

ஒருவர் ஜாதகத்தில் சுக்கிர பகவான் பலவீனமாக இருந்தால் அவரது வாழ்வில் ஏக்கங்கள் மற்றும் ஏமாற்றங்களை அந்த ஜாதகரை சந்திக்க வைப்பார் சுக்கிரன். சுக்கிர பகவான் ஒருவரது வாழ்வில் பலவீனமாக இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளை இனி காண்போம்.
சுக்கிர பகவான் ஒருவரது வாழ்வில் பலம் குறைந்து இருந்தால் அவரது முகப் பொலிவு குறைந்து கொண்டே வரும். அவருக்கு கண்கள் சார்ந்த பாதிப்புகள் ஏற்படும். எதிர்பாலினரிடத்தில் இயல்பாகப் பேச பிரச்னைகள் ஏற்படும். அதோடு, எதிர்பாலினரால் அதிக விமர்சனங்களுக்கு உள்ளாக நேரிடும்.
சுக்கிர பகவான் பலம் குறைந்து காணப்படுபவர்களிடம் வாகனங்களை இயக்குவதில் நேர்த்தி புரியாது இருக்க நேரிடும். அதேபோல், வீட்டுக்கு சொகுசு பொருட்கள் வாங்குவதில் விருப்பமில்லாது இருக்கலாம். திருமணத்தில் விருப்பமின்மையும் உண்டாகலாம்.
பெண்களுக்கு சுக்கிர பலம் குறைந்திருந்தால் அவர்கள் பருவமடைதலில் தாமதம் ஏற்படும். ஆடல், பாடல், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வமின்மை ஏற்படலாம். அதேபோல், உடை அணிவதில் ரசனையின்மையும் ஏற்படும்.
ஒருவரின் வாழ்வில் சுக்கிர பலம் குன்றி இருப்பவர்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இனி காண்போம்.
சுக்கிர பகவானுக்கு உகந்த பொருட்களான பாதாம் பருப்பு, வெண் மொச்சை, சூர்ய காந்தி விதை, அத்திப்பழம், பசும்பால், தேங்காய் பால் ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அதோடு, தேவையான அளவு வாசனை திரவியங்களைப் பயன்படுத்துவதோடு, திருமணம் ஆகாத பெண்களுக்கு அந்தப் பொருட்கள் தந்தும் உதவலாம். மேலும், சந்தனம், அரிசி, வஸ்திரம், பூக்கள், நெய், இனிப்பு, தயிர் போன்றவற்றையும் பெண்களுக்குத் தந்து உதவலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுக்கிர ஹோரை நேரத்தில் மகாலட்சுமியை வழிபடலாம். தினமும் குளிப்பதற்கு முன் ஏலக்காய் தட்டிப் போட்டு அந்த நீரில் குளிப்பது நல்லது. தினமும் குளிப்பதற்கு முன் சுக்கிர காயத்ரி மந்திரம் சொல்வதையும் வழக்கமாக்கிக் கொள்ளலாம்.
தினமும் உறங்கி எழுந்த பிறகு படுத்த படுக்கை, விரிப்பு, போர்வை போன்றவற்றை நன்கு மடித்து வைக்க வேண்டும். அவ்வப்போது வெண்ணிற ஆடை அணிவதில் கவனம் செலுத்துவது நல்லது. அதேபோல், வெள்ளியால் செய்த அரைஞாண் கயிற்றை அணிந்து கொள்வதும் நல்லது.
முக்கியமாக, சுக்கிர தலமான திருவெள்ளியங்குடி, திருநாவலூர் போன்ற ஆலயங்களுக்கு பிறந்த நட்சத்திர நாளன்று சென்று வழிபடுவதும் நல்லது. அவ்வப்போது மீன்கள் மற்றும் குதிரைகளுக்கு உணவளிப்பது சிறப்பு. வெள்ளிக்கிழமை தினங்களில் மகாலட்சுமிக்கு செய்யப்படும் பூஜையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கு வெண் மொச்சை அல்லது இனிப்பு வழங்குவதால் சுக்கிர பகவானால் உண்டாகும் பிரச்னைகளுக்கு நல்ல பலன்கள் உண்டாகும்.