
பகவான் மகாவிஷ்ணு, ஸ்ரீ கிருஷ்ணராக அவதரித்த நாளை அனைவரும் கோகுலாஷ்டமி எனக் கொண்டாடி மகிழ்வது வழக்கம். அதேபோல், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்த நட்சத்திர தினத்தை, ‘பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி’ என்று கொண்டாடுவது வட இந்தியா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளது.
ஆடி மாத அமாவாசைக்கு பிறகு வரும் பௌர்ணமியை அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமி திதியின் நள்ளிரவில் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார் என்பதால் இந்நாளை கோகுலாஷ்டமியாகக் கொண்டாடி வழிபட்டு மகிழ்கிறோம். அதேசமயம், ஸ்ரீ கிருஷ்ணர் பிறந்தது ரோஹிணி நடத்சத்திரம். ஆவணி மாதம், அதாவது சிம்மத்தில் சூரியன் இருக்கும்போது அஷ்டமி திதியும் ரோஹிணி நட்சத்திரமும் கூடிய நாள் என்பதால் இந்நாளை பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தியாகக் கொண்டாடுகிறார்கள். சந்திர நாட்காட்டியின்படி இந்த தேதி மாறுபடும். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தை ஒவ்வொரு வருடமும் இப்படித்தான் பக்தர்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.
இந்த ஆண்டு நாளைய தினம் (15.09.2025) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி தினமாகும். ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் கொண்டாடப்படும் ஸ்ரீ கிருஷ்ண ஜயந்தியே, பாஞ்சராத்தர ஸ்ரீ ஜயந்தி என்றும், அன்றைய தினம் சூரிய உதயத்தில் சப்தமியோ, கிருத்திகையே ஒரு வினாடிகூட இல்லாமல் இருக்க வேண்டும். அப்படி இருந்துவிட்டால் மறு நாள்தான் இந்த ஸ்ரீ ஜயந்தி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது.
மேலும், ஆவணி மாதம் நள்ளிரவில் ரோஹிணி நட்சத்திரம் உள்ள நாள் வைகானஸ ஸ்ரீ ஜயந்தியாகக் கொண்டாடப்படுகிறது. பல விதங்களில், தீமையை நன்மை வென்றதைக் குறிக்கும் மகாவிஷ்ணுவின் பிரியமான அவதாரமாகப் போற்றப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதார நாளில் விரதங்கள் அனுசரிக்கப்படுவதாக வைணவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி, வைணவ மதத்தின் மையமான பண்டைய வேதங்களான பாஞ்சராத்ர ஆகமங்களில் வேரூன்றியுள்ளது. இந்த அனுசரிப்பு மகாவிஷ்ணு வழிபாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படும் பக்தியை வலியுறுத்துகிறது. கோயில் விழாக்கள் மற்றும் தனிப்பட்ட வழிபாட்டிற்கு பாஞ்சராத்ர நூல்களால் வழிநடத்தப்படும் சடங்குகள், பிரார்த்தனைகள் மூலம் இந்த விழாவைக் கொண்டாடுகின்றனர்.
வைணவ ஆகமங்களில் பாஞ்சராத்ரம், வைகானஸம் என்ற இரு ஆகமங்கள் இருப்பதாகவும் பாஞ்சராத்ர ஆகமம் என்பது பத்ரிகாஸ்ரமத்தில் மகாவிஷ்ணு தானே மனிதனுமாகி, அந்த மனிதனுக்கு அவர் ஐந்து ராத்திரிகளில் உபதேசித்த பூஜா முறையே பாஞ்சராத்ரம் எனப்படுகிறது. அதேபோல், மகாவிஷ்ணு, வைகானஸ முனிவராக வந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்த முறையே வைகானஸ ஆகமம் என்றும் அழைக்கப்படுகிறது.
ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினத்தைக் கொண்டாடும் வைணவ திருநாளான ஸ்ரீ பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி, பாஞ்சராத்ர ஆகம மரபைப் பின்பற்றுகிறது. இந்த நாளை வைணவ கிருஷ்ண ஜயந்தி என்றும் அழைக்கிறார்கள். குறிப்பாக, பாஞ்சராத்ர ஸ்ரீ ஜயந்தி மற்றும் ஸ்ரீ ஜெயந்தி ஆகியவை மகாவிஷ்ணுவின் தெய்வீக அவதாரங்களை மதிக்கும் விதமாக பக்தர்களால் உற்சாகத்துடனும் பக்தியுடனும் கொண்டாடப்படும் குறிப்பிடத்தக்க இந்து பண்டிகைகளாக உள்ளது.
இந்த சிறப்பு நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி, ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும். துதிகளால் கண்ணனைப் போற்றிப் பாட வேண்டும். ஸ்ரீ கிருஷ்ணர் தங்கள் வீடுகளிலும் வாழ்க்கையிலும் நுழைவதைக் குறிக்கும் வகையில் தூய்மை செய்த பூஜை அறையின் நுழைவாயிலிலிருந்து சிறிய கால் தடங்களை வரைதல் சிறப்பு. சிறிய விரதமிருந்து ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடுவது நல்ல பலன்களையும் தரும். இன்று ஸ்ரீ கிருஷ்ணருக்குப் பிடித்த பால், தயிர், வெண்ணெய், நெய் போன்ற பொருட்களுடன் பலகாரங்கள் செய்து படைப்பது சிறப்பு.
சிறப்புப் பிரார்த்தனைகளுடன் குடும்பங்கள் கூடும் மாலை நேரம் மற்றும் உண்ணாவிரதத்துடன் இந்த ஜயந்தி நள்ளிரவு கொண்டாட்டத்தில் உச்சத்தை அடைகிறது. பன்னிரண்டு மணி அடிக்கும் நேரத்தில், பக்தர்கள் பக்திப் பாடல்களைப் பாடி, நடனமாடி ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை நடித்து மகிழ்கின்றனர். இந்த விரதத்தை முடிக்க பாரம்பரிய உணவுகள், குறிப்பாக வெண்ணெய் மற்றும் இனிப்புகள் அவசியமாக படையலில் படைத்து ஸ்ரீ கிருஷ்ணர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துகின்றனர். நாமும் ஸ்ரீ பாஞ்சராத்தர ஸ்ரீ ஜயந்தியன்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு வாழ்வில் நன்மைகள் பெறுவோம்.