

ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில், ஏழை மற்றும் சாமானிய பக்தர்கள் பயன்பெறும் வகையில், வெறும் ரூ.100 கட்டணத்தில் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை செய்ய கோவில் நிர்வாகம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகில் உள்ள ஸ்ரீகாளஹஸ்தி, பஞ்சபூதத் தலங்களில் வாயுத்தலமாக (காற்று) போற்றப்படும் புகழ்பெற்ற சிவத்தலமாகும். ஸ்வர்ணமுகி நதிக்கரையில் அமைந்துள்ள இக்கோவிலில், ராகு-கேது தோஷ நிவர்த்தி பூஜைகள் மற்றும் காலசர்ப்ப தோஷ பரிகாரங்களுக்கு மிகவும் பெயர் பெற்றது. இது தென் கைலாசம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்குள்ள சிவலிங்கம் வாயு வடிவில் காளஹஸ்தீஸ்வரராக மக்களால் வழிபடப்படுகிறது. இங்கு சிவபெருமானுக்கு 'ஞானபிரசுனாம்பிகை' என்ற பெயரில் அம்பாள் அருள்பாலிக்கிறார்.
இந்தியாவில் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களின் போது திறந்திருக்கும் ஒரே கோவில் இதுவாகும். மற்ற அனைத்து கோவில்களும் கிரகண நேரத்தில் மூடப்பட்டிருக்கும்.
இக்கோவில் ராகு-கேது பூஜைக்குப் பிரபலமானது. இந்தப் பூஜையைச் செய்வதன் மூலம், கிரகணங்களை ஏற்படுத்தும் தெய்வங்களான ராகு மற்றும் கேதுவின் ஜோதிட விளைவுகளிலிருந்து மக்களைக்காக்க முடியும் என்று நம்பப்படுகிறது.
இவ்வளவு சிறப்புவாய்ந்த இந்த கோவிலில் வெள்ளி நாகர் சிலை வைத்து 500 ரூபாய்க்கு செய்யப்படும் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜை முற்றிலும் நிறுத்தப் படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வெள்ளி விலை உயர்வால் கோவிலில் தற்போது நடக்கும் 500 ரூபாய் ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையை முற்றிலுமாக ரத்து செய்துவிட்டு, இனி மேல் ராகு-கேது பூஜை வெறும் 100 ரூபாய்க்கு மட்டுமே செய்யப்படும் என ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனிலும் ரூ.100 கட்டண ராகு-கேது பூஜையில் வெள்ளி நாகங்கள் இருக்காது. அதாவது இந்த குறைந்த கட்டணப் பூஜையில், வழக்கமான வெள்ளி நாகர்களுக்குப் பதிலாக, பிற பூஜைப் பொருட்களைக் கொண்டு சாஸ்திரோக்தமாகப் பூஜை நடத்தப்படும்.
இந்த சலுகை முதன்மையாக ஸ்ரீகாளஹஸ்தி தொகுதியில் உள்ள, வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்கும் உள்ளூர் ஏழை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அதாவது ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை அன்று வெள்ளை ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஸ்ரீகாளஹஸ்தி மற்றும் மண்டல சுற்று வட்டார கிராம மக்கள் அனைவரும் 100 ரூபாய் ராகு-கேது பூஜை டிக்கெட் வாங்கி பூஜையில் பங்கேற்கலாம்.
அதேபோல் தினமும் ஒரே நேரத்தில் நடக்கும் ராகு-கேது கூட்டுப்பூஜையில் சுமார் 2000 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். அதாவது காலையில் 1000 பக்தர்கள், மாலையில் 1000 பக்தர்கள் பங்கேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.100 கட்டண ராகு-கேது பூஜை டிக்கெட் நேரிலும், ஆன்லைனிலும் கிடைக்கும். ராகு-கேது பூஜை தினமும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
ரூ.5 ஆயிரம் கட்டண ராகு-கேது பூஜை டிக்கெட் ரூ.6 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதுதவிர ரூ.750, ரூ.1500, ரூ.2500 ராகு-கேது பூஜை டிக்கெட்டுகளின் விலை உயர்த்தப்படாமல் வழக்கம் போல் இதே நிலையில் தொடரும். சிறப்பு தரிசன கட்டணம் ரூ.500 செலுத்தி (கருவறையில்) மூலவர் தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு இனிமேல் (இலவசமாக) லட்டு, வடை பிரசாதம் வழங்கப்படும்.
அதேபோல் பக்தர்கள் காணிக்கையாக வழங்கும் தங்கம், வெள்ளி பொருட்களை புகைப்படங்களாக கோவிலின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ள ஸ்ரீகாளஹஸ்தி கோவில் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது கோவில் கவுண்டர்களில் நேரடியாக டிக்கெட் பெற்றுக் கொள்ளலாம்.