனிக் கோயில் உள்ளது.
தினமும் பிரம்ம முகூர்த்த வேளையில் சொல்ல வேண்டிய தத்தாத்ரேயர் காயத்ரி:
’ஓம் திகம்பராய வித்மஹே
யோகாரூடாய தீமஹி
தந்நோ தத்தஹ ப்ரசோதயாத்’
தத்தாத்ரேயரை வணங்கினால் ஞானம், யோகம் அனைத்தும் கைகூடும் என்பதோடு, பித்ரு தோஷங்களும் விலகும் என நம்பப்படுகிறது. இவர் நித்திய சிரஞ்சீவியாக போற்றப்படுகிறார்.