விநாயகர் பல தலங்களில் பலவிதமான தோற்றங்களில் அருள் பாலிக்கிறார். மதுரை சுந்தரேஸ்வரர் கோவிலில் புலிக் காலுடன் உள்ள விநாயகரும், நாகர்கோவில் வடிவீஸ்வரன் கோவிலில் வீணையேந்திய விநாயகரும், வாசுதேவநல்லூர் கோவிலில் வாள் மற்றும் கோடரியுடன் காட்சி தரும் விநாயகரும் காணப்படுகின்றனர்.
விநாயகருக்கு தேர் திருவிழா நடைபெறும் ஒரு சில இடங்களில் பிள்ளையார்பட்டியும் ஒன்று. இங்கு விநாயகருக்கும், சண்டிகேஸ்வரருக்குமாக இரண்டு தேர்கள் இழுக்கப்படும். உடுமலைப்பேட்டை பிரசன்ன விநாயகர் கோவிலில் வெள்ளித் தேரில் விநாயகர் ஊர்வலமாக வருவது சிறப்பு.
பிள்ளையார்பட்டி குடைவரைக் கோவில் கற்பக விநாயகர். 1600 ஆண்டுகள் பழமையான கோவில் இது. மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டது. இங்கு விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி அளவில் செய்யப்பட்ட ராட்சச கொழுக்கட்டை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
சக்கர வடிவில் ஊரைக் காக்கும் அரணாக மலை அமைந்திருப்பதால் சக்கரகிரி என்றும், அம்மலையில் உடும்புகள் நிறைந்து காணப்பட்டதால் உடும்பு மலை என்றும் அழைக்கப்பட்டு பின்பு உடுமலைப்பேட்டை என்றான இந்த ஊரில் உள்ள பிரசன்ன விநாயகர் 6 அடி உயரத்தில் ராஜ கம்பீர கோலத்தில் ஏகதள விமானத்தின் கீழ் வீற்றிருக்கிறார்.
வேலூர் சேண்பாக்கம் செல்வ விநாயகர் கோவிலில் விநாயகர் 11 சுயம்பு பூர்த்திகளாக (சிற்பியால் செதுக்கப்படாமல் தானாக தோன்றிய உருவம்) அருள் பாலிக்கிறார். இங்கு ஆதிசங்கரர் வந்து தரிசனம் செய்து சுயம்பு மூர்த்திகளுக்கு எதிரில் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை செய்துள்ளார்.
கோவை குனியமுத்தூரில் யோக நிஷ்டையில் அமர்ந்த கோலத்தில் விநாயகர் அருள் பாலிக்கிறார். யோகவளம், தியான சக்தி, ஆன்மீக அறிவு ஆகியவற்றை பெறுவதற்கு யோக நிஷ்டை விநாயகரை பிரதிஷ்டை செய்துள்ளனர். இளம் சூரியனின் நிறத்தோடு வலது முன் கையில் அட்சரமாலையும், பின் கையில் கரும்பும், இடது முன் கையில் யோக தண்டமும், பின் கையில் பாசக் கயிறும் ஏந்தி காணப்படுகிறார்.
மதுரையில் உள்ள மொட்டை விநாயகர் தலையில்லாமல் மொட்டை கணபதியாக அருபாளிக்கிறார். டாக்டர்கள் சிலர் ஆப்ரேஷன் செய்யும் முன்பு இவருக்கு தேங்காய் காணிக்கை செலுத்தி விட்டு செல்கின்றனர். புதிதாக ஏதேனும் செயலைத் தொடங்கும் முன்பு சீட்டு மூலம் உத்தரவு கேட்கும் முறையும் இங்குள்ளது. வியாபாரிகள் தினமும் கடையை திறக்கும் முன்பு சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்து விட்டு செல்கின்றனர்.
அகில இந்திய அளவில் விநாயகர் கோவிலின் விமானம் முழுவதும் தங்கத்தால் வேயப்பட்ட கோவில் இது. வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு விநாயகருக்கு பள்ளியறையும் உள்ளது. பள்ளியறைக்கு பாதம் மட்டுமே இருக்கும் உற்சவ விக்ரகம் கொண்டு செல்லப்படுகிறது. இத்தலத்தில் விநாயகருக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலத்தில் உள்ள ஆயிரத்தெண் விநாயகர் கோவிலில் தேர் திருவிழாவும் நடத்தப்படுகிறது. சோமார வல்லபன் என்ற மன்னன் நர்மதை நதிக்கரையிலிருந்து 1008 அந்தணர்களை வரவழைத்து பெரிய யாகம் நடத்த முடிவெடுத்தான். அதில் ஒருவர் மட்டும் குறைய அந்தணர் வடிவில் 1008 வது நபராக வந்து யாகத்தை பூர்த்தி செய்து கொடுத்தார் இந்த விநாயகர். இதன் காரணமாக இவருக்கு 'ஆயிரத்தெண் விநாயகர்' என பெயர் உண்டாயிற்று.
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தில் இருந்து பேரையூர் செல்லும் வழியில் உள்ள மாத்தங்கரை என்ற கிராமத்தில் எழுந்தருளிக்கும் விநாயகர் வித்தியாசமான தோற்றத்தில் காணப்படுகிறார். அனைத்து ஆலயங்களிலும் விநாயகப் பெருமான் அமர்ந்த கோலத்தில் காணப்படுபவர் இங்கு வலக்கரத்தில் கோடரியைத் தாங்கிய நிலையில் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். இது ஒரு அபூர்வ தோற்றமாக பக்தர்கள் கூறுகின்றனர். புத்திர பாக்கியம் வேண்டி இந்த விநாயகரை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.
மதுரை முக்குறுணி பிள்ளையார், பிள்ளையார்பட்டி பிள்ளையார் ஆகியோருக்கு பெரிய அளவிலான மோதகம் படைப்பார்கள். ஆனால், திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரத்தில் உள்ள உழக்கரிசி பிள்ளையாருக்கோ ஒரு உழக்கு அரிசியில் செய்த சிறிய மோதகம் படைக்கப்படுகிறது.