தால்பிய முனிவரிடம் நற்கல்வி பயில வந்தார் குணசீலர். அவருக்கு வேதம் முதலானவற்றைப் பயிற்றுவித்து, தன் தவ வலிமையால் ஞான அமுது வழங்கினார் முனிவர். பிறகு, தீர்த்த யாத்திரை மேற்கொள்ளச் சொல்லி சீடரை வழியனுப்பி வைத்தார் தால்பியர்.
குணசீலர் கோயில் கோயிலாகச் சென்றார். திருவேங்கட மாமலையில் திருமாலை தரிசித்தார். பெருமாளின் அழகில் உள்ளம் பறிகொடுத்தார். இனி, அந்தத் திருவேங்கடவன் துணையின்றி ஒரு கணம் கூடத் தம்மால் தனித்து வாழ முடியாது என்ற நிலையை எய்தினார். "எம்பெருமானே, திருவேங்கடவா, என் ஆசிரமத்துக்கு எழுந்தருளி, என்றென்றும் என்னுடனேயே தங்க வேண்டும்,‘‘ என்று தன் ஏக்கத்தை வெளிப்படுத்தினார்.
அன்புக்கு ஆட்படும் அண்ணல் அல்லவா அந்த ஆராவமுதன்! எனவே, "அகண்ட காவிரிக்கரை ஆசிரமத்தில் தவம் புரிந்து வா. பிரசன்ன வேங்கடேசனாக அங்கே எழுந்தருளுகிறேன்!" என்று அசரீரியாக அருளினார் பெருமாள்.
குணசீலர் குதூகலித்தார். நீலிவனம் என்ற ஆரண்யத்தில் ஆசிரமம் அமைத்தார். பஞ்சாக்னி வளர்த்து, அதன் நடுவே இருந்து வைகுந்த வாசனை எண்ணி இடையறாது தவம் புரியத் தொடங்கினார்.
புரட்டாசி மாதம் சனிக்கிழமையன்று சிரவண நட்சத்திரம் கூடிய சுப தினத்தில், திவ்ய மங்கள விக்ரக ரூபத்தில் குணசீலர் ஆசிரமத்தில் ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசன் எழுந்தருளினார். தன் வேண்டுகோளை ஏற்ற பெருமாளின் பாதங்களில் விழுந்து பணிந்தார் குணசீலர்.
இந்த ஆசிரமத்துக்கு அருகே, நிகளாபுரி என்றோர் ஊர். அதை ஞானவர்மன் என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனது பசுக்கள் மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குச் செல்லும். இடையர்கள் அவற்றிடமிருந்து பால் கறந்து, பால் குடங்களை அரண்மனைக்கு அனுப்புவார்கள்.
ஒருநாள் குடங்களில் நிரப்பிய பால் அப்படியே காணாமல் போனது. கலங்கிய இடையர்கள், ஞானவர்மனிடம் முறையிட்டனர். அது கேட்டு வியந்து, அரசன் வனப்பகுதிக்கு வந்தான். அவன் முன்னிலையிலேயே பால் கறந்து, குடங்களை நிரப்பினர். அடுத்த கணமே குடங்கள் காலியாகின! அரசன் திகைத்தான்.
அப்போது முதியவர் ஒருவர் மேல் ஆவேசம் வந்தது. ஓங்கிய குரலில், "இங்கே புற்றுகளின் இடையே எம்பெருமான் எழுந்தருளி இருக்கிறார். பாலை புற்றின் மீது அபிஷேகம் செய். உண்மை என்னவென்று தெரியும்!" என்றார் அவர். அதேபோல பாலபிஷேகம் செய்யப்பட்டது. புற்று மண் கரைந்து, உள்ளிருந்து பிரசன்ன வேங்கடேசன் காட்சி தந்தார். அத்துடன் "அரசே, குணசீல மகரிஷி விரும்பிய வண்ணம் இங்கு உறைகிறேன். எனவே, இந்தத் தலம் குணசீலம் என்று கொண்டாடப்படும்," என்ற அசரீரியும் கேட்டது. விரைவில் ஞானவர்மன், பெருமாளுக்கு ஓர் ஆலயத்தை எழுப்பினான்.
இன்றும் இந்த பிரசன்ன வேங்கடவனை உளமாற வழிபடுவோருக்குப் பிள்ளை பேறு கிட்டுகிறது; சித்தப் பிரமை பிடித்தவர்கள் அதிலிருந்து விடுபடுகிறார்கள்; திருமண வேண்டுதலும் விரைவில் நிறைவேறுகிறது.
திருச்சி - சேலம் நெடுஞ்சாலையில், திருச்சியிலிருந்து பதினாறு கி.மீ. தொலைவில் குணசீலம் அமைந்துள்ளது.
கோயிலில், ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி நின்ற திருக்கோலத்தில் திருமகளைத் திருமார்பில் தாங்கி, கையில் செங்கோலுடன் காட்சி அருள்கிறார். பேய், பில்லி, சூன்யம், சித்தபிரமை ஆகியவற்றை அடித்து விரட்டவே, இந்தச் செங்கோல்!
ஆயிரம் திருநாமங்களை லட்சுமி டாலரில் பொறித்த சஹஸ்ரநாம மாலையும் சாளக்கிராம மாலையும் பெருமாள் திருக்கழுத்தை அலங்கரிக்கின்றன.
இந்தக் கோயில், ’தென் திருப்பதி’ என்றே போற்றப்படுகிறது. திருப்பதிக்கு வேண்டிக் கொண்டவர்கள், அங்கே செல்ல இயலவில்லை என்றால், அதை இங்கு நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.
பெருமாளுக்குத் தினசரி அபிஷேகம் நடைபெறுகிறது. அலங்காரப் பிரியனான வேங்கடேசன், அபிஷேகப் பிரியனாகவும் விளங்கும் தலம் இது ஒன்றுதான்.
தாயாருக்கு என்று தனியே சந்நிதி இல்லை. பெருமாளை தரிசித்து வேண்டுவோருக்குத் தாயாரின் அருளும் இணைந்து கிடைப்பது இத்தலத்தின் சிறப்பாகும்.
எடுத்த பிறவி கடைத்தேற, எம்பெருமான் திருக்கண் திருநோக்குப் பெற, குணசீலம் சென்று பெருமாளை தரிசியுங்கள்.