

இசையில் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் அன்மையில் நடைபெற்றது. இது 68-ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா. இதில், தலாய்லாமா (டென்சின் கியாட்சோ) தனது 90 வயதில் முதல் கிராமி விருதை வென்றாா். "சிறந்த ஆடியோ புத்தகம், கதை சொல்லல் மற்றும் பதிவு" (Best Audio Book, Narration, and Storytelling Recording) என்ற பிரிவின் கீழ் இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. அவரது ‘மெடிடேஷன்ஸ்: தி ரிஃப்ளெக்சன்ஸ் ஆஃப் ஹிஸ் ஹோலினஸ் தி தலாய் லாமா’ எனும் ஒலிப்புத்தகத்துக்காக (ஆடியோ புக்), ‘சிறந்த கதை சொல்லல் மற்றும் ஒலிப்புத்தகம்’ பிரிவில் இந்த விருது வழங்கப்பட்டது.
தலாய் லாமாவின் ஒலிப்புத்தகத்துக்காக வழங்கப்பட்ட கிராமி விருதை, அவா் சாா்பாக அமெரிக்க பாடகா் ரூஃபஸ் வைன்ரைட் பெற்றுக்கொண்டாா். உலகளவில் மதிப்புமிக்க இசை விருதாக கருதப்படும் இந்த விருதை ஒரு ஆன்மீகத் தலைவர் பெற்றிருப்பது வரலாற்று சிறப்புமிக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தலாய் லாமா (Dalai Lama) என்பவர் திபெத்திய பௌத்த மதத்தின், குறிப்பாக கெலுக் (Gelug) பிரிவின் உயர்ந்த ஆன்மீகத் தலைவர் ஆவார். 'தலாய்' என்றால் மங்கோலிய மொழியில் 'கடல்' என்றும், 'லாமா' என்றால் திபெத்திய மொழியில் 'குரு' அல்லது 'ஆசான்' என்றும் பொருள்.தலாய் லாமாக்கள் முந்தைய தலாய் லாமாவின் மறுபிறவியாக நம்பப்பட்டு, பாரம்பரிய முறைகளின்படி தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
தற்போது இருக்கும் 14வது தலாய்லாமா 1935 ஜூலை 6 அன்று வடகிழக்கு திபெத்தில் ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். அவருக்கு' லாமோ தோண்டுப் 'என்று பெயரிட்டனர் அவரது பெற்றோர், அவர்களுக்கு வேறு பல குழந்தைகளும் இருந்தனர்.
அவருக்கு இரண்டு வயதாக இருந்தபோது, புத்த அதிகாரிகளின் தேடல் குழு அவரை முந்தைய 13 தலாய் லாமாக்களின் மறுபிறவி என்று அங்கீகரித்தது, மேலும் அவர் நான்கு வயதை அடைவதற்கு முன்பே அரியணை ஏறினார். அவருக்கு 'டென்சின் கியாட்சோ 'என்ற துறவறப் பெயர் வழங்கப்பட்டது. அவர் ஒரு மடத்தில் கல்வி பயின்றார், மேலும் புத்த தத்துவத்தில் முனைவர் பட்டமான 'கெஷே லரம்பா 'பட்டத்தைப் பெற்றார்.
சீனாவின் திபெத் ஆக்ரமிப்பு காரணமாக அவர் ஒரு சிப்பாயாக மாறுவேடமிட்டு ஒரு இரவு கூட்டத்திற்குள் நுழைந்தார். பின்னர், இமயமலையைக் கடந்து 15 நாள் கடினமான மலையேற்றத்திற்குப் பிறகு, ஒரு பரிவாரங்களுடன் சேர்ந்து, 1959 ம் ஆண்டு அவர் இந்திய எல்லையை அடைந்தார்.
இந்திய அரசாங்கம் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது, இறுதியில் அவர் வட இந்தியாவின் ஹிமாச்சல பிரதேசத்தின் தா்மசாலாவில் குடியேறினார், அது நாடுகடத்தப்பட்ட திபெத்திய அரசாங்கத்தின் தாயகமாக மாறியது. தலாய் லாமாவைத் தொடர்ந்து சுமார் 80,000 திபெத்தியர்கள் நாடுகடத்தப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் அதே பகுதியில் குடியேறினர்.
தர்மசாலாவில் ஒரு நாளைக்கு 5 முதல் 7 மணி நேரம் புத்தரின் போதனைகளைத் தொடர்ந்தாற் போல் இந்தியாவில் 60 மணி நேரம் உபதேசித்து கின்னஸ் சாதனை புரிந்திருக்கிறார் தலாய்லாமா. இது 1969 ம் ஆண்டு மே 31 முதல் ஜூன் 10 ம் தேதி வரை நிகழ்ந்தது.
1959-ம் ஆண்டு திபெத்திலிருந்து வெளியேறிய தலாய் லாமா, அதன் பின்னர் இந்தியாவின் தரம்சாலாவில் தங்கியிருந்து வருகிறார். திபெத்தின் விடுதலைக்காக அவர் மேற்கொண்ட அமைதியான, வன்முறையற்ற போராட்டங்களுக்காக 1989-ம் ஆண்டு அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உலக நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளிடம் இருந்து 150-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார்.4 பல்கலைக்கழகங்களில் இருந்து டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். இன்றும் தனது 90 வயதில் தலாய் லாமா தன்னை ஒரு எளிய பௌத்த துறவியாகவே கருதுகிறார் மற்றும் உலக அமைதிக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.