இரவு 8 மணி நேர தூக்கத்திற்குப் பின்பு காலையில் சாப்பிடும் சிறந்த சத்தான உணவுதான் ஒரு மனிதனுக்கு அந்த நாளை உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்வதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த காலை உணவில் சாப்பிடக் கூடாத 4 வகை உணவுகள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
1. அதிகக் கொழுப்புள்ள உணவுகள்: காலை உணவாக அனைவரும் விரும்பிச் சாப்பிடும் பூரி, பரோட்டா, வெண்ணெய், தோசை அல்லது பொரித்த பொருட்களில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளதால், இது எல்டிஎல் கொழுப்பை அதிகரிக்கிறது. ஆதலால் இவ்வகை உணவுகளை தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்தை கெடுத்து, இதயத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
2. பதப்படுத்தப்பட்ட உணவுகள்: காலை உணவில் கொழுப்பு இறைச்சி, பன்றி இறைச்சி அல்லது பிற சிவப்பு இறைச்சியை அதிகமாக உட்கொள்வதும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க ஒரு முக்கியக் காரணமாக இருப்பதோடு, அவற்றில் அதிக நிறைவுற்ற கொழுப்பு மற்றும் சோடியம் உள்ளதால், இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் ஆகிய இரண்டிற்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால் காலை உணவாக பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டியது மிகவும் அவசியம்.
3. சர்க்கரை உணவு: பேக் செய்யப்பட்ட தானியங்கள், பேஸ்ட்ரிகள், டோனட்ஸ் அல்லது சர்க்கரை கலந்த பானங்களை காலை உணவாக உட்கொள்வதும் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதோடு, அதிகப்படியான சர்க்கரை ட்ரைகிளிசரைடுகளையும் அதிகரிக்கிறது. மேலும், இது எல்டிஎல் அளவையும் பாதிப்பதால் காலை உணவாக இவற்றை சாப்பிடாமல் இருப்பது உடல் நலத்துக்கு நல்லதாகும்.
4. ஆரோக்கியமற்ற உணவு: காலை உணவில் போதுமான நார்ச்சத்து, பழங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை உட்கொள்ளாதது கொலஸ்ட்ரால் சமநிலையை மோசமாக பாதிக்கும். ஆதலால் ஓட்ஸ், பழங்கள் மற்றும் நட்ஸ் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை காலை உணவாகச் சாப்பிடுவது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுவதோடு, அன்றைய நாளை உற்சாகமாகவும் புத்துணர்வோடும் வைத்திருக்க உதவும்.
மேற்கூறிய நான்கு உணவு வகைகளை காலை நேரத்தில் சாப்பிடுவதைத் தவிர்த்தாலே நாள் முழுவதும் புத்துணர்ச்சி அதிகரித்து, உடல் ஆரோக்கியத்தில் புதிய பாதை தெளிவுபட ஆரம்பிக்கும்.