
சொல்லின் செல்வன் அனுமன், சீதா தேவியை கண்டு மகிழ்ந்து ஸ்ரீ ராமனை காண வரும்போதே, ‘கண்டேன் சீதையை’ என்று அனைவரையும் மகிழ்வித்தார். அதைத் தொடர்ந்து இலங்கைக்கு அணை கட்டும் வேலை தொடங்கியது. அணையைக் கட்டி முடித்த பின் ஜாம்பவான் ஸ்ரீ ராமனிடம், "பிரபோ, போதுமான அளவிற்கு அணை அகலம் இல்லை. எனவே, நம் படையை வரிசையில் நிற்க வைத்தே அனுப்ப வேண்டியிருக்கும்" என்றான்.
அதைக் கேட்ட அண்ணல் ஸ்ரீராமன், "இங்கே வா, அணையைப் பார்வையிடலாம்" என்று அவனை சமுத்திரம் பக்கம் அழைத்துச் சென்றார். சமுத்திரத்தில் வாழும் எண்ணற்ற உடல்கள் கடல் மட்டத்துக்கு வரலாயின.. அவை பல மைல் தூரம் அகலம் உடையதாக இருந்தன.
ஜாம்பவான் ஸ்ரீராமரிடம், "பிரபோ ஜலஜந்துக்கள் நீர் பரப்பில் வந்ததால் நீர் பரப்பே தெரியவில்லை. அதோடு, அவற்றின் மீது கால் வைத்தால் அவை உள்ளே சென்று விடும். படையினர் சமுத்திரத்தில் மூழ்க வேண்டியதுதான்" என்றார். ஜல ஜந்துக்களோ, ‘கண் இமைத்தால் ஸ்ரீராம பிரானின் தரிசனம் போய்விடுமோ’ என்று எண்ணி, தங்களது கண்களை இமைக்காமலும் அசைக்காமலும் பக்திப் பெருக்குடன் கடல் மட்டத்தில் மீதே இருந்தன.
ஸ்ரீராமர் ஜாம்பவானிடம், "நீ விரும்பியபடியே ஒரு கல்லைப் போட்டு அந்த ஜந்துக்கள் உள்ளே போய்விடுகின்றதா என்று பரிசோதித்துப் பார்" என்றார்.
ஜாம்பவானுக்கு அப்போதுதான் எல்லாம் புரிய ஆரம்பித்தது. உடனே படையினரை அக்கரைக்குச் செல்லுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சிலர் வான் வழியே சென்றனர். மற்றும் சிலர் கட்டப்பட்ட அணையின் உதவியால் அக்கரை போய் சேர்ந்தனர். மற்றவர்கள் ஜல ஜந்துக்கள் மீதே நடந்து சென்று இலங்கையை அடைந்தனர். ஸ்ரீ ராமனுக்கு அணை கட்ட பிறர் உதவி தேவையா? இதன் மூலம் ஜாம்பவான் எல்லாவற்றையும் புரிந்து கொண்டார்.
இதிலிருந்து அறிவது, வான் வழியே சென்றவர் ஞான யோகத்தை பின்பற்றுபவர். அணையின் மீது நடந்து சென்றவர் கர்ம யோகத்தைப் பின்பற்றுபவர். ஜல ஜந்துக்களின் மீது சென்றவர் பக்தி யோகத்தைப் பின்பற்றுபவர். இறைவனின் திருவருளால் பக்தி மார்க்கத்தின் மூலம் ஆயிரமாயிரம் மக்கள் மிக எளிதாக முக்தியாகிய கரையை அடைகிறார்கள்.