சென்னை கொட்டிவாக்கத்தில் நாட்கோ காலனியில் அமைந்திருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பாண்டுரங்க விட்டலன் கோவில் மஹா கும்பாபிஷேகம் இன்று (14.07.25) நடக்கிறது. ஸ்ரீ பாண்டுரங்கன் இந்த இடத்தில், தான் குடி கொள்ள தேர்ந்தெடுத்த வரலாறே வியப்பூட்டுவதாக உள்ளது.
யூனியன் கார்பைட் நிறுவனத்தில் பணியாற்றிய 27 பேர் கொட்டிவாக்கத்தில் 1997இல் இடம் வாங்கி குடி வந்தார்கள். தாங்கள் குடியிருக்கும் நாட்கோ காலனியிலேயே பாண்டுரங்கனுக்கு ஒரு கோவில் கட்டி பிரதிஷ்டை செய்வது அவர்களது நோக்கமாக இருந்தது. அதற்காக ஒரு பாண்டுரங்கன் சிலையை செய்து வாங்கினார்கள். ஆனால் கோவில் கட்டும் விஷயத்தை உடனே செயல்படுத்த இயலாததால், அந்த விக்கிரகத்தை கொட்டிவாக்கத்தில் உள்ள வேம்புலி அம்மன் கோவிலில் கொண்டு போய் வைத்தார்கள்.
2000 ஆம் வருடம் வேம்புலி அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் வந்தது. அப்போது கோவிலைச் சேர்ந்தவர்கள் அந்த பாண்டுரங்கன் விக்கிரகத்தை உடனே எடுத்துப் போகா விட்டால், அதை அங்கேயே ஒரு சன்னதியில் பிரதிஷ்டை செய்ய வேண்டியிருக்கும் என தெரிவித்தனர்.
உடனே நாட்கோ காலனியை சேர்ந்தவர் ஒருவர், தன் வீட்டிலேயே அந்த விக்கிரகத்தை கொண்டு போய் வைத்துக் கொண்டார். ஆனால் விக்கிரகங்கள் வீட்டில் வைத்துக் கொண்டால் வழிபாடுகள் சரிவர நடைபெறாது என்பதால், 2000 ஆம் வருடமே ஆகஸ்ட் மாதம் நாட்கோ காலனி சொஸைட்டிக்கு சொந்தமான ஒரு இடத்தில் சின்னதாக ஒரு கோவில் கட்டி அந்த விக்கிரகத்தைக் கொண்டு வைத்து பிரதிஷ்டை செய்தனர்.
அப்போது மலேசியாவுக்குக் கொண்டு போவதற்காக செய்யப்பட்டிருந்த ஒரு பிள்ளையார் விக்கிரகமும், ஐயப்பன் விக்கிரகமும், அங்கே கொண்டு செல்ல இயலாததால் இவர்களிடம் கொடுக்கப்பட, அந்த இரண்டு விக்கிரகங்களையும் ஒரு சன்னதி கட்டி பிரதிஷ்டை செய்தனர். கோவில் ஆரம்பித்த காலத்தில் பாண்டுரங்கனுக்கு என்று ஒரு சன்னதியும் விநாயகர், ஐயப்பனுக்கென்று ஒரு சன்னதியும் ஆக இரண்டு சன்னதிகள் மட்டுமே இருந்தன.
இந்தக் கோவிலில் இருக்கும் பாண்டுரங்கன் விக்கிரகத்தில் ஒரு விசேஷம். பண்டரிபுரத்தைப் போலவே இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு காட்சியளித்தாலும், வலது கையில் ஒரு புல்லாங்குழல் வைத்திருக்கிறார். அவருடைய ஆடை அலங்காரத்தில் புல்லாங்குழல் மறைந்து போய் விடுவதால், அதை அபிஷேகத்தின் போது மட்டுமே பார்க்க முடியும். கையில் புல்லாங்குழலுடன் காட்சியளிப்பதால் தான் இவருக்கு கிருஷ்ண பாண்டுரங்க விட்டலன் என்ற திருநாமம் வந்ததாம். இந்தக் கோவிலில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் ஸ்ரீ சத்யநாராயண பூஜை நடைபெறுகிறது.
2004 இல் மற்றொரு சன்னதி ஆஞ்சநேயருக்காக ஏற்பட்டதாம். அதன் பிறகு 2025 இல் தான், ஜூலை 14 ஆம் தேதியாகிய (திங்கட்கிழமை) இன்று, இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஸ்ரீ ருக்மாயியை பாண்டுரங்கனுக்கு அருகில் பிரதிஷ்டை செய்து மஹா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
வடக்கே பண்டரிபுரம், தெற்கே தென்னாங்கூர் என்று பிரசித்தி பெற்ற பாண்டுரங்கன் கோவில்கள் இருக்கின்றன. இதைத் தவிர கல்பாக்கம் அருகே விட்டலாபுரம் கிராமத்தில் விட்டாலாபுரம் விட்டலன் கோவில் இருக்கிறது. அதை விட்டால் ஈ.சி.ஆரில் கொட்டிவாக்கத்தில் தான் பாண்டுரங்கனுக்கு கோவில் உள்ளது.
இடுப்பில் கைகளை ஊன்றிக் கொண்டு கம்பீரமாகக் காட்சியளிக்கும் ஸ்ரீ ருக்மாயி சமேத ஸ்ரீ கிருஷ்ண பாண்டுரங்க விட்டலனை தரிசித்து அவருடைய அளவற்ற அருளைப் பெறுவோம்.