வித்தியாசமான நடைமுறைகள் கொண்ட சில விநோத கோயில்கள்!

Temples of strange worship
Temples of strange worship
Published on

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் சாலையில் பெரம்பலூருக்கு அருகில் உள்ள சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. சிங்க வாகனத்தில் சாந்த சொரூபியாக அருள்பாலிக்கிறார் அம்மன். இந்தக் கோயிலின் பூசாரிகள் பயபக்தியுடன் துணியால் வாயை மூடிக்கொண்டு அம்மனுக்கு பூஜை, ஆராதனை வழிபாடுகளைச் செய்வார்கள். இங்கே பூஜை நேரத்தில் உடுக்கை ஒலி மட்டும்தான் கேட்கும். மதுரகாளியம்மன் கோயில் வாரத்தில் திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறந்திருக்கும். மற்ற நாட்களில் மலை உச்சியில் உள்ள சன்னிதியில் அம்பிகை வீற்றிருந்து அருள்புரிவதாக ஐதீகம்.

வேலூர் மாவட்டம், ஆற்காட்டிலிருந்து 23 கி.மீ. தொலைவில் உள்ளது கலவை கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் ஒரு வித்தியாசமான காணிக்கை செலுத்தி வரும் நடைமுறை உள்ளது. பொதுவாக, கோயில்களில் வேண்டுதல் நிறைவேறினால் உண்டியலில் காணிக்கை, பொங்கல் வைத்தல், முடி காணிக்கை, அபிஷேகம் செய்வது வழக்கம். ஆனால், இங்கே தங்களது வேண்டுதல் நிறைவேறினால் பக்தர்கள் தங்களது புகைப்படத்தை பிரேம் போட்டு காணிக்கையாகயாக செலுத்தி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்:
பெருமாளின் வாகனம் கருடன் என்பது தெரியும்; கருடனின் வாகனம் எது தெரியுமா?
Temples of strange worship

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் இருந்து களக்காடு செல்லும் சாலையில் திருக்குறுங்குடி உள்ளது. இங்குள்ள அழகிய நம்பிராயர் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். வைணவக் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை மட்டுமே கருட சேவை நடைபெறும். ஆனால், திருமலை நம்பி கோயிலில் ஆண்டு முழுவதும், ஒவ்வொரு சனிக்கிழமை அன்றும் கருடசேவை நடைபெறுவது சிறப்புக்குரியதாகும். அது போலவே, கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு உறியடி திருவிழா பல ஆலயங்களில் சிறப்பாக நடைபெறும். ஆனால், நம்பி மலையில் மட்டும் ஆவணி மாதம் கடைசி சனிக்கிழமைதான் உறியடி திருவிழா நடைபெறுகிறது.

நாகப்பட்டினம், பன்னிரு சிவாலயங்களில் விஸ்வநாதர் சமேத விசாலாட்சி திருக்கோயில் வீரபத்திரர் வழிபட்ட சிறப்புக்குரியதாகும். இங்கே வீரபத்திர சுவாமிக்கு தனிச் சன்னிதி அமைந்துள்ளது. பொதுவாக, வீரபத்திரர் ஆட்டு தலையுடன் கை கூப்பிய வண்ணம் காணப்படுவார். இங்கு வீரபத்திரரின் கையில் தட்சனின் வெட்டப்பட்ட தலை இருப்பது வேறெங்கும் காண இயலாத சிறப்பு ஆகும். கோயில்களில் தீபம் ஏற்றி சுவாமி முன் வைத்துதான் வழிபடுவார்கள். ஆனால், இங்கே வீரபத்திரர் சுவாமிக்கு முன் தீபம் ஏற்றி அதை உச்சந்தலையில் வைத்துக் கொண்டு வழிபடுகின்றனர். மனக்குழப்பம், கிரக தோஷம், பயந்த சுபாவம் உள்ளவர்கள் நெய் தீபங்களை ஏற்றி ஒரு தட்டில் வைத்து அதை தலையில் வைத்துக் கொண்டு பூஜை நேரத்தில் வழிபடுகின்றனர். பூஜை முடியும் வரை தீபங்களை கீழே வைக்க மாட்டார்கள்.

இதையும் படியுங்கள்:
பீஷ்மர் கேட்டுக்கொண்டும் கர்ணன் போருக்குத் துணிந்தது ஏன்?
Temples of strange worship

திருப்பூர் மாவட்டம், உடுமலையில் இருந்து சுமார் 21 கி.மீ. தொலைவில் திருமூர்த்திமலை அமைந்துள்ளது. இங்கு அமணலிங்கேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். இத்திருத்தலத்தில் சந்தன வழிபாடு என்னும் சிறப்பான வழிபாடு இன்றும் நடைபெற்று வருகின்றது. பக்தர்கள் மணமணக்கும் சந்தனத்தை வாங்கி இத்தலத்தில் எழுந்தருளியுள்ள மும்மூர்த்திகள் மீதும் எறிந்து வழிபாடு செய்கிறார்கள். அப்படி ஏறியப்படும் சந்தனம் மும்மூர்த்திகளின் நெற்றியில் விழுந்தால் நாம் நினைத்த காரியம் உடனே நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத விநோத வழிபாடு இங்கு மட்டுமே காணப்படுகிறது.

கோவை மாநகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் நொய்யல் ஆற்றை ஒட்டி அமைந்துள்ளது பேரூர் பட்டீசுவரர் கோயில். பொதுவாக, நடராஜருக்கு ஆண்டில் ஆறு முறை மட்டும் அபிஷேகம் செய்யப்படும். ஆனால், இங்கு நடராசப் பெருமானுக்கு ஆண்டில் பத்து முறை அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. பொதுவாக, பெருமாள் கோயில்களில்தான் சொர்க்கவாசல் எனப்படும் பரமபதம் கதவு திறக்கப்படும். ஆனால், இங்கு சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. பங்குனி உத்திரம், ஆருத்ரா போன்ற தினங்களில் நடராஜர், சிவகாமி அம்மன் வீதியுலா சென்று திரும்பும் சமயம் சிவகாமி அம்மன் மட்டும் இந்த சொர்க்கவாசல் வழியே கோயிலுக்குள் நுழைவாள்.

இதையும் படியுங்கள்:
வாழ்க்கையில் அவசியம் அறிந்திருக்க வேண்டிய சில ஆன்மிக விஷயங்கள்!
Temples of strange worship

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் பாதையில் சுமார் 14 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது திருமால்பூர் மணிகண்டீஸ்வரர் ஆலயம். இத்தலம் திருமால் பூஜித்த காரணத்தால் இங்கு வரும் பக்தர்களுக்கு தீர்த்தம் வழங்கி, சடாரி சாத்தப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக இருக்கிறார். இக்கோயில் மூலவர் பார்வதி தேவியால் மணலால் செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. ‘தீண்டாத்திருமேனி’ என்றும், எப்போதும் உலோகத் தாளால் (கவசம்) மூடப்பட்டிருப்பதாலும், இந்த லிங்கம் மனிதக் கைகளால் தொடப்படுவதில்லை. அர்ச்சகர்களால் கூட தொடப்படுவதில்லை.

லகில் வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத சிறப்பு சீர்காழி சட்டைநாதர் கோயிலுக்கு உண்டு. ஏனெனில், இந்தக் கோயிலில் சிவன் மூன்று வடிவமாக அருள்பாலிக்கிறார். அதாவது, லிங்க வடிவமாகவும், விஷ்ணுவின் தோலை சட்டையாக அணிந்து சட்டைநாதர் என்றும், உமாமகேஸ்வரியுடன் தோணியப்பராகவும் அருள்பாலிக்கிறார். இது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பாகும். விஷ்ணுவை, சிவபெருமான் அழித்து விட்டதாக நினைத்து மகாலட்சுமி தலையில் பூ வைத்துக் கொள்ளாமல் ஆழ்ந்த கவலையில் இருந்தாள். இப்போதும் கூட இவரது சன்னிதிக்கு வரும் பெண்களை பூ வைத்துக்கொள்ள அனுமதிப்பதில்லை. ஆண்கள் சட்டை அணியக் கூடாது. இங்கே தேங்காயை உடைக்காமல் அப்படியே மட்டையோடு முழுவதுமாக நிவேதனம் செய்கிறார்கள். மூலவருக்கு வெள்ளிக்கிழமை தோறும் அர்த்த சாமத்தில் புனுகுக் காப்பு சாத்தப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com