வருத்தம், சோகம், கவலை, இழப்பு போன்ற நேரத்தில் மட்டுமின்றி, கோபத்திலும் சிலருக்கு அழுகை வரும். சந்தோஷத்தில் கண்ணீர் வருவது போல் இது ஒரு வகையான உணர்ச்சியின் வெளிப்பாடுதான். ஆனால், அப்படி கோபத்தில் அழும் மனிதர்கள் விவாதத்திலோ, சண்டையிலோ ஜெயிக்க முடியாமல் தோற்றுத்தான் போகிறார்கள். காரணம் கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் அழுபவர்கள் தங்களை சக்தியற்றவர்களாக உணர்கின்றனர்.
பாசிவ் பர்சனாலிட்டி: மற்றவர்களை எதிர்த்து தனது உணர்வுகளை வெளியில் சொல்ல முடியாத நிலையில் இருப்பவர்களை ஆங்கிலத்தில், ‘பாசிவ் பர்சனாலிட்டி’ என்று அழைக்கிறார்கள். மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது என்ற நல்ல எண்ணம் கொண்டவர்கள் இவர்கள். நட்பையும் உறவையும் இழந்து விடாமல் இருக்க விவாதம் செய்வதைத் தவிர்ப்பார்கள்.
அழுகைக்கான காரணம்: நினைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத பொழுது, ‘நீங்கள் நடந்துகொள்வது பிடிக்கவில்லை, தவறாக உள்ளது’ என்பது போன்ற வார்த்தைகளை சொல்ல முடியாது தடை போடுவதுதான் அழுகை. பொதுவாக, பெண்களும், குழந்தைகளும்தான் கோபத்தில் அதிகம் அழுகிறார்கள் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
ஒருவர் கோபப்படும் பொழுது மூளையின் அமிக்டலா(Amygdala) அதிகம் வேலை செய்யும். அப்போது பிரச்னைகளை தீர்க்கும் திறனும், சிந்திக்கும் திறனும் தற்காலிகமாக செயலற்றதாகிவிடும். இதனால் கோபம் அழுகையை அடுத்து அவர்களது மனநிலை வெறுமையாகிவிடும். பேச வார்த்தைகள் பீறிட்டுக் கொண்டு வந்தாலும் தனக்குள்ளேயே அதாவது மனதுக்குள்ளேயே வாக்குவாதங்களை நடத்திக் கொள்வார்கள். இதைத்தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள்.
அழுத பின் ஆசுவாசம் அடைவது: இன்னும் சிலரோ, கோபம் வந்தால் பின்விளைவுகளைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் படபடவென பொரிந்து தள்ளி விடுவார்கள். பிறகு, ‘மூளை இல்லாமல் ஏதோ பேசி விட்டேன்’ என்று மன்னிப்பும் கேட்பார்கள். ஒருவர் அழும் பொழுது ஆக்சிடாசின், புரொலாக்டின் என்ற இரண்டு ரசாயனங்கள் சுரக்கும். இது படபடப்பாகத் துடிக்கும் இதய துடிப்பின் வேகத்தை குறைத்து மன அழுத்தத்திலிருந்து விடுபடவும், அவர்களை லேசாக உணர வைக்கவும் உதவும். அதனால்தான் சிலர் அழுத பின் ஆசுவாசம் அடைகின்றனர். இப்படி அழுவதால் அவர்கள் மனம் சாந்தமடைகிறது.
அழுகைக்கான காரணம்: ‘உனக்கு இவ்வளவு கோபம் ஆகாது’ என்று சொல்லி வளர்க்கப்படும் குழந்தைகள்தான் பிற்காலத்தில் கோபத்தை வெளிக்காட்டக் கூடாது என்று எண்ணி கோபம் வரும்பொழுதெல்லாம் அடக்க முயன்று, முடியாமல் அழுது விடுகின்றனர். ஆண்களை விட பெண்கள்தான் அதிகம் அழுகின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
கோபத்தில் அழுவதால் ஏற்படும் பாதிப்பு: கோபத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாமல் அழுபவர்கள் சமூகத்தில் மனதளவில் பல சிக்கல்களை எதிர்க்கொள்கிறார்கள். முதலாவதாக அவர்களது தன்னம்பிக்கை குறையும். சுயமரியாதையை இழக்க வேண்டி வரும். பொது இடமாக இருக்கும் பட்சத்தில் அவமானம் ஏற்படும். விவாதம் செய்ய தெரியாத முட்டாளாக எண்ணுவார்கள். அழுது சாதிக்கிறார்கள், பரிதாபம் தேடுகிறார்கள்,கோழை, அழுமூஞ்சி என்று அவர்களின் இமேஜ் பாதிக்கப்படும்.
தீர்வுதான் என்ன?: அப்படியானால் இதற்கான தீர்வுதான் என்ன என்று யோசித்தால் அழுதுவிட்டோமே என அவமானமாகக் கருத வேண்டாம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாவிட்டால்தான் ஆபத்து. கோபம் வரும் சூழல்களை அறிந்து, எந்த சூழலில் யார் அந்தக் கோபத்தை தூண்டினார்கள் என்பதை எண்ணிப் பார்த்து அடுத்த முறை அந்த சூழலை தவிர்ப்பதும், அழுகை வந்தால் கட்டுப்படுத்தவும் செய்யலாம்.
உடல் ஆரோக்கியத்தை போன்றே மன ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். எனவே தன் பக்கம் உள்ள நியாயமான கோபத்தை வெளிப்படுத்த அழுகையாக இல்லாமல், பேசி வெளிப்படுத்த பயிற்சி எடுத்துக் கொள்ளலாம். சண்டை போடுபவர்கள் நல்ல மனநிலையில் இருக்கும்போது அவர்கள் செய்த தவறுகளை மென்மையாக எடுத்து கூறி விளக்கம் பெறலாம்.