எந்த நாளில் பைரவ விரதம் இருந்தால் என்ன பலன் கிடைக்கும் தெரியுமா?

Sri Bhairavar
Sri Bhairavar
Published on

ந்து சமயத்தில் பைரவர் வழிபாடு என்பது முக்கியமானது. சூரபத்மனை வதைப்பதற்காக சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றியவர் முருகன். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவனின் தத்புருஷ முகத்திலிருந்து ஜோதியாக வெளிப்பட்டவர் பைரவர். காவல் தெய்வமான இவரும் சிவனைப் போல் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் செய்து வருகிறார்.

திரிசூலபாணியான இவர், நீல நிற மேனியுடன் நிர்வாண கோலத்தில் நாய் வாகனத்துடன் காட்சி தருகிறார். சிவாலயங்களில் வடகிழக்கு திசையில் இவருக்கு தனிச் சன்னிதி உள்ளது. காலையில் ஆலயம் திறந்தவுடனும் இரவு அர்த்த ஜாம பூஜை முடியும்போதும் இவருக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். பைரவர் என்றால் பயத்தை நீக்குபவர், தன்னை நாடி வரும் பக்தர்களின் பாவங்களைப் போக்குபவர் என்று பொருள்.

தினமும் வேதனையை அனுபவிப்பவர்கள், தாங்க முடியாத அளவிற்கு எதிரிகளால் துன்பம் அடைபவர்கள் அவற்றிலிருந்து விடுபட பைரவரை வழிபடலாம். விபத்து, துர்மரணம் இவற்றிலிருந்து காப்பவரும் பைரவரே.

இதையும் படியுங்கள்:
நவபாஷாண சிலை போன்றே அஷ்ட லவணத்தால் உருவான அற்புத சிவலிங்கம்!
Sri Bhairavar

பைரவரை தொடர்ந்து வணங்கினால் தீவினைகள் அழியும். எதிரிகள் தொல்லை ஒழியும். யாருக்கும் அடிபணியாத, தலைகுனியாத வாழ்க்கை அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். நவகிரகங்களால் ஏற்படும் துன்பம் நீங்கும். வறுமை நீங்கி, செல்வ செழிப்பு உண்டாகும். இழந்த பொருள் செல்வத்தை மீண்டும் பெறலாம். திருமணத்தடை அகலும். தடைப்பட்ட அனைத்து காரியங்களும் நிறைவேறும். பித்ரு தோஷம் நீங்கும்.

பைரவரை வழிபட ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி திதி சிறந்தது. அன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். அன்றைய தினம் பைரவரை வழிபட்டால் பொன், பொருள், ஐஸ்வர்யம், சுகம் அனைத்தையும் அடையலாம்.

பைரவ வழிபாட்டை முதன் முதலில் தொடங்குபவர்கள் தை மாத முதல் செவ்வாய்க்கிழமை தொடங்க வேண்டும். தொடர்ந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பைரவரை வணங்கி, காலபைரவ அஷ்டக துதி பாடினால் எதிரிகள் தொல்லை அகலும். கடன் சுமை தீரும். எம பயம் நீங்கும்.

ஞாயிற்றுக்கிழமை ராகு காலத்தில் பைரவருக்கு அர்ச்சனை, ருத்ராபிஷேகம், வடை மாலை சாத்தி வழிபட்டால் திருமணத்தடை நீங்கி, விரைவில் திருமணப் பேறு கிடைக்கும். கடன் சுமை உள்ளவர்கள் ராகு காலத்தில் காலபைரவருக்கு முந்திரிப் பருப்பு மாலை கட்டி புனுகு சாத்தி வெண்பொங்கல் நைவேத்தியம் செய்தால் நலம் பெறலாம். சிம்ம ராசிக்காரர்கள் இந்தக் கிழமையில் வழிபடுவது சிறப்பானது.

இதையும் படியுங்கள்:
காரியத் தடையை விலக்கும் எளிய கணபதி மந்திரம்!
Sri Bhairavar

திங்கட்கிழமை அல்லது சங்கடஹர சதுர்த்தியன்று பைரவருக்கு பன்னீர் அபிஷேகம் செய்து, சந்தனக் காப்பிட்டு, புனுகு பூசி நந்தியாவட்டை மலர் சாத்தி வழிபட, கண் நோய் அகலும். கடக ராசிக்காரர்கள் இந்தக் கிழமைகளில் வழிபடலாம்.

எதிர்பாராதவிதமாக இழந்துவிட்ட பொருளை திரும்பப் பெற பைரவர் ஆலயத்தில் செவ்வாய்க்கிழமை மாலையில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும். எல்லா அஷ்டமி திதிகளிலும் பைரவர் விரதம் இருக்கலாம். செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி திதி வந்தால் சிறப்பு. குறைந்தது இருபத்தியொரு அஷ்டமிகள் தொடர்ந்து விரதமிருக்க வேண்டும். ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் பைரவரை சிவப்பு நிற அரளியால் வழிபட்டால் நல்ல மக்கள் செல்வத்தைப் பெறலாம்.

புதன்கிழமை நெய் தீபம் ஏற்றி வழிபட, வீடு, மனை வாங்கும் யோகம் கிட்டும். மிதுனம், கன்னி ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.

வியாழக்கிழமை பைரவருக்கு விளக்கேற்றி வந்தால் ஏவல், பில்லி, சூன்யம் நீங்கி நலம் கிடைக்கும். தனுசு, மீன ராசிக்காரர்கள் வழிபட இந்தக் கிழமை சிறந்தது.

வெள்ளிக்கிழமை மாலையில் பைரவ மூர்த்திக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்ய, நீங்காத செல்வம் வந்து நிறையும். ரிஷபம், துலா ராசிக்காரர்கள் வழிபட ஏற்ற நாளாகும் இது.

இதையும் படியுங்கள்:
ஸ்ரீ வேங்கடேச சுப்ரபாத ஸ்லோகங்களின் பொருள் தெரியுமா?
Sri Bhairavar

சனி பகவானுக்கு குரு பைரவர். ஆகவே, சனிக்கிழமையன்று இவரை வழிபடுவதால் சனி தோஷம் விலகி, நன்மை உண்டாகும். மகரம், கும்ப ராசிக்காரர்கள் வழிபட வேண்டிய நாள் இது.

அறுபத்தி நான்கு பைரவர்களில் யாருக்கு வேண்டுமானாலும் தினம் சாதாரண விளக்கு போடலாம். அது முடியாதவர்கள் ஒரு நாள் மட்டும் விளக்கு போடலாம். தம்பதி சமேத பைரவர் வாழ்க்கையில் வறுமை அகன்று செல்வச் செழிப்போடு வாழ்வதற்கு அருள்பவர். ஸ்ரீ ஸ்வர்ணாகர்ஷன பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. இவர் அமர்ந்த நிலையில் ஒரு கரத்தில் அமுத கலசமும் ஒரு கரத்தில் சூலமும் ஏந்தி வைர கிரீடம், பட்டு வஸ்திரம் அணிந்து தம்பதி சமேதராய் காட்சி அளிக்கிறார். இவரை அஷ்டமி திதி மற்றும் பௌர்ணமி நாளில் வழிபடலாம். மேலும், இவரை வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் வணங்கினால் சகல சம்பத்தும் பொன் பொருளும் கிடைக்கும்.

அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டால் காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் இவற்றினை தனித்தனியாக அகல் தீபமாக ஏற்றி வர நற்பலன் கிட்டும்.

தினமும் பைரவர் காயத்ரியை  சொல்லி வந்தால் செல்வம் பெருகும். நியாயமான கோரிக்கைகளை நம்பிக்கையுடன் பைரவரிடம் வைக்கும்போது அது முப்பது தினங்களுக்குள் நிறைவேறுகிறது என்கிறது பைரவ புராணம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com