

இராமாயணம் ஒரு புகழ் பெற்ற புராணம் மட்டுமல்ல, அது ஒரு முழுமையான வாழ்வியல் பாடமாகும். நாம் அதை போற்றிப் பாதுகாத்து, பின்தொடர வேண்டிய கருத்துக்கள் அதில் நிறைய உள்ளன. வாழ்வில் பல்வேறு சூழலில், மனதில் தோன்றும் பல்வேறு கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் அதில் இருக்கின்றன. இராமாயணத்தை தங்கள் வாழ்வியலுடன் தொடர்பு கொண்டு போற்றும் சில நாடுகள் பற்றி இப்பதிவில் காண்போம்.
இராமாயணத்தின் பிறப்பிடம் இந்தியா: இந்தியாவில்தான் இராமாயணத்தில் வரும் பெரும்பாலான மனிதர்கள் வாழ்ந்தனர். அயோத்தியில் தொடங்கும் இந்த புராணம், சித்திரகூடம், பிரயாகை, தண்டகாரண்யம், கிஷ்கிந்தா, பஞ்சவடி, ரிஷியமுக பர்வதம், சபரி மலை, ராமேஸ்வரம் வரை பயணித்து, ஏராளமான இந்தியப் பகுதிகளில் தனது தடத்தினை விட்டுச் சென்றுள்ளது. இராமாயணத்தில் சொல்லப்படும் நாடுகளும் இடங்களும் இன்று வரையிலும் இந்தியாவில் உள்ளன.
வட இந்தியாவின் ரகுவன்ஷிகள் மற்றும் சூரியவன்ஷிகள் தங்களை இராமரின் வம்சாவளிகள் என்று பெருமிதம் கொள்கின்றனர். சோழ மன்னர்களும் தங்களை சூரிய வம்சத்தில் இருந்து வந்தவர்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களும் சோழர்களின் முன்னோர்களும் இராமரின் முன்னோர்களும் ஒன்றுதான் என்று தெளிவுபடுத்தியுள்ளது. ராமர் மட்டுமல்ல, மத்தியப் பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட மக்கள், தங்களை இராவணனின் வம்சம் என்று கூறி, தசரா பண்டிகையின்போது ராவணனுக்கு திதி கொடுக்கின்றனர். அதுபோல ராஜஸ்தானில் உள்ள ஒரு பிரிவினர் தங்களை இராவணனின் மனைவி மண்டோதரியின் வம்சத்தினர் என்று கூறுகின்றனர்.
சீதையின் பிறந்த பூமி நேபாள்: ஶ்ரீராமரின் மனைவியான சீதையும், அவரது சகோதரியான ஊர்மிளையும், பிறந்து வளர்ந்த பூமிதான் நமது அண்டை நாடான நேபாள். சீதை வளர்ந்த நாடு, மிதிலா ராஜ்ஜியம் என்று புகழ் பெற்றது. இவர்கள் பேசிய மொழியான மைதிலி இன்றும் அங்கு புழக்கத்தில் உள்ளது. சீதைக்கு இதனால் மைதிலி என்ற பெயரும் உண்டு. மிதிலா ராஜ்ஜிய தலைநகர் ஜனக்பூர் சீதையின் தந்தை ஜனகர் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. நேபாளின் மருமகனாக ராமரும், மகளாக சீதையும் அங்குள்ள மக்களால் நேசிக்கப்படுகிறார்கள்.
இராவணன் வாழ்ந்த இலங்கை: இராமாயணம் கடல் எல்லையை கடந்து இலங்கையிலும் பயணம் செய்கிறது. இலங்கை அரசன் இராவணன், உத்தரப்பிரதேசத்தின் பிஸ்ரக்கில் பிறந்தாலும், பின்னர் செழிப்பு மிகுந்த இலங்கைக்குள் குடிபெயர்ந்தான். இங்கு இராமாயணத்துடன் தொடர்புடைய, சீதை சிறை வைக்கப்பட்ட சீதா எலியா, அசோக வாடிகா,டோலுகந்த மலை போன்ற இடங்கள் உள்ளன.
இராமாயணத்தை தங்களது வாழ்க்கையில் கலந்த தாய்லாந்து: தாய்லாந்து நாட்டு மக்கள், அந்த நாட்டு மன்னரை 'ராமா' என்று அழைக்கும் அளவிற்கு இராமாயணம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் பழைய தலைநகரம் அயோத்தியின் நினைவாக அயூத்தியா என்றழைக்கப்பட்டது. ராம்கீன் (தாய்லாந்து இராமாயணம்) தாய்லாந்தின் தேசிய காவியமாகவும், பள்ளிக்கூடங்களில் பாடங்களாகவும் உள்ளன. ஒருமுறை படையெடுப்பின்போது, அரண்மனையில் இருந்த ராம்கீன் காப்பியமும் அழிக்கப்பட்டது. அதன் பின்னர் தாய் மன்னர் முதலாம் இராமா மீண்டும் ராம்கீனை எழுதினார். அந்த நாட்டில் புத்தர் கோயில்களில் கூட இராமாயணக் கதை செதுக்கப்பட்டு இருக்கும். அந்த நாட்டு திருவிழாக்களில் ராம்கீன் நாடகம் கட்டாயம் இடம் பெறும்.
இராமாயணத்தை போற்றும் கம்போடியா: கெமர்கள்தான் இராமாயணத்தை தாய்லாந்து நாட்டிற்கு பரப்பினர். இங்கு ராம்கெர் (ராம் கீர்த்தி) என்றழைக்கப்படும் இராமாயணம் அந்த நாட்டின் தேசிய காப்பியமாக உள்ளது. கம்போடியா புத்த மத நாடாக இருந்தும், ராமரை தங்கள் கலாசாரத்திலும் வாழ்வியலிலும் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருவிழா காலங்களில் முதன்மையான நாடகமே இங்கு ராம்கெர்தான். ஆனால், இங்கு பல புதிய கதைகள் சொருகப்பட்டுள்ளன.
இந்தோனேஷியாவில் இராமாயணம்: கம்போடியா, தாய்லாந்து போலவே இங்கும் திருவிழா கால நாடகமாக இராமாயணம் உள்ளது. இஸ்லாமிய நாடாக இருக்கும் இந்தோனேஷியா இராமாயணத்தின் மதிப்பை போற்றுகிறது. இங்குள்ள இஸ்லாமிய மக்களின் பெயர்களில் கூட இராமாயண மாந்தர்களின் பெயர்கள் இருக்கும். ராமா, சூரியா, சீதா, ஆதித்யா, வாயு, இந்திரா, விஷ்ணு, தேவி போன்ற பெயர்களை மக்கள் இன்றும் சூட்டுகின்றனர்.