

தனது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற விழாவில் 24-11-1965 அன்று பிரசாந்தி நிலையத்தில் பகவான் ஶ்ரீ சத்ய சாயிபாபா (Sri sathya sai baba story) ஆற்றிய அருளுரை:
ஆத்ம ஞானத்தைப் பெற விரும்பிய பக்தன் ஒருவன் அடர்ந்த காட்டின் உள்பகுதியில் சென்றான். அப்போது அவன் சிங்கம் ஒன்றின் கர்ஜனையைக் கேட்டான். சிங்கத்திடமிருந்து தப்பிக்க ஆலமரம் ஒன்றின் உச்சிக்கு அவன் ஏறினான். ஆனால், சிங்கம் அவனைப் பார்த்து விட்டது. அது மரத்தின் அடியில் சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போது மரத்தின் மேல் இருந்த ஒரு கரடி அவனைத் தாக்க வந்தது. ஆகவே அவன் கிளைகளைப் பிடித்தவாறே நழுவி கீழே இறங்கலானான். அதிர்ஷ்டவசமாக ஆலமரத்தில் தொங்கிக் கொண்டிருந்த இரு விழுதுகளை அவன் பிடித்தான். ஒவ்வொரு கையிலும் ஒரு விழுதைப் பிடித்துக் கொண்ட அவன் அந்தரத்தில் ஆடலானான். அப்போது அவன் இரு எலிகள் விழுதுகளில் ஊர்ந்து வருவதைக் கண்டான்.
வெள்ளை எலி ஒன்று, கறுப்பு எலி ஒன்று! அது விழுதுகளைக் கடிக்கக் கடிக்க அவன் உயிருக்கே அபாயம் என்ற நிலை ஏற்பட்டது. அந்த அபாய நிலையில் மேலே இருந்த கிளை ஒன்றில் இருந்த தேன் கூட்டிலிருந்து சில தேன் துளிகள் கீழே சொட்டி விழ ஆரம்பித்தன. தேன் துளிகள் விழுவதைப் பார்த்த அந்த மனிதன் தன் நாக்கை நீட்டி அதன் இனிய சுவையைச் சுவைக்க விரும்பினான். ஆனால் ஒரு துளி கூட அவன் நாக்கில் விழவில்லை.
மிகுந்த ஏமாற்றம் அடைந்த அவன், “ஓ! குருவே என்னை வந்து காப்பாற்றுங்கள்” என்று உரக்கக் கூவினான். அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த அவனது குரு அவனது ஓலக் குரலைக் கேட்டு அந்த மரத்தின் அருகே வந்தார். வில்லையும், அம்பையும் எடுத்து அம்புகளை விடுத்து சிங்கத்தையும், கரடியையும் அவர் விரட்டினார். பயந்து போன எலிகளும் விழுதை விட்டு விட்டு ஓடி விட்டன. பக்தன் மரண பயத்திலிருந்து விடுபட்டான். குரு அவனைத் தனது ஆஸ்ரமத்திற்கு அழைத்துச் சென்று அவனுக்கு ஞானோபதேசம் செய்தார்.
இதுதான் உங்கள் ஒவ்வொருவருடைய கதையும் கூட! இந்த உலகம்தான் நீங்கள் அலைந்து திரியும் அடர்ந்த காடு. சிங்கம்தான் பயம். அதுவே உங்களை உலகியல் வாழ்வு என்ற சம்சார மரத்தில் ஏறச்செய்கிறது. கவலை என்ற கரடிதான் சம்சாரக் கிளைகளில் உங்களை பயமுறுத்துகிறது. நீங்கள் நம்பிக்கை மற்றும் ஏமாற்றம் என்னும் விழுதுகளின் வழியாக உலகப் பற்று மற்றும் பிணைப்புகளில் விழுந்து இறங்குகிறீர்கள்.
இரவு மற்றும் பகலே இரண்டு எலிகளாகும். அவையே வாழ்க்கையின் ஆயுள் காலத்தை அரிப்பவையாகும். இதற்கிடையே நீங்கள் அகங்காரம் மற்றும் நான் என்ற உணர்ச்சி என்னும் இனிய தேன் துளிகளைப் பிடித்துச் சுவைக்க விரும்புகிறீர்கள்.
தேன் துளிகளைச் சுவைக்க முடியாது. அவை அற்பமானவைதான் என்பதை கடைசியில் உணர்ந்து அனைத்தையும் துறந்த நிலையில் நீங்கள் உரக்கக் கத்தி குருவை அழைக்கிறீர்கள். குருவானவர் உங்களின் உள்ளிலிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ வந்து தோன்றி உங்களை பயத்திலிருந்தும் கவலையிலிருந்தும் விடுவித்துக் காக்கிறார்.
நீங்கள் மிகவும் உண்மையாகவே அழைத்தால் அதற்கான பதில் நிச்சயம் கிடைக்கும். கீழான எல்லா ஆசைகளையும் உதறுங்கள். உள்ளார்ந்த இதயத்திலிருந்து அழையுங்கள். நீங்கள் இப்போது செய்வது போல சமையல் அறையின் ஒரு கோடியில் உள்ள பூஜை அறையிலிருந்து உதடுகளால் மட்டும் பிரார்த்தனை செய்யாதீர்கள்.
நீங்கள் சமையல் அடுப்பில் தயாராகிக் கொண்டிருக்கும் உணவுப் பதார்த்தங்களின் வாசனையை முகர்ந்தவாறே அவற்றைப் பார்த்தவாறே பிரார்த்தனை செய்கிறீர்கள். புலன்கள் மீதுள்ள பற்று என்னும் விஷய வாசனைகளால் கடவுள் பற்றிய உங்கள் எண்ணம் மாசுபடுத்தப்படுகிறது. நீங்கள் சொல்வதற்கும் செய்வதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது. உங்கள் திறமை எவ்வளவு ஆனால் நீங்கள் அடைவது எவ்வளவு என்பதற்கான இடைவெளி அது.
இறைவனை குருவை அழைப்பது போல அழையுங்கள். அவர் உபதேசம் செய்வார், உணர்வூக்கம் தருவார். உண்மையாகவும், நம்பிக்கையுடனும் அழைக்கும் எந்த ஒருவரையும் அவர் எப்போதும்!