
முருகப்பெருமான் சூரன் என்னும் அரக்கனை அழித்து, சம்ஹாரம் செய்தார். இந்த வெற்றிக்காக தேவேந்திரன் தனது புதல்வி தெய்வானையை முருகனுக்குத் திருமணம் முடித்து வைத்தார். இத்திருக்கல்யாணம் திருப்பரங்குன்றத்தில் நடந்ததாக அந்தத் தல வரலாறு கூறுகிறது. இதையொட்டி, திருச்செந்தூரில் கந்த சஷ்டி சூரசம்ஹார தினத்திற்கு அடுத்த நாள் முருகன் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
இதையடுத்து, குறமகள் வள்ளியையும் முருகன் மணமுடித்தார். இது காதல் திருமணமாகும். குறவர் குலத்தைச் சேர்ந்த வள்ளி தினைப் பயிரை காவல் காக்கச் சென்றார். அங்கு முருகன் வேடுவன் வேடமிட்டு வர, வள்ளி அவரிடம் மையல் கொண்டாள். இவர்கள் காதலையறிந்த வள்ளியின் தந்தை நம்பிராஜன் படையெடுத்து வந்து முருகனுடன் போரிட்டு மடிந்தார். ஆனால், வள்ளியின் கோரிக்கையை ஏற்று முருகப்பெருமான், நம்பிராஜனுக்கு உயிர் தர, முருகன் - வள்ளி திருக்கல்யாணம் நடந்தேறியது. நம்பிராஜன் திருத்தணியில் முருகன் - வள்ளி திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.
இந்த நிகழ்வு நடந்த வள்ளிமலையில் ஒரு முருகன் கோயில் அமைந்துள்ளது. இது வேலூரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது. வள்ளிமலை முருகன் கோயில் 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இந்தத் தலத்தில் வளர்ந்த வள்ளி, தனது காதலனாக வந்த முருகனை கணவனாக அடைய விரும்பி திருமால் பாதங்களை வைத்து அதற்கு தினமும் மலர்களைத் தூவி வழிபட்டாள். அதனால் இந்தக் கோயிலில் வைணவக் கோயில்களைப் போல பக்தர்களுக்கு சடாரி சாத்துவது வழக்கமாக உள்ளது. நம்பிராஜனின் வேண்டுகோளுக்கிணங்க, முருகன் வள்ளிமலையில் உள்ள குன்றில் எழுந்தருளினார். அதுதான் வள்ளிமலை முருகன் கோயில்.
இந்தக் கோயிலின் கருவறையில் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கிறார். வள்ளி குறவர் குலத்தைச் சேர்ந்தவராதலால் இக்கோயிலில் அர்த்த ஜாம பூஜையில் தேனும் தினை மாவும் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது. வள்ளி வாழ்ந்த இடம் என்பதால் அவள் பெயரிலேயே இத்தலம் அழைக்கப்படுகிறது.
ஒரு தனி சன்னிதியில் வள்ளி குமரிப் பெண்ணாகக் காட்சியளிக்கிறாள். வள்ளியின் கையில் பறவையை விரட்டப் பயன்படுத்தும் உண்டி வில், கவண் கல் போன்றவை வைத்திருக்கிறாள். ஒரு சமயம் முருகன் தனது காதலி வள்ளியுடன் ஆசையாகப் பேசிக்கொண்டிருக்கும்போது வள்ளியின் தந்தை நம்பிராஜன் அங்கே வந்து விட்டார். எனவே, முருகன் வேங்கை மரமாக உருமாறி தன்னை மறைத்துக் கொண்டார். அதனால் வேங்கை மரமே இங்கு தல விருட்சமாக உள்ளது.
மலைக்கோயிலில் கொடிமரத்திற்கு எதிரே விநாயகர் காட்சி தருகிறார். இங்கிருந்து சற்று தூரத்திலுள்ள வனத்திற்குள் வள்ளி, பறவைகளை விரட்டி தினைப்பயிரை காக்கும் பணியைச் செய்த மண்டபம், நீராடிய சுனை, மஞ்சள் தேய்த்த மண்டபம் மற்றும் முருகன் நீர் பருகிய குமரி தீர்த்தம் என்னும் சூரிய ஒளி படாத தீர்த்தம் ஆகியவை உள்ளன.
யானையாக வந்து வள்ளியை பயமுறுத்திய விநாயகர் மலை வடிவில் இருப்பதால் இதை, ‘யானைக் குன்று’ என்று பக்தர்கள் அழைக்கிறார்கள். இம்மலையிலேயே திருப்புகழ் ஆசிரமம் உள்ளது.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பட தலம் வள்ளிமலை. திருமணத்திற்கு வேண்டிக்கொண்டு பக்தர்கள் வந்து வழிபடும் பிரசித்தி பெற்ற தலமாக வள்ளிமலை முருகன் கோயில் உள்ளது. முக்கியமாக, தான் நேசிப்பவர்களை, தன் மனதிற்குப் பிடித்தவர்களை திருமணம் செய்துகொள்ள அனுக்கிரஹம் கிடைக்க வேண்டிக்கொண்டால் நிச்சயம் பலன் கிடைக்கிறது என்பது இங்கே வரும் பக்தர்களின் அனுபவமாக உள்ளது.