
ராம நவமி (Rama Navami) விஷ்ணுவின் ஏழாவது அவதாரமாக கருதப்படுகிறது. இது அயோத்தி மன்னர் தசரதன் மற்றும் ராணி கோசலையின் முதல் மகன் மற்றும் நீதி மற்றும் தர்மத்தின் உருவகமான ராமனின் பிறந்த நாளைக் கொண்டாடும் புனிதமான பண்டிகையாகும். இந்து நாட்காட்டியின்படி, பகவான் ராமர் சுக்லபட்ச நவமி திதியில் பிறந்தார். இந்த புனித நாள் ராமரின் தெய்வீக பிறப்பைக் குறிக்கிறது மற்றும் இந்தியா முழுவதும் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து சமூகங்களால் மிகுந்த பக்தியுடன் கொண்டாடப்படுகிறது.
விரத அனுஷ்டானம் :
ராம நவமி அன்று விரதம் கடைப்பிடிப்பது பக்தர்களிடையே ஆண்டாண்டு காலமாக தொடரும் பழக்கமாகும். பரிந்துரைக்கப்பட்ட விரத முறை சூரிய உதயம் முதல் சூரியன் மறையும் வரை நீடிக்கும். ராம நவமி விரதங்களில் மூன்று முக்கிய வகைகள் உள்ளன. அவை:
நைமித்திக் (சாதாரண விரதம்) - எந்த குறிப்பிட்ட காரணமோ அல்லது கடமையோ இல்லாமல் கடைப்பிடிக்கப்படுகிறது.
நித்ய (தொடர்ச்சியான விரதம்) - ஒருவரின் வாழ்நாள் முழுவதும் பக்திச் செயலாக கடைப்பிடிக்கப்படுகிறது.
காம்யா (விரும்பத்தக்க விரதம்) - ஒரு குறிப்பிட்ட வேண்டுதல் அல்லது விருப்பத்தை மனதில் கொண்டு கடைப்பிடிக்கப்படுகிறது.
பக்தர்கள் தங்கள் ஆன்மீக நாட்டம் மற்றும் தனிப்பட்ட பக்தியின் அடிப்படையில் விரத வகையைத் தேர்வு செய்கிறார்கள். பலர் நிர்ஜல (தண்ணீரற்ற) விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள், மற்றவர்கள் பலஹார (பழம் சார்ந்த) உணவைத் தேர்வு செய்கிறார்கள்.
குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்கள் ஸ்ரீராமநவமி அன்று விரதம் இருந்து ராமபிரானை மனமுருக வேண்டிக்கொண்டால் நிச்சயம் நிறைவேறும். எப்படி தசரத சக்கரவர்த்தி தவமிருந்து அழகான குழந்தையாக ராமர் கிடைத்தாரோ, அது போல் பல ஆண்டுகளாக குழந்தைக்காக தவமிருப்பவர்களுக்கு இந்த நாள் ஒரு வரமாகும்.
பூஜை செய்ய சரியான நேரம் :
ராமர் பிறந்தது புனர்பூச நட்சத்திரம், நவமி திதி. 6-ம் தேதி காலை 6 மணி முதல் 10.20 மணி வரை நவமி திதியும், புனர்பூச நட்சத்திரமும் உள்ளது. இந்த நேரத்தில் பூஜை செய்யலாம் அல்லது உங்கள் வீட்டில் மாலையில் தான் பூஜை செய்வது வழக்கம் என்றால் மாலை 6 மணிக்கு மேல் பூஜை செய்யலாம்.
நைவேத்தியம் :
ஸ்ரீராம நவமி அன்று ராமர் படத்திற்கு துளசி மாலை அணிவித்து ‘ஸ்ரீராமஜெயம்’ என்று 108 அல்லது 1008 முறை எழுதி அதையும் மாலையாக போட வேண்டும். ராமபிரானுக்கு துளசி தீர்த்தம், பானகம் உள்ளிட்டவைகளை வைத்தும் வணங்கலாம். அதுமட்டுமின்றி ராமருக்கும் பிடித்தமான நைவேத்தியம் பால் பாயாசம். பூஜையின் போது பால் பாயாசம் வைத்து வழிபாடு செய்யலாம்; அப்படி செய்ய முடியாதவர்கள் பழங்களை மட்டும் வைத்தும் வழிபாடு செய்யலாம். பூஜை முடிந்தவுடன் பிரசாதத்தை வீட்டில் உள்ள அனைவருக்கும் கொடுத்து விரதத்தை முடிக்கலாம்.
சொல்ல வேண்டிய மந்திரம் :
அன்றைய தினம் ராமர் மந்திரம் எதுவும் தெரியாதவர்கள் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற மந்திரத்தை மட்டும் 108 முறை ஜபம் செய்தால் போதுமானது. உங்களால் முடிந்தால் 1008 முறையே அல்லது அன்றைய தினம் முழுவதும் ‘ஸ்ரீராமஜெயம்’ என்ற மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கலாம்.
ராம நவமி என்பது அதர்மத்தின் (தீமை) மீது தர்மம் (நீதி) வெற்றி பெறுவதைக் குறிக்கும் ஒரு ஆழமான ஆன்மீக நிகழ்வாகும். பூஜைகள், உண்ணாவிரதம் அல்லது கோவில்களுக்குச் செல்வது மூலம் கொண்டாடப்பட்டாலும், இந்த விழா ராமரின் போதனைகள் மற்றும் மதிப்புகளை நினைவூட்டுவதாகும். ராமநவமி அன்று உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் இந்த தெய்வீக நிகழ்வை பயபக்தியுடனும் கொண்டாடத் தயாராகி, ராமரின் பிறப்பைக் கௌரவித்து, வளமான மற்றும் நீதியான வாழ்க்கைக்காக அவரது ஆசீர்வாதங்களைப் பெறுகிறார்கள்.