

கார்த்திகை மாதம் ஒளி நிறைந்த மாதமாகும். தமிழ் மாதங்களில் எட்டாவதாக வருகின்ற மாதம். நாம் எட்டவேண்டிய இலக்கு எது என்பதைக் காட்டும் மாதம். வழிகாட்டும் மாதமாக இருப்பதால்தான் விளக்கு ஏற்றிக் கொண்டாடுகின்றோம். விளக்கு தானே வழிகாட்டும். கார்த்திகை மாதத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வது சிறப்பான பலனை பெற்றுத் தரும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அக இருள், புற இருள் இரண்டையும் நீக்கி ஆன்மிக வழியைக் காட்டும் அற்புதமான இந்த கார்த்திகை மாதத்தின் மிகச் சிறப்பான பண்டிகை தான் கார்த்திகை தீபத்திருநாள்.
கார்த்திகை தீபம் என்பது இன்று நேற்று வந்த நூதனப் பண்டிகை அல்ல. மிகப்பழமையான பண்டிகை. கார்த்திகை விளக்கீடு என்பார்கள். கார்த்திகை தீப விழாவை பழந்தமிழர் சங்க காலம் தொட்டே வழிபட்டு வந்தனர். இவ்வுண்மையினை... ‘‘தொல் கார்த்திகை நாள்’’ என்னும் திருஞானசம்பந்தரது பாடல் கூறும். தமிழ் இலக்கியங்களில் கார்த்திகை தீப விழாவினைப் பற்றிய செய்திகள் காணப்படுகின்றன.
* கார்த்திகை மாதம் கருமையான மேகங்களைக் கொண்டு அதிகளவு மழைபொழியும் கார் காலம் ஆகும். காந்தள் பூக்கள் அதிகம் மலரும் மாதம். ஆதலால் இம்மாதம் கார்த்திகை எனப் பெயர் பெற்றது.
* கார்த்திகை மாதம் முழுவதும் பக்தர்கள் சுவாமி ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் அனுஷ்டிப்பார்கள்.
* இறைவனை தீப சொரூபத்தில் வழிபடும் மாதம் தான் இந்த கார்த்திகை மாதம். கார்த்திகை மாதத்தில் சிவபெருமானை வழிபாடு செய்வது மிக சிறந்த பலன்களை தரும் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
* திருமால், பிரம்மா உட்பட முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி அளித்த நாள் தான், திருக்கார்த்திகை என்று கருதப்படுகிறது. இது, கார்த்திகை மாதம் பவுர்ணமி மற்றும் கார்த்திகை நட்சத்திரம் ஒன்றுசேரும் நாளில் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு திருக்கார்த்திகை திருநாள் 3-12-2025 (புதன்கிழமை) அன்று வருகிறது.
* திருவண்ணாமலையில் மலை உச்சியில் திருக்கார்த்திகை அன்று கார்த்திகை மகாதீபம் ஏற்றப்படும். இதைக் காண வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொள்வார்கள். அங்கு மலை மேல் ஏற்றப்படும் தீபங்களின் எதிரொலி தான் மற்ற சிவன் கோயில்களிலும், இல்லங்களிலும் ஏற்றப்படும் தீபங்கள். எத்தனை சிவாலயங்கள் இருந்தாலும் பஞ்சபூதத் தலங்கள் முக்கியம்.
* திருக்கார்த்திகை மகாதீபத்திக்கு முந்தைய நாள், பரணி நட்சத்திர நாளில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. அன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபடுபவர்கள், தெரியாமல் செய்த பாவங்களில் இருந்து விடுபட்டு, எமபயம் நீங்கி நலமுடன் வாழ்வர் என்பது ஐதீகம்.
* கார்த்திகை மாதத்தைத் திருமண மாதம் என்று இந்து சாஸ்திரம் கூறுகிறது.
* கார்த்திகை மாதத்தில் சிவனுக்கு சங்காபிஷேகம் செய்வது பல கோவில்களில் மிகவும் பிரசித்தியாக நடைபெறும்.
* கார்த்திகை மாதத்தில் நாள்தோறும் சூரிய உதயத்தின் போது நீராடுபவர்கள், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய புண்ணிய பலனை அடைவார்கள்.
* கார்த்திகை மாதத்தில் விளக்கு தானம் செய்பவர்கள் பிரம்மஹத்தி முதலான கடுமையான தோஷங்களில் இருந்து விடுபடுவார்கள்.
* கார்த்திகை மாதம் முழுவதும் அசைவம் சாப்பிடாமல் பக்தி சிரத்தையுடன் விரதம் அனுஷ்டிப்பவர்கள் சகல பாவங்களிலிருந்தும் விடுபட்டு விஷ்ணு பாதத்தை அடைவார்கள்.
* கார்த்திகை மாதத்தில் பெருமாளை துளசி இலையால் அர்ச்சனை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதாவது பகவான் விஷ்ணுக்கு சமர்ப்பிக்கும் ஒவ்வொரு துளசி இலைகளுக்கும் ஒவ்வொரு அசுவமேதயாகம் செய்த பலனை அடைவார்கள் என்பது ஐதீகம்.
* கார்த்திகை மாதம் முழுவதும் வீடுகளில் தினமும் காலையிலும், மாலை வேளையிலும் நிலை வாசலுக்கு வெளியில் 2 அகல் விளக்கு ஏற்றி வைப்பது எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும். 6 மணிக்கு முன்பாக விளக்கை ஏற்றுவது சிறந்த பலனை தரும்.
* கார்த்திகை மாதம் தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்.
* கார்த்திகை மாதத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் உமா மகேஸ்வர விரதம் இருந்தால் தம்பதிகளுக்கும் ஒற்றுமை பலப்படும். பிரிந்த தம்பதியர் ஒன்றிணைவர். நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.
* கார்த்திகை மாதம் முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாகும். இந்த மாதம் முருகப்பெருமானுக்கு சந்தனம் அபிஷேகம் செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
* கார்த்திகை மாதத்தில் வரும் ஏகாதசி அன்று திருமணம் ஆகாத பெண்கள் துளசிச் செடியுடன், நெல்லி மரத்தின் ஒரு சிறிய கிளையை வைத்து பூஜை செய்து துளசி கல்யாணம் செய்து வழிபாடு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
* கார்த்திகை சோமவாரம் என்பது சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஆகும். அனைத்து திங்கட்கிழமைகளும் சிவபெருமானின் நாளாகக் கருதப்பட்டாலும், கார்த்திகை மாதத்தில் வரும் திங்கட்கிழமைகள் ஸ்கந்த புராணத்தின் படி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவ பக்தர்கள் இந்த நாட்களில் கார்த்திகை சோமவார விரதம் அனுசரித்து, பிரார்த்தனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது பாவங்களை விரட்டும்.
* கார்த்திகை மாதத்தில் வரும் பஞ்சமி தினத்தன்று நாகதோஷம் நிவர்த்தி செய்வதற்கு உகந்த நாள் என்பதால், இம்மாதத்தை தோஷங்கள் நீக்கும் மாதம் என்றும் என்பர்.
* கார்த்திகை தீப திருநாளன்று கிழக்கு நோக்கி தீபம் ஏற்றினால் கஷ்டங்கள் விலகும். மேற்கு திசை நோக்கி ஏற்றினால் கடன் தொல்லை நீங்கும்.
* கார்த்திகை மாதம் முழுவதும் பெருமாள் கோவிலுக்கு சென்று விஷ்ணுவின் சந்நிதிக்கு நேரே அமர்ந்து கொண்டு, சிரத்தையுடன், பகவத் கீதையின் விபூதி யோகம், பக்தி யோகம், விஸ்வரூப யோகம் ஆகியவற்றை பாராயணம் செய்தால், சகல பாவங்களும் நீங்குவதுடன் புண்ணியங்களும் நம்மை வந்து சேரும்.
நம் சிந்தையும், மனமும் தெளிவு பெற தீபம் ஏற்றி வழிபடுவதும், திருக்கார்த்திகையில் தீபம் ஏற்றி ஒளிமையாமான வாழ்க்கையைப் பெற்று வாழ்ந்திடுவோம்.