
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் வேணுகோபால சுவாமி கோயில் உள்ளது. இக்கோவிலில் உள்ள துவஜஸ்தம்பம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய துர்ஜஸ்தம்பங்களில் ஒன்றாகும். ஒரே கல்லால் ஆன இந்த துவஜஸ்தம்பத்தின் உயரம் தரைக்கு மேல் 80 அடியும், பூமிக்கு அடியில் 40 அடி உள்ளதாக அமைந்திருக்கிறது. இதன் ஒரு பகுதியில் ஆறடி உயரத்தில் ஆஞ்சநேயர் கம்பீரமாக, நின்ற கோலத்தில் காட்சி அளக்கிறார்.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளி பெருமாள் கோவிலில், வைணவர்கள் பெரிய கார்த்திகை அன்று பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள். இங்கு பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம்.
திருநெல்வேலியில் உள்ள கரியமாணிக்கம் பெருமாள் கோவிலில் பெருமாள் நின்றான், கிடந்தான், இருந்தான் என மூன்று நிலைகளில் காட்சிதருகிறார். அதாவது நின்ற கோரத்திலும், சயனக் கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் காட்சி தருகிறார்.
ஸ்ரீவாஞ்சியம் கோவிலில் எமதர்ம ராஜா இருப்பதால், இந்தக் கோயிலுக்கு மரணத் தீட்டு தோஷம் இல்லை. இங்குள்ள புஷ்கரணியில் கங்கை கலந்து இருப்பதாக ஐதீகம். எனவே இங்கு நீராடினால் அனைத்து பாவங்களிலிருந்தும் நிவர்த்தி பெறலாம். இதற்கு குப்த கங்கை என்று பெயர்.
காஞ்சி கையிலாயநாதர் ஆலய கருவறையைச் சுற்றி, மார்பாலேயே ஊர்ந்து செல்லும்படியாக ஒரு பிரகாரம் அமைந்துள்ளது. இதனை அவ்விதம் வலம் வருபவர்களுக்கு மறு பிறவி கிடையாது என்பது ஐதீகம். இதனை 'சொர்க்கப் பிரதட்சணம்' என்று கூறுவர்.
கடலூர் அருகே உள்ள திருவஹீந்திபுரத்தில் உள்ள தேவநாதப் பெருமாள் கோவிலில் உள்ள உற்சவமூர்த்தி, மும்மூர்த்திகளும் இணைந்தவராகக் காணப்படுகிறார். இவரது வலது கரத்தில் பிரம்மதேவரின் தாமரைப் பூவும், நெற்றியில் சிவபெருமானின் நெற்றிக்கண்ணும், சிரசில் ஜடையும், இரண்டு கரங்களில் சங்கு, சக்கரமும் இருக்கின்றன.
கோவை மாவட்டம் கள நாயக்கன்பட்டி மலையாண்டி சுவாமி கோவிலில் உள்ள கருவறையில் மும்மூர்த்திகளும் மூலவர்களாக உள்ளனர். சிவபெருமான் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையிலும், சிவனுக்கு இடதுபுறம் திருமாலும், வலது புறம் பிரம்மாவும் காட்சி தருகின்றனர். இங்கு பிரம்மனுக்கு ஒரு தலையும், நான்கு கைகளும் இருக்கின்றன.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாரையூர் தலத்தில், நவக்கிரக நாயகரான சனி பகவான், தன் குடும்ப சகிதமாக அருள் பாலிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இங்குள்ள ராமநாதசுவாமி கோவிலில், கருவறைக்கு எதிரில், தனி சந்நிதியில் ஸ்ரீ சனீஸ்வரர் தன் இரு மனைவியரான, மந்தாதேவி, ஜேஷ்டாதேவி ஆகியோருடனும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களுடனும் குடும்ப சமேதரராக அருள் பாலித்துக் கொண்டிருக்கிறார்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில், குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது, குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில் இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள்.
வைத்தீஸ்வரன் கோவிலில் ஸ்தலவிருட்சம் வேப்பமரம். இந்த மரம் கிருதயுகத்தில் கடம்ப மரமாகவும், திரேதா யுகத்தில் வில்வ மரமாகவும், துவாபர யுகத்தில் வகுள மரமாகவும், இந்தக் கலியுகத்தில் வேப்ப மரமாகவும் இருப்பதாக ஐதீகம்.
கும்பகோணம் திருநாகேஸ்வரம் அருகே உள்ள தேப்பெருமாநல்லூரில் உள்ள ஸ்ரீ வேதாந்த நாயகி சமேத விஸ்வநாத சுவாமி கோவிலில், அன்னதான தட்சிணாமூர்த்தி சந்நிதியில், பழைய சோறு படைக்கப்பட்டு அதுவே பிரசாதமாக அளிக்கப்படுகிறது. இங்கிருக்கும் ஈசனுக்கு ருத்திராட்சம் படைக்கப்பட்டு அதுவே பக்தர்களுக்குப் பிரசாதமாக அளிக்கப் படுகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில், பார்வதி மலையில் சிவன், விஷ்ணுவோடு முருகனுக்கும் தனி கோவில் உள்ளது. கார்த்திக் என்ற பெயரில் எழுந்ததருளியுள்ள முருகன், பிரம்மச்சாரி என்பதால் பெண்கள் அவரைப் பார்க்கவோ வணங்கவோ அனுமதி இல்லை.