
மகாபாரதக் காவியத்தில் கர்ணன் மாபெரும் வீரனாகவும், நன்றி மறவாத மனிதருக்கு முன்மாதிரியாகவும் விளங்கியதை அறிகிறோம். தொடர் அவமானங்கள் மற்றும் புறக்கணிப்புகளால் கர்ணன் மனம் வெதும்பி இருந்தான். மகாபாரதப் போர் தொடங்கிய காலக்கட்டம். துரியோதனன் கர்ணனை தனது தளபதியாக்க முடிவு செய்தான். ஆனால், எவரும் கர்ணனை முதன்மைப்படுத்தும் யோசனையை ஆதரிக்கவில்லை. கர்ணன் தளபதியாக நியமிக்கப்பட்டால் தான் களம் புக மாட்டேன் என்று பீஷ்மர் உறுதியாக இருந்தார். அதனால், அனுபவம் வாய்ந்த பீஷ்மர் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.
பீஷ்மரோ, கர்ணனை அவமதிக்கும் வகையில் அவனை காலட் படையில் ஒருவனாக போரில் ஈடுபடச் சொன்னார். இதனால் கோபமடைந்த கர்ணன், பீஷ்மர் இறக்கும் வரையில், தான் போர்க்களத்தில் இறங்கப்போவதில்லை என்று உறுதியாக கௌரவர் சபையில் கூறிவிட்டான். மகாபாரதப் போர் தொடங்கி 10வது நாளில் பீஷ்மர் அம்புப் படுக்கையில் கிடந்தார். பீஷ்மர் தான் நினைக்கும்போது உயிர் துறக்கும் வரத்தினை பெற்றவர். அதனால், அவர் உயிர் பிரியாமல் இருந்தது. ஆயினும், அவர் தனது வாழ்வை முடித்துக்கொள்ள நினைத்தார்.
இந்நிலையில், ஒரு மாலை வேளையில் போர் தினசரி நிறுத்தப்படும் நேரத்தில் ஒவ்வொருவரும் இறுதியாக பீஷ்மரை சந்திந்து ஆசியும் அறிவுரையும் பெற்றுக் கொண்டனர். இந்நிலையில், மாவீரன் கர்ணனும் பீஷ்மரை இறுதியாக சந்திக்க குருக்ஷேத்திரப் போர்க்களத்திற்குச் சென்றான். அங்கு கர்ணனைக் கண்ட பீஷ்மர், அன்புடன் வரவேற்றதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். அப்போது கர்ணன் சொன்னான், "உங்களால் எப்போதும் இழிவுப்படுத்தப்பட்ட தேரோட்டியின் மைந்தன், ராதேயேன் கர்ணன் வந்திருக்கிறேன்" என்று கலங்கியபடி கூறினான்.
அதைக்கேட்டு கண் கலங்கிய பீஷ்மர், "கர்ணா, நீ உலகிற்கு ஒளி கொடுக்கும் சூரியனின் மைந்தன். நீ குந்தேயன் என்பதை நான் அறிவேன்! நீ பாண்டவர்களின் மூத்தவன், அரசாட்சிக்கு உரியவன்! உன்னைப் போல அள்ளி அள்ளிக் கொடுக்கும் தயாளன் உலகில் வேறு யாரும் இல்லை. உன்னை போல சிறந்த வீரனும் புவியில் இல்லை. உனது பிறவி ரகசியத்தை நான் அறிவேன். உனது வீரம் தர்மத்தை அழிக்க துணை நிற்கக் கூடாது என்பதால் உன்னை எப்போதும் கடிந்து கொண்டேன். அதனால், நீ துரியோதனனை விட்டு விலகுவாய் என்று நினைத்தேன். ஆனால், நீ விலகவில்லை. எனது விருப்பத்தை நிறைவேற்றுவதாக இருந்தால், நீ உன் தாய் குந்தியையும் உனது சகோதரர்கள் பாண்டவர்களையும் சந்தித்து அவர்களுடன் சேர்ந்துவிடு. இந்தப் போரினை நிறுத்து" என்று அறிவுரை கூறினார்.
அதற்கு கர்ணன், "பிதாமகரே என் தந்தை சூரியன் என்றும், தாய் குந்தி என்றும் நானறிவேன்! நான் ராதையின் வளர்ப்பு மகனாக இருக்கும்போதே என்னை ஆதரித்தவன் துரியோதனன். எனக்கு ஒரு இழிவு வரும் நேரத்தில் என்னை அரசனாக்கி உயர்ந்த இடத்தைக் கொடுத்தவன் துரியோதனன். எனது பிறவி ரகசியம் தெரிந்ததால், உங்களுக்கு என் மேல் அன்பு இருக்கலாம். துரியோதனன் நான் யார் என்று தெரியாமல் என் மேல் அன்பு வைத்துள்ளான். அவன் என்னை மட்டுமே நம்பி போருக்குத் துணிந்துள்ளான். இந்தப் போரை நிறுத்த முடியாது. ஆனால் , உங்கள் அனுமதியுடன் இந்தப் போரை நடத்த நான் விரும்புகிறேன்" என்றான்.
அதற்கு பீஷ்மர், "இந்தப் போரை நடத்துவதாக இருந்தால் இறுதியில் சொர்க்கத்தை அடைய இலக்காக வைத்துப் போரிடுங்கள். இதுவே எனது விருப்பம்" என்று கூறினார். ஶ்ரீ கிருஷ்ணர், குந்தி தேவி, பீஷ்மர் என பலரும் கர்ணனை தனது சகோதரர்கள் பக்கம் சேர வற்புறுத்தினாலும் கர்ணன் நட்பு, நன்றி, விசுவாசம் ஆகியவற்றின் அடையாளமாக துரியோதனனுக்காகப் போரிட்டு உயிர் துறந்தான். அதர்மத்தின் பக்கம் நின்றாலும் கர்ணனின் தியாகம் அளப்பரியது.