
1. கோ பூஜை செய்ய வசதியோ, வாய்ப்போ இல்லாதவர்கள் என்ன செய்யலாம்?
* இதற்காக மனம் வருந்தத் தேவையில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் பசுவிற்கு அகத்திக்கீரை, அருகம்புல் மற்றும் வாழைப்பழம் போன்றவற்றை கொடுத்தாலே கோ பூஜை செய்த பலனைப்பெறலாம்.
2. அரச மரத்தை சுற்றுவதற்கு நேரம், காலம் உண்டா?
* நிச்சயம் உண்டு. சூரியன் மறைவதற்குள் சுற்றி விடுவது நல்லது.
3. விளக்கேற்றும் பொழுது பின் வாசல் வழியை ஏன் மூட வேண்டும்?
* விளக்கேற்றியதும் நம் வீட்டிற்கு மகாலட்சுமி வருகை தருவதாக ஐதீகம். அவளின் அருளைப் பெற பின் வாசல் வழியை மூடி வைப்பதுதான் நல்லது.
4. சிறு வயதில் பெண் பிள்ளைக்கு மொட்டை போடுவதாக நேர்ந்திருப்போம். ஏதோ காரணத்தால் அது தள்ளிப்போய்விட்டால் பருவ வயதில் மொட்டை போடலாமா?
* கட்டாயமில்லை. கூந்தல் நுனியில் சிறிது பூவை முடிந்து, அந்தப் பகுதியை மட்டும் கத்தரித்து நேர்த்திக்கடனாக செலுத்தி விட்டடாலே போதும்.
5. சுவாமிக்கு நேர்த்திக்கடனை எவ்வளவு காலத்திற்குள் செலுத்த வேண்டும் என்ற வரைமுறை ஏதும் உள்ளதா?
* தெய்வக்கடன் நூற்றாண்டு என்பார்கள். அவரவர் வசதிக்கேற்ப அதை செலுத்தலாம்.
6. கிரகணத்தின்பொழுது வீட்டை விட்டு யார் யார் வெளியே வரக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளதா?
* கர்ப்பிணிகள் வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்ப்பது நல்லது.
7. யாருக்கு சதாபிஷேகம் நடத்தலாம்?
* ஆயிரம் பிறை கண்ட 80 வயது பூர்த்தி ஆனவர்களுக்கு சதாபிஷேகம் நடத்தலாம்.
8. பூர்ணாபிஷேகம் என்பது என்ன?
* நூறு வயது பூர்த்தி அடைந்தவர்கள், தங்கள் வாழ்க்கையின் நிறைவைக் கொண்டாடும் நிகழ்வை பூர்ணாபிஷேகம் என்பர்.
9. உக்கிர ரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி, பீமரத சாந்தி, கனகாபிஷேகம், பூர்ணாபிஷேகம் இதற்கெல்லாம் விளக்கம் தர இயலுமா?
* அறுபது வயது தொடங்குபவர்கள் உக்கிர ரத சாந்தி செய்து கொள்வதும், அறுபது வயது பூர்த்தி அடைந்தவர்கள் சஷ்டியப்த பூர்த்தி செய்து கொள்வதும், 70 வயதில் பீமரத சாந்தியும், 80 வயதில் சதாபிஷேகமும், 90 வயதில் கனகாபிஷேகம் மற்றும் 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூர்ணாபிஷேகமும் செய்து கொள்வது வழக்கம்.
10. பூஜை புனஸ்காரம் செய்யப்படுவதன் நோக்கம் என்ன?
* தெய்வங்களை வழிபட்டு அவர்களுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதற்காகவும், குடும்பத்தில் உள்ள அனைவரும் நலமுடன் வாழ்வதற்காகவும் பூஜை புனஸ்காரங்கள் செய்யப்படுகின்றன.
11. புனஸ்காரம் என்பதன் பொருளைக் கூற முடியுமா?
* புனஸ்காரம் என்றால் வணக்கம், வரவேற்பு என்று பொருள்படும். ஒருவருடைய வருகையை அல்லது ஒரு நிகழ்வை வரவேற்பதற்கான சொல் இது.
12. கோயிலுக்குச் செல்லும்பொழுது எப்படிச் செல்ல வேண்டும்?
* அவரவர் கலாசாரப்படி புடைவை, வேஷ்டி என அணிந்து செல்வது நல்லது.
13. கோயில்கள் மற்றும் துறவிகளின் சன்னிதிக்கு செல்லும்பொழுது என்ன கொண்டு செல்ல வேண்டும்?
* பூ, பழத்துடன் செல்லலாம். கல்கண்டு, உலர் திராட்சை போன்றவற்றையும் கொண்டு செல்லலாம்.
14. வீட்டில் ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கும்பொழுது விளக்கேற்றலாமா?
* காலை மற்றும் சந்தியா கால நேரங்களில் வீட்டில் தூங்கக் கூடாது. குறிப்பாக, விளக்கேற்றும் நேரத்தில் தூங்கக் கூடாது.