
வைணவர்களுக்கு கோயில் என்றால் அது திருவரங்கம்தான். திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இங்குதான் முதலில் வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கப்பட்டது. அதனால்தான் பூலோக வைகுண்டம் என இத்தலம் அழைக்கப்படுவதன் காரணமாகும். திவ்ய தேச பெருமாள் கோயில்களில் திருச்சி அரங்கநாதர் சுவாமி கோயிலில்தான் அதிக பாசுரங்கள் (247) பாடப்பட்டுள்ளன.
திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் 1,600 ஆண்டுகளுக்கு மேலான பழைமையான கோயில். ஆனால், இன்றும் அது மெருகு குறையாமல் உள்ளது. பரந்து விரிந்த இக்கோயில் வளாகத்தில் அமைந்துள்ள ஏழு சுற்று மதில்களின் வாயில்களாக 21 கோபுரங்கள் அமைக்கப்பட் டுள்ளன. இவற்றுள் மிகப் பெரிதான ராஜகோபுரம், 72 மீட்டர் (236 அடி) உயரத்துடன், தென்னிந்தியாவிலேயே பெரிய கோபுரமாக விளங்குகிறது. இது 17ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதானாலும், 1987ம் ஆண்டுதான் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டது. சோழநாட்டு காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள முதல் திவ்யதேச திருத்தலம் இது.
12 ஆழ்வார்களில் 11 ஆழ்வார்கள் விஜயம் செய்த ஒரே திவ்ய தேசம் இது. சாதிய பாகுபாடு இல்லாத கோயில். 12 ஆழ்வார்களில் ஒருவர் திருப்பன் ஆழ்வார். இவர் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர். அவரும் அரங்கநாதரை புகழ்ந்து பாசுரங்கள் பாடியுள்ளார்.
பொதுவாக, வீணையை படுக்கை வசத்தில் வைத்தே வாசிப்பாளர்கள். ஆனால், இத்தலத்தில் ஆரம்பத்திலிருந்து வீணையை நேராக வைத்து ‘விஜய ரங்க சொக்கநாதர்’ என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
ஸ்ரீரங்கம் கோயிலைச் சுற்றி 9 தீர்த்தங்கள் உள்ளன. கோயிலின் உள்ளே இருப்பது சந்திர புஷ்கரணி தீர்த்தம். சாபம் நீங்கப் பெற்ற சந்திரனின் பெயரில் வந்தது இத்தீர்த்தம். அதனை மையமாக வைத்து எட்டு திசைகளில் 8 தீர்த்தங்கள் உள்ளன.
இக்கோயிலைச் சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க, கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாகக் காட்சியளிக்கும். இந்த 21 கோபுரங்களையும் ஒன்று சேர காண முடியாது. ஆனால், பக்தர்கள் எளிதாக 21 கோபுரங்களையும் தரிசிக்கும் வகையில் ஒரு வசதி உள்ளது. இதற்கு பக்தர்கள் 50 ரூபாய் செலுத்தி ரெங்க விலாஸ் மண்டபத்தின் மேல் படிக்கட்டின் மூலம் மேல் புறத்திற்குச் செல்லலாம். அங்கிருந்து பார்க்கும் போதுதான் சாதாரணமாகப் பார்க்க முடியாத பல கோபுரங்கள் தென்படும். இங்கிருந்து பக்தர்கள் அரங்கநாதர் கோயிலில் அனைத்து கோபுரங்களையும் தரிசனம் செய்ய முடியும்.
2017ம் ஆண்டு ஐ.நா. சபையின் யுனெஸ்கோ விருதை பெற்ற முதல் தமிழ் கோயில் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில்தான். இக்கோயிலில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு பிரமிப்பூட்டும் வகையில் அமைந்துள்ளது. இதற்காகத்தான் இந்த விருது.
இந்தியாவில் முதன் முதலாக லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியது திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில்தான். 1933ம் ஆண்டு செப்டம்பர் முதல் தேதி இந்த லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியது. தேசிகாச்சாரி சுவாமிகள் என்பவர் இதனை தொடங்கினார். இதில் கிடைத்த பணம் கோயில் சீரமைப்புப் பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. இதற்கு பிறகுதான் கேரள மாநிலத்தில் இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் 1967ம் ஆண்டு லாட்டரி சீட்டு விற்பனை தொடங்கியது.
வருடத்தில் 322 நாட்களும் பெருமாளுக்கு விசேஷம் என்பது திருவரங்கத்தில்தான். இதில் 21 நாட்கள் நடைபெறும் மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி மிகவும் முக்கியமானது. அது மட்டுமல்ல, பெருமாள் வீதியில் உலா வரும்போது அவருக்கு முன்பாக தமிழ் மறை ஓதுவரும் வருவது இங்குள்ள சிறப்பாகும். ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசியன்று இங்கே 15 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வருகை தருகின்றனர்.
திருவரங்கத்தில் பள்ளிக்கொண்டிருக்கும் பெருமாள் அணிந்திருக்கும் காலணிகள் தேய்மானத்திற்குப் பிறகு ஸ்ரீரங்கம் திருக்கொட்டாரம் என்னும் இடத்தில் தூணில் மாட்டி வைத்திருப்பதைக் காணலாம். இந்த செருப்பை செய்வதற்கெனவே தொண்டர்கள் இருக்கிறார்கள். இரண்டு செருப்பையும் தனித் தனியாக வெவ்வேறு இடத்தில் செய்வார்கள். இருப்பினும் இரண்டுமே ஒன்றுபோலவே இருக்கும் என்பது இக்கோயில் அதிசயம்.