

ஶ்ரீ சத்ய சாயிபாபா தனது தாய் பற்றி மிக அபூர்வமாகவே தனது அருளுரைகளில் கூறி இருக்கிறார்.
அவற்றில் அவர் கூறிய விஷயங்களை இங்கு பார்ப்போமா?
06-05-2001 ஈஸ்வரம்மா தினத்தன்று சத்ய சாயிபாபா பிருந்தாவனில் ஆற்றிய அருளுரை:
"சாயியின் பெருமை உலகெங்கும் பரவத் தொடங்கிய போது ஈஸ்வரம்மா ஒரு நாள் என்னிடம் வந்து கூறினார்; 'ஸ்வாமி! நமது குழந்தைகள் படிப்பதற்காக புக்கபட்ணம் வரை நடந்து செல்வதைப் பார்க்க வருத்தமாக இருக்கிறது. தயவு செய்து ஒரு சின்ன பள்ளியை இங்கு தொடங்குங்கள்.'
அவரது விருப்பத்தை நிறைவேற்ற ஒரு சிறிய பள்ளி தொடங்கப்பட்டது. கொஞ்ச காலம் கழித்து அவர் மருத்துவமனை ஒன்று வேண்டும் என்றார். புக்கபட்ணத்திற்கு தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வதைக் காண்பதைத் தன்னால் பொறுக்க முடியவில்லை என்றார். அவரது விருப்பப்படி ஒரு மருத்துவமனை தொடங்கப்பட்டது. அந்த சிறிய பள்ளி இன்று மிகப் பெரிய பல்கலைக்கழகமாக ஆகி விட்டது. அந்த சிறிய மருத்துவமனை இன்று சூப்பர் ஸ்பெஷாலிடி ஹாஸ்பிடலாக மாறி விட்டது.
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
இது அன்னை ஈஸ்வரம்மாவின் சத்ய சங்கல்பத்தினாலும் சாயியின் நித்ய சங்கல்பத்தினாலுமே நடந்தேறின.
அவரது கடைசி ஆசை இந்த கிராமத்திற்கு நல்ல குடிநீர் வேண்டும் என்பது தான். வறண்டு போன ஆழமான கிணற்றிலிருந்து பெண்கள் நீரை இறைத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது என்றார். நான் உடனே கிராமத்திற்கு குடிதண்ணீர் வசதியைச் செய்தேன். இப்போது ஶ்ரீ சத்யசாயி வாட்டர் சப்ளை ப்ராஜெக்ட் மூலமாக அனந்தப்பூர் மாவட்டம் முழுவதற்கும் குடிநீர் வழங்கப்படுகிறது.
உங்களது தாயின் அன்பு உங்களுக்குக் கிடைத்தால் உங்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ, அவர் மறைந்து முப்பது ஆண்டுகள் ஆகியும் கூட அவரது அன்பை அவர் ஸ்வாமிக்குப் பல விதமாகத் தெரிவித்து வருகிறார். இன்றும் கூட அவர் தனது பூத உடலுடன் நடமாடிக் கொண்டிருக்கிறார். சில சமயம் அவர் என்னிடம் வந்து எனது உடல்நலம் பற்றிய ஒரு தாய்க்குரிய கரிசனத்துடன் விசாரிக்கிறார். ஒரு சமயம் கைக்குட்டை யார் கொடுத்தாலும் நான் வாங்கி விடக் கூடாது என்று அவர் என்னை எச்சரித்தார். நான், 'அவர்கள் பக்தியுடன் கொடுக்கும் போது அதை வாங்கித் தானே ஆக வேண்டும்' என்றேன். உடனே அவர், 'ஸ்வாமி, நிஜமாகவே கோடிக்கணக்கில் நல்ல மனிதர்கள் இருக்கிறார்கள். ஆனால் சில தீயவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் கைக்குட்டையில் விஷத்தைத் தடவி உங்களுக்குக் கொடுக்க அதனால் உங்கள் உதடுகளைத் துடைத்துக் கொண்டால் அது அபாயத்தில் முடியும்' என்றார்.
நான் அவர் கூறுவதைக் கடைப்பிடிப்பதாக உறுதிமொழி கொடுத்தேன்.
இன்றும் கூட அவர் எனது அறையில் தோன்றுகிறார். எனது அறையில் தூங்கும் பையன்கள் கூட அவரைப் பார்த்திருக்கின்றனர். எப்போதெல்லாம் அவர் என் அறைக்கு வந்து பேசுகிறாரோ அப்போதெல்லாம் அவர்கள் தங்கள் படுக்கையில் உட்கார்ந்து அதைக் கேட்கிறார்கள்.
ஒரு நாள் பட்டு வேஷ்டியை இறுக அணிந்து கொள்ள ஒரு பெல்ட்டைத் தருமாறு பையன்களைக் கேட்டேன். அவர்கள் பக்கிளுடன் இருந்த பெல்ட் ஒன்றைத் தந்தனர். அனால் அதை பட்டுத் துணி வழியாக நன்கு பார்க்கும்படி இருந்தது. அதை அணிய நான் விரும்பவில்லை. ஏனெனில் மக்கள் அனைவரும் சாயிபாபா தங்க பெல்ட்டை அணிந்திருக்கிறார் என்று நினைப்பார்கள் என்பதால்!
பிறகு ஒரு நாள் ஈஸ்வரம்மா அதிகாலையில் வந்து என்னிடம் பேசத் தொடங்கினார். உடனே சத்யஜித், சாயிநாத், சீனிவாசன் ஆகியோர் எழுந்து நான் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறேன் என்பதை அறிய விரும்பினார்கள். அவர்களுக்கு ஒரே ஆச்சரியம் – லிப்ட் மூடப்பட்டு, பூட்டப்பட்டு சாவி அவர்கள் கையில் இருக்கும் போது எப்படி என் அறைக்கு ஒருவர் வர முடியும் என்று!
நான் 'கிரஹ அம்மாயி (அன்னை ஈஸ்வரம்மா) வந்திருக்கிறார்' என்றேன். அவர்களிடம் அம்மா கொடுத்த பெல்ட்டைக் காண்பித்தேன். அதில் பக்கிள் இல்லை.
இது போன்ற பல அருமையான தாய்மார்கள் உலகில் இருக்கிறார்கள். ஆனால் என்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஈஸ்வரம்மா தான்! அவரை எனது தாயாராக நான் தேர்ந்தெடுத்தேன். இது தான் அன்னை ஈஸ்வரம்மாவிற்கும் எனக்குமான நெருங்கிய உறவாகும்.”
(கூட்டத்தினரின் கைதட்டல்)
குறிப்பு: ஶ்ரீ சத்ய சாயிபாபாவின் தாயார் ஈஸ்வரம்மா 06-05-1972 அன்று மறைந்தார். 1977ம் ஆண்டு முதல் மே மாதம் 6ம் தேதி ஈஸ்வரம்மா தினமாக சாயி பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.