
கோடைக்காலமான அக்னி நட்சத்திர நேரத்தில் சிவன் கோயில்களில் பெரும்பாலும் தாராபிஷேகம் நடைபெறும். தாராபிஷேகம் என்பது சிவலிங்கத்தின் மீது சொட்டு சொட்டாக விழும் மூலிகை நீராகும். இது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் முதன்மையாக வைக்கப்பட்டது. பிறகு அனைத்து சிவன் கோயில்களிலும் தாராபிஷேக பாத்திரங்கள் வைக்கப்பட்டு சிவபெருமானுக்கு தாராபிஷேகம் நடைபெறுகிறது.
அக்னி நட்சத்திர வெயிலில் இருந்து சிவபெருமானை குளிர்விக்க தாராபிஷேகம் செய்யப்படுகிறது. மூலவர் சிவலிங்கத்தின் தலைக்கு மேல் ஒரு தாரா பாத்திரம் அமைக்கப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரம் துவங்கும் நாளன்று சிவலிங்கத்தின் தலைக்கு மேல் தாரா பாத்திரம் வைத்து தண்ணீருடன் பன்னீர், வெட்டிவேர், பச்சை கற்பூரம், ஜவ்வாது, ஜாதிக்காய், ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை கலந்து சிவலிங்கத்திற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் தாரா பாத்திரம் அமைக்கப்படுகிறது.
அந்த மூலிகை நீர் சொட்டு சொட்டாக இறைவன் மீது விழுகிறது. திருவண்ணாமலை கோயிலில் சாயங்காலம் சாயரட்சை பூஜை நடைபெறும் வரை அண்ணாமலையார் மீது சொட்டு சொட்டாக தாரா பாத்திரத்திலிருந்து தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும். அந்த சமயத்தில் வாசனை திரவியங்கள் கலந்த தண்ணீரை அண்ணாமலையார் முழுமையாகப் பெற வேண்டும் என்பதற்காக பெரிய அளவில் அலங்காரம் செய்ய மாட்டார்கள். அண்ணாமலையாருக்கு வழக்கமாகச் சாத்தப்படும் கிரீடம், நாகாபரணம், கவசம் உள்ளிட்டவை தாராபிஷேகம் சமயத்தில் இடம்பெறாது.
அமிர்தம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தனர். அப்போது ஆலகால விஷம் தோன்றியது. இதனால் தேவர்களைக் காப்பாற்றுவதற்காக சிவபெருமான் அந்த ஆலகால விஷத்தை எடுத்துக் குடித்துவிட்டார். இதன் காரணமாக சிவபெருமானின் உடல் முழுவதும் வெப்பம் பரவியது. அவரது நெற்றிக்கண்ணும் வெப்பத்தால் தவித்தது. இதனால் சிவபெருமான் தலையில் கங்கையையும் சந்திரனையும் சூடினார்கள். அப்படி இருந்தும் சிவபெருமானின் உடல் வெப்பம் குறையவில்லை. இதனால் அவரது உடல் சூட்டைத் தணிக்க பல்வேறு அபிஷேகங்கள் செய்தனர்.
இடைவிடாது செய்யப்பட்ட அந்த அபிஷேகங்கள் காரணமாக சிவபெருமான் அபிஷேகப் பிரியராக மாறினார். சிவபெருமானுக்கு நாம் எந்த அளவுக்கு அபிஷேகம் செய்கிறோமோ அந்த அளவுக்கு அவர் உடலும் உள்ளமும் குளிர்ச்சியாகி மனம் மகிழ்ந்து நமக்கு நல்ல வரங்களைத் தந்தருள்வார்.
எனவே, அக்னி நட்சத்திர நாளில் சிவபெருமானை குளிர்ச்சிபடுத்தும் விதமாக அபிஷேகங்கள் செய்வார்கள். அதில் முக்கியமானது தாராபிஷேகமாகும். இந்த தாராபிஷேகத்திற்காக பெரும்பாலும் கூம்பு வடிவ செப்புப் பாத்திரத்தையே பயன்படுத்துவார்கள்.
அக்னி நட்சத்திர காலத்தில் பொதுவாக வெயில் அதிகமாக இருக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் அனைத்து சிவாலயங்களிலும் மூலவருக்கு தாரா அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம். இப்படி தாராபிஷேகம் வைக்கப்படுவதால் இறைவன் அருளால் வெயிலின் உக்கிரம் தணிந்து, மக்களுக்கு குளுமை ஏற்படும் வகையில் மேகங்கள் திரண்டு வந்து மழை பொழிந்து குளுமை ஏற்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.