வருடத்தில் ஒருநாள் மட்டுமே திறக்கப்படும் ரகசியக்கோயில்! காஞ்சிபுரத்தின் 'பிறவாதீசுவரர்' மர்மம்!


Sri Paravatheeswarar Temple
Sri Paravatheeswarar Temple
Updated on

‘நகரேஷு காஞ்சி’ என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட பெருமை உடைய நகரம் காஞ்சிபுரம். நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது இதன் பொருள். தற்போது காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முற்காலத்தில் கச்சியம்பதி, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைன காஞ்சி, புத்த காஞ்சி, திருஅத்தியூர், பல்லவேந்திரபுரி, காமபீடம், காமக்கோட்டம், பிரமபுரம், ஆதிபீடம், சிவபுரம், சத்யவிதரக்ஷேத்ரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது.

பல்லவ மன்னர்கள் கி.பி.300 முதல் கி.பி.850 வரை, அதாவது மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். இலங்கையை அடுத்த மணிபல்லவம் என்ற தீவிலிருந்து வந்த இவர்களுடைய கொடி சிம்மக் கொடியாகும்.

காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கற்றளி வகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் உலகப்பிரசித்தி பெற்ற கலைநயமிக்க அபூர்வமான கோயில்களாகும்.

இதைத் தவிர, பலரால் அதிகம் அறியப்படாமல் ஆறு அபூர்வமான கோயில்கள் காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியிலேயே அமைந்துள்ளன என்பது வியப்பான உண்மை.

கலைநயமிக்க இத்தகைய கோயில்களில் ஒன்றுதான் பிறவாத்தானேசுவரர் (பிறவாத்தானம்) என்று அறியப்படும் அருள்மிகு பிறவாதீசுவரர் கோயில். இக்கோயில் ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் மகாசிவராத்திரி அன்று இக்கோயிலுக்கு வருகை தந்து ஈசனை வழிபடுகிறார்கள்.

இதையும் படியுங்கள்:
அந்திலி அப்பன்: கருடன் தவம் செய்த பாறையில் அருள்பாலிக்கும் லட்சுமி நரசிம்மர்!

Sri Paravatheeswarar Temple

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனால் (கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சியாண்டு) அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் ஸ்ரீபிறவாதீசுவரர் ஆலயமாகும். இந்த ஆலயமும் மணற்கற்களைக் (Sand Stone) கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரண்டு அடுக்கு விமானத்தை உடைய இக்கோயிலின் கருவறை எண்கோண வடிவத்தில் காட்சி தருகிறது. முகமண்டபம் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது.

வாமதேவ முனிவர் மறுபிறப்பிற்கு பயந்து பிறவாமை வரத்தினை அளிக்குமாறு தாயின் கருவில் இருக்கும்போதே இறைவனை வேண்டியதாகவும், இறைவன் கருவிற்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்குக் காட்சி தந்து காஞ்சிக்கு வந்து எம்மை பூஜித்தால் பிறவி அணுகாது என்று அருளியதாக வரலாறு. வாமதேவரும் பூமியில் பிறந்து பின்னர் காஞ்சிக்குச் சென்று லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றதாக தல வரலாறு. இதனாலேயே இக்கோயில் ஈசன் பிறவாதீசுவார் என்ற திருநாமம் பெற்றார்.

கருவறையில் லிங்கம் காட்சி தர, பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர், பிரம்மா விஷ்ணுவோடு காட்சி தருகிறார். தேவ கோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மனும் அமைந்துள்ளனர். வெளிப்புறச் சுவர்களில் துர்கை, கஜலட்சுமி முதலான தெய்வங்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
புதுமனை புகுவோர் கவனத்திற்கு! பூமி பூஜைக்கு மண் தரும் மதுரையின் சக்திவாய்ந்த திருத்தலம்!

Sri Paravatheeswarar Temple

பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோயில் இதுவெனவும் கூறப்படுகிறது. இக்கோயில் கம்மாளத் தெருவில் பச்சைவண்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com