காஞ்சீபுரம் என்றாலே காமாட்சி அம்மன் மற்றும் ஏனைய முக்கியமான பிரபலமான சில ஆலயங்களே நினைவுக்கு வரும். ஆனால் சிறப்பான ஆன்மீக வரலாறுகளையும் சிற்பங்களும் கொண்ட அதிகம் அறியப்படாத பல கோவில்கள் இங்கு உண்டு. அதில் ஒன்று தான் காஞ்சிபுரம் சொக்கீசுவரர் கோயில் (கௌசிகீசம்). இது காஞ்சிபுரத்திலுள்ள சிவன் கோயில்களில் ஒன்றாகும்.
சோழ மன்னர் காலத்திய இக்கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தின் அன்னசத்திரம் அருகே உள்ளது. காமாட்சி கல்யாண மண்டபத்தை ஒட்டியவாறு கிழக்கு நோக்கும் சன்னதியாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலில் கிடைத்த கோப்பரகேசரி வர்மன் காலத்திய கல்வெட்டு ஒன்று, இது கட்டப்பட்ட காலம் 10 ம் நூற்றாண்டு எனக் குறிக்கிறது. முழுவதும் கருங்கற்களால் கட்டப்பட்டு கற்றளி கற்கோயிலாக அறியப்பட்ட இக்கோயில் குறிப்புகள் காஞ்சி புராண படலத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
சிறிய கோவில் என்றாலும் இதிலுள்ள சிறப்புகள் நிறைய. கவனிப்பாரற்ற நிலையில் இருந்த இக்கோயில் தற்போது தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் புத்துயிர் பெற்றுள்ளது.
தீயவர்களான சும்பன் நிசும்பன் என்னும் அசுரரை அழிக்கும் பொருட்டு உமாதேவியார் கருஞ்சடையிலிருந்து தோன்றிய கௌசிகீசகி அம்மன் அசுர வதம் செய்தபின் ஈஸ்வரனை வழிபட்ட தலம் இது. காஞ்சிநகரின் காவல் தெய்வமாக அருள் புரியும் கௌசிகீசகி அம்மன் பெயரில் கௌசிகீஸ்வரர் எனவும் இத்தல இறைவன் அழைக்கப்படுகிறார்.
தலவரலாற்று குறுஞ் சிற்பங்கள் அழகிய வடிவில் பெருமளவில் உள்ளது இக்கோவிலின் தனிச்சிறப்பு. இங்குள்ள பழமையான கரிகால சோழப் பிள்ளையார், மூஷிக வாகனத்துடன் பூதகணங்கள் சூழ காட்சியளிப்பது விசேஷம். அசைந்தாடும் வேப்ப மரமும் அரச மரமும் இங்கு தலவிருட்சமாக உள்ளது.
கருவறை அர்த்தமண்டபம், ஒற்றை அடுக்கு உருண்டை வடிவ விமான கோபுரத்துடன் அழகாக கட்டப்பட்டுள்ளது. கம்பீரமாக காட்சி தரும் சொக்கீஸ்வரருடன் காமாட்சி அம்மனும் இருப்பது வேறெங்கும் காண முடியாதது. கருவறை மேல் விதானத்தில் நாகம் சந்திரனை விழுங்கும் காட்சி புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.
சுற்றியுள்ள கோட்டங்களில் மேற்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மாவும் அருள் பாலிக்க, யோக நரசிம்மரையும் காணலாம். மேலும் 3500 வருடப் பழமையான மாமரத்தின் கீழ் காமாட்சியம்மன் ஏகாம்பரநாதரை வழிபடும் காட்சி உள்ளிட்ட பஞ்சபூத தலங்களின் புராண வரலாற்றின் காட்சிகளை அழகிய குறுஞ்சிற்பங்களாக இங்கு ரசிக்கலாம். ஒரே இடத்தில் பஞ்சபூதங்கள் சிறப்பை விளக்கும் கோவில் இது மட்டுமே என்ற சிறப்பு இச்சிறிய கோவிலுக்கு உண்டு.
காஞ்சி மகாப்பெரியவரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சிறப்புக்குரிய இக்கோவிலில், மாதந்தோறும் பிரதோஷம், சிவராத்திரி போன்ற சிவ ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுகிறது.
காஞ்சிபுரம் சென்றால் காமாட்சி அம்மனை தரிசித்து உடன் அருகே உள்ள இந்தக் கோவிலுக்கும் சென்று இயற்கை சூழலில் சோழர் காலத்து அழகிய கட்டடக்கலை மற்றும் சிற்பங்களை ரசிப்பதுடன் ஈசன் உடனுறையும் அம்மன் அருளையும் பெற்றுத் திரும்பலாம்.