
வீடுகளில் சமைக்கும் முறைக்கு என்று கிச்சனில் சில வாஸ்துக்கள் உண்டு. அதன்படி கிச்சனை அமைத்துக்கொண்டால் எளிமையாக சமைக்கலாம். மனதிற்கும் நிம்மதி கிடைக்கும். சரியாகச் செய்கிறோம் என்ற திருப்தியும் கிடைக்கும். அதற்கு எந்தெந்த ராசிக்காரர்கள் எப்படி சமைக்க வேண்டும். எந்தப் பக்கம் நிற்க வேண்டும் என்பதை இப்பதிவில் காண்போம்.
மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் கிழக்கு திசை பார்த்து சமைக்க வேண்டும். உங்கள் சமையலறையின் இடது பக்கம் தண்ணீர் பாத்திரங்களும் வலது பக்கம் உணவுப் பாத்திரங்களும் வைத்திருப்பது நலம் பயக்கும். இதனால் உங்களால் நன்கு சுறுசுறுப்பாக இயங்க முடியும்.
ரிஷபம்: ரிஷப ராசி பெண்மணிகளுக்கு வடகிழக்கு திசையில் சமையலறை இருக்க வேண்டும். அதற்கு இடது புறம் தண்ணீர் பாத்திரங்களும், வலதுபுறம் உணவுப் பொருட்களும் இருப்பது நன்று. இதனால் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை குறையும்.
மிதுனம்: மிதுன ராசி பெண்களுக்கு வடக்கு பக்கமே உகந்தது. அதற்கு இடது புறம் தண்ணீர் பாத்திரங்களும், வலது புறம் உணவுப் பொருட்களையும் மசாலா பொருட்களையும் வைத்திருப்பது நல்லது. இதனால் எதையும் நுணுக்கமாக ஆராயத் தூண்டும்.
கடகம்: உங்களுக்கு தெற்கு திசை பார்த்து சமைப்பதே மிகவும் சிறந்தது. வலது பக்கத்தில் தண்ணீர் பாத்திரங்களையும், இடது பக்கம் உணவு பதார்த்தங்களையும் வைத்துக்கொள்வது ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான தன்மையை கொடுக்கும்.
சிம்மம்: நீங்கள் சமையல் அறையை கிழக்கில் வைத்துக் கொள்வது நலம். அதற்கு வலது புறமாகவே உணவுப் பொருட்களையும், தண்ணீர் பாத்திரங்களை வைத்துக் கொண்டால் எதிலும் திட்டமிட்டு வெற்றி காண முடியும்.
கன்னி: உங்களின் ராசிக்கு மேற்கு பக்கமாக சமையலறையும், அதற்கு இடப்பக்கமாக உணவுப் பொருள் மற்றும் காய்கறிகளையும் வலது புறமாக தண்ணீர் பாத்திரத்தையும் வைத்துக் கொண்டால் சமையல் சிறப்பு பெறும். உங்கள் சாதுர்ய பேச்சால் எதிலும் வெற்றி காண்பீர்கள்.
துலாம்: வடமேற்கு திசையே உங்களுக்கு ஏற்றது. அதற்கு இடது பக்கம் தண்ணீர் குழாயும் வலது பக்கம் உணவுப் பொருட்களையும் வைத்தால் சமையலில் கெட்டி என்று பெயர் எடுப்பீர்கள்.
விருச்சிகம்: உங்களுக்கு தென்கிழக்கு திசையில் சமையலறையும் அதற்கு வலது புறமாக உணவு காய்கறிகளையும் இடது புறமாக தண்ணீர் பாத்திரங்களும் வைத்துக்கொண்டு சமைத்தால் உங்கள் சமையல் தனித்தன்மையோடு இருக்கும். இதனால் நல்ல பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு: கிழக்கு திசையில் உங்கள் சமையலறை இருப்பது மிக மிக நன்று. அதற்கு வலது புறம் தண்ணீர் பாத்திரங்களும், இடது புறம் உணவுப் பொருட்களும் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஆண்டவன் அருள் அதிகம் கிடைக்கும்.
மகரம்: நீங்கள் தென்கிழக்கு திசை நோக்கி சமைப்பதே நன்று. அதற்கு வலது பக்கம் உணவுப் பொருட்களையும் இடது பக்கம் தண்ணீர் பாத்திரங்களையும் வைத்துக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் நிறைய மேடு, பள்ளங்களைக் கண்ட நீங்கள் எதையும் உணர்ந்து புரிந்து சரியாகச் செய்வீர்கள்.
கும்பம்: நீங்கள் தென்கிழக்கு திசையில் சமையலறையை வைத்துக்கொண்டு அதற்கு இடது பக்கமாகவே தண்ணீர் பாத்திரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை, காய்கறிகளை வைத்துக்கொள்வது நலம் பயக்கும். அது உங்களை பொறுமை, புத்திசாலித்தனம், காரிய ஸித்தி கொண்ட பெண்மணியாக உயர வைக்கும்.
மீனம்: நீங்கள் தெற்கு திசை பார்த்து சமைப்பதே நல்லது. அதற்கு வலது பக்கத்திலேயே அனைத்துப் பொருட்கள் மற்றும் தண்ணீர் பாத்திரங்கள் வைத்துக் கொள்வது சமையல் கலையை மேலும் மெருகூட்டும் என்பதுடன், பிரதிபலன் எதிர்பாராது எப்பொழுதுமே கடமையைச் செய்ய உங்களை ஊக்குவிக்கும்.
மேற்சொன்ன அமைப்புப்படி நீங்கள் சமையல் வேலையை மேற்கொள்வீர்களேயானால், வீட்டில் நவதானியங்களும் காய்கறிகளும் கூட பஞ்சத்துக்கு இடமின்றி பல்கிப் பெருகும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.