தினசரி ஏதாவது ஒரு வகை கீரையை உணவுடன் சேர்த்துக் கொள்வது ஆரோக்கியத்திற்கு அடித்தளம் அமைக்கும் என பலரும் பரிந்துரைப்பதைப் பார்க்கிறோம். ஆனால் வீட்டில் பலரும் கீரை என்றாலே முகம் சுழிப்பதையும் பார்க்கிறோம். எனவே அதிக சத்து நிறைந்த பசலைக் கீரையை சேர்த்து கவர்ச்சிகரமான கலரில், சுவையான, அனைவரும் விரும்பி உண்ணும்படி இட்லி தயாரிப்பது எப்படி என்பதை இங்கு பார்க்கலாம்.
1. பசலைக் கீரை இட்லி:
தேவையான பொருட்கள்:
* இட்லி அரிசி 2 கப்
* உளுத்தம் பருப்பு 1 கப்
* பசலைக் கீரை இலைகள் 1 கப்
* வெந்தயம் 1½ டீஸ்பூன்
* உப்பு தேவையான அளவு
செய்முறை:
உளுத்தம் பருப்புடன் வெந்தயத்தை கலந்து, அரிசியையும் பருப்பையும் தனித் தனியாக நான்கைந்து மணி நேரம் ஊற வைக்கவும். இரண்டையும் தனித் தனியாக மிக்ஸியில் அரைத்தெடுத்து, ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை பத்து மணி நேரம் நொதிக்க விடவும். பசலை இலைகளை கழுவி, சுத்தப்படுத்தி கொதிக்கும் நீரில் மூன்று நிமிடங்கள் போட்டு எடுக்கவும். பின் குளிர்ந்த நீரில் அலசி, மிக்ஸியில் மசிய அரைத்து, இட்லி மாவுடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். இட்லித் தட்டில் நெய் தடவி, மாவை ஊற்றி இட்லிகளை வார்த்தெடுக்கவும்.
***************
2. சம்மந்தி சட்னி:
தேவையான பொருட்கள்:
* துருவிய தேங்காய் பூ 1 கப்
* சிவப்பு நிற காய்ந்த மிளகாய் 5
* புளி ஒரு சிறு துண்டு
* சின்ன வெங்காயம் உறித்தது 12
* உப்பு தேவையான அளவு
* கறிவேப்பிலை ஒரு இணுக்கு
* மிளகாய்த் தூள் ¼ டீஸ்பூன்
* தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்
செய்முறை:
காய்ந்த மிளகாய்களை சூடான வாணலியில் போட்டு ஒரு நிமிடம் வறுத்தெடுக்கவும். மிக்ஸியில் மிளகாய், புளி, உப்பு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டு கொர கொரப்பாக அரைக்கவும். அதனுடன் தேங்காய் துருவல், மிளகாய் பொடி சேர்த்து மீண்டும் அரைக்கவும். இது ஒரு தண்ணீர் சேர்க்காத ட்ரை சட்னியாதலால், தேங்காய் எண்ணெய் சேர்த்து கொர கொரப்பாக அரைத்தெடுக்கவும். சூடான சாதம், இட்லி, தோசை போன்றவற்றிற்கு சுவையான சைட் டிஷ் இந்த சம்மந்தி சட்னி.
பசலைக் கீரை இட்லிக்கு சம்மந்தி சட்னி சேர்த்து உண்ணும்போது உடலுக்கு ப்ரோட்டீன், கார்போ ஹைட்ரேட்ஸ், ஆரோக்கியமான கொழுப்பு, நார்ச் சத்து, வைட்டமின்கள், மினரல்கள் போன்ற அனைத்து ஊட்டச் சத்துக்களும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை!!