

கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம் காலடி அருகே, திருவைராணிக்குளம் எனும் ஊரில் உள்ளது மகாதேவர் கோயில். இக்கோயிலில் உள்ள பார்வதி தேவி சன்னிதி மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்திர நாளில் சில சடங்குகள் செய்து திறக்கப்படும். அதிலிருந்து 11 நாட்கள் மட்டுமே அந்த அம்மன் சன்னிதி பக்தர்கள் தரிசனம் மற்றும் பூஜைகளுக்காக திறந்திருக்கும். சன்னிதி திறக்கும் முன்பு பார்வதி தேவிக்கு அணிவிக்கும் ஆபரணங்கள் அடங்கிய பெட்டி ஊர்வலமாக வரும். அந்த 11 நாட்களில் சன்னிதி காலை 4.30 முதல் மாலை 1.30 வரையும் பின்னர் மாலை 4 மணி முதல் 8.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.
கிராமங்களில் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் நீர் தெளித்து விளையாடி மகிழ்வர். இதைப்போல கோவையிலிருந்து 10 கி.மீ. தொலைவில் உள்ள பேரூர் பட்டீஸ்வரம் கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவில் சுவாமி மீது மஞ்சள் நீர் தெளித்து, பின்னர் அதையே பக்தர்கள் மீதும் தெளிக்கிறார்கள்.
இந்த மஞ்சள் நீருக்கு ‘திருப்பொற் சுண்ணம்’ என்று பெயர். இதற்காக பிரத்யேகமாக உள்ள உரலில் மஞ்சளை பொடியாக்குகின்றனர். திருவாதிரை நாளில் கோயிலின் உள்ளே நடராஜர் மற்றும் சிவகாமி அம்மன் வீதி உலா நடக்கும் இது முடிந்து திரும்பும்போது சிவகாமி அம்மன் மட்டுமே இங்குள்ள சொர்க்க வாசல் வழியாக வருவார். மனோ சக்தியின் அடையாளமான மனோன்மணி தாயார் இங்கு மட்டும்தான் கருவறைக்கு வெளியே உள்ளார்.
ஈரோடு மாவட்டம், நஞ்சை ஊத்துக்குளி அருகில் உள்ள ஊர் காங்கேயம்பாளையம். இங்குதான் காவிரியின் நடுவில் கோயில் கொண்டிருக்கிறார் அருள்மிகு நட்டாற்றீஸ்வரர். கோயிலில் மார்கழி திருவாதிரை அன்று நடக்கும் பூஜையின்போது நடராஜரை ஒரு பரிசலில் எழுந்தருளச் செய்து காவிரியில் கோயிலை சுற்றி வலம் வருவர். அவருக்கு முன்பாக மற்றொரு பரிசலில் மேளதாள வாத்தியங்கள் செல்லும். மாலையில் திருக்கல்யாணம் நடக்கும்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் விஸ்வநாதர் கோயிலில் மார்கழி திருவாதிரை விழாவில் விஸ்வநாதர் சன்னிதி நேராக நடராஜரையும், அவருக்கு எதிராக ஒரு கண்ணாடியையும் வைத்து விடுவர். அன்று காலையில் சிவன், நடராஜர் மற்றும் அவர் முன் உள்ள கண்ணாடி பிம்பத்திற்கு ஒரே சமயத்தில் தீபாராதணை நடக்கும். இந்த கோயிலில் காலையில் சூரியனுக்கும், மாலையில் சந்திரனுக்கும் பூஜை நடக்கும். ருத்திராட்ச மரம் இத்தலத்தின் தல விருட்சமாக உள்ளது.
தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள குற்றாலத்தில் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு திருவாதிரை திருவிழாவையொட்டி குற்றாலநாதர் சன்னிதியில் உள்ள கொடிமரத்தில் 16 வகை முலிகை பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு வேத மந்திரங்களுடன் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க கொடியேற்றப்படும். இதையொட்டி கோயில் கொடிமரம் முன்பாக நடராஜ மூர்த்தி,சுவாமி, குழல்வாய்மொழி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
கரூர் அருகிலுள்ள அரவக்குறிச்சியிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது ராஜபுரம் எனும் ஊர். இங்குள்ளது அருள்மிகு காசி விஸ்வநாதர் ஆலயம். இங்குள்ள சிவலிங்கம் காசியிலிருந்து கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்டதாக வரலாறு. இந்த கோயிலில் மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்தன்று சூரியனின் ஒளிக்கதிர்கள் காலை நேரத்தில் காசி விஸ்வநாதர் மேல் விழும் அதிசயத்தை காணலாம்.
திருமணத் தடைகளை நீக்கி, விரைவில் திருமணம் நடக்க உதவும் சிவன் கோயில்களில் சென்னை, பூந்தமல்லி அருகே 'திருமணம்' எனும் கிராமத்தில் உள்ள சித்தர்காடு தாத்திரீஸ்வரர் கோயில் மிகவும் பிரபலம்.
இங்கு திருவாதிரை நாளில் இங்குள்ள நடராஜர் -சிவகாமி சுந்தரிக்கு திருமண விழா கொண்டாடப்படுகிறது. இதில் கலந்துகொள்ள திருமணத் தடை நீக்கும் என்பது ஐதீகம். இங்கு நெல்லி அபிஷேகம், பச்சை வஸ்திரம், வளையல் சாத்துவது திருமணப் பரிகாரமாகச் செய்யப்படுகிறது.