

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் இருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊர் மன்னார் கோவில். இந்த இடத்தில் மிகப் பழமையான பெருமாள் கோவில் உள்ளது. ராஜகோபுரம் ஐந்து நிலைகளை கொண்டது. கோவிலில் உள்ள தனி சன்னதியில் லட்சுமணர், சீதை, அனுமன் ஆகியோர் காட்சியளிக்கின்றனர். அடுத்த சன்னதியில் கிருஷ்ணர் தரிசனம் தருகிறார். நரசிம்மருக்கு தனி சன்னதி உள்ளது. இந்த கோவிலில் உள்ள நரசிம்மரை வழிபடுவதால் எதிரிகள் பயம், தோஷம், தடைகள் விலகுவதால் ஏராளமான பக்தர்கள் நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுகிறார்கள்.
குலசேகர ஆழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. மூலஸ்தானம் அஷ்டாங்க விமானமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. மதுரை கூடலழகர் கோவில், உத்திரமேரூர் கோவில் இரண்டிலும் இதே போன்ற அஷ்டாங்க அமைப்பு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இக்கோவிலில் மூன்று நிலைகள் உள்ளன. மூன்று நிலைகளிலும் பெருமாள் மூன்று கோலங்களில் காட்சி தருகிறார்.
கீழே உள்ள மூலஸ்தானத்தில் வேத நாராயணர் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.
அடுத்து நிலையில் அமர்ந்து, பரமபத நாதனாக காட்சியளிக்கிறார்.
மூன்றாம் நிலையில் பள்ளிகொண்ட பெருமாள் ரங்கநாதர் காட்சி தருகிறார்.
ராஜகோபால் என்பது உற்சவர் பெயர். திருமணத்தடை நீங்கவும், குழந்தை பேறு கிடைக்கவும், தொழில் வளர்ச்சி அடையவும் இக்கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களது எண்ணங்களும் நிறைவேறி வருகின்றன.
மூலவர் வேத நாராயணர்; தாயார் வேதவல்லி இருவரும் காட்சி அளிக்கின்றனர். தலமரம் பலா செண்பகம். இங்குள்ள தீர்த்தத்தின் பெயர் பிருகு தீர்த்தம். இந்த கோவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு இணையாக பேசப்படுகிறது. புராண காலத்தில் வேதபுரி என அழைக்கப்பட்டது.
அஷ்டாங்க விமானம் என்பது எட்டு அங்கங்களை குறிக்கும். இந்தக் கோவிலில் ஏழு பிரகாரங்கள் உள்ளன. மூலவர் மற்றும் தாயார் சன்னதிகள் வியக்க வைக்கின்றன. பிருகு முனிவரும் மார்க்கண்டேயன் முனிவரும் வழிபட்ட தலமாகும். குலசேகர ஆழ்வார் தனது அரசு பதவியை துறந்து இங்கு வந்து மங்களாசாசனம் பாடி இந்த இடத்தில் முக்தி அடைந்ததாக வரலாறு காணப்படுகிறது. அவர் வணங்கிய பெருமாள் திருஉருவம் இன்றும் காணப்படுகிறது.
இந்தக் கோவில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. மூன்று நிலைகளில் இங்கு இறைவன் அருள் பாலிக்கிறார். திருக்கோயில் விமானம் லாடம் வடிவில் அமைக்கப்பட்டுள்ளது சிறப்பான அம்சமாக கருதப்படுகிறது.
மண்டபங்களில் ஆண், பெண் அரச உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வேத நாராயணர் இருபுறமும் ஸ்ரீதேவி, பூதேவி சகிதம் காட்சி அளிக்கிறார்கள். இந்த திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி வெகு சிறப்பாக நடைபெறும்.
பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது என கல்வெட்டுகள் உள்ளன. அக்காலத்தில் வேதங்கள் ஒலிக்கும் இடம் என்பதால் வேதபுரி என அழைக்கப்பட்டது. மர மண்டபத்தில் 12 ராசிகளும் அழகுற வடிவமைக்கப்பட்டுள்ளது. மூலவர் மூலிகைகள் அடங்கிய சுதையால் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.
பிருகு முனிவருக்கும் மார்க்கண்டேயன் இருவருக்கும் பெருமாள் இந்த ஊரில் காட்சி கொடுத்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. பிருகு முனிவர் மார்க்கண்டேயர் இருவரின் வேண்டுகோளுக்கு இணங்க வேத நாராயணர் திருக்கோவிலில் பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.
பிற்காலத்தில் சேர சோழ பாண்டியர்கள் மூவரும் சேர்ந்து இந்த கோவிலை விரிவு படுத்தினார்கள்.
இத்திருக்கோவில் சிறந்த பரிகாரத் தலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு வந்தால், திருமண தடைகள் அகலும்; எதிரிகள் தடைகள் அகலும்; நினைத்த காரியம் கைகூடும் என்பதால் இங்கு அடிக்கடி பக்தர்கள் வந்து செல்கிறார்கள். கட்டடக்கலைக்கும் சிற்ப வேலைப்பாட்டிற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.