

பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவுடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி என் அம்மா கூறியதை இங்கு எழுத விரும்புகிறேன்.
என்னுடைய அம்மா, பகவான் பாபா (Puttaparthi Sri Sathya Sai Baba) பிறந்த அதே 1926ஆம் ஆண்டு, கார்த்திகை மாதம் பிறந்தவர். 2016ல் காலமானார். அவருக்கும் இப்பொழுது 100வது ஆண்டு ஆகும். ஆகையால், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவுடன் என் அம்மாவின் அனுபவத்தை இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
அம்மாவுக்கு எழுபது வயது இருக்கும்போது ஹைதராபாத்தில் இருக்கும் என் சகோதரி வீட்டுக்குச் சென்றிருந்தார். என் சகோதரி, புட்டபர்த்தி சாய்பாபாவின் மீது தீவிர ஈடுபாடு கொண்டவர். அதனால் அவரைப் பற்றி எப்பொழுதும் பேசிக்கொண்டிருப்பார்.
அம்மாவுக்கு இதய பலவீனம் மற்றும் பிரஷர், சுகர் எல்லாம் இருந்தது. ஒரு நாள் தெருவில் நடந்துகொண்டிருக்கும்போது கல் தடுக்கி கட்டை விரலில் ரத்தம் வந்துவிட்டது. அதற்கு மருந்துகள் போட்டும் சரியாக குணமாகாமல் பட்ட காலிலேயே படும் என்பதுபோல் அடிக்கடி இடித்துக்கொண்டு நகம் பெயர்ந்து, ரத்தம் கட்டி கருப்பாக இருந்தது. தொடர்ந்து வலியும் இருந்தது. புண்ணும் ஆறவில்லை. கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஆகிவிட்டன.
அம்மா மிகவும் பயந்த சுபாவமும் பூஞ்சையான உடல்வாகும் கொண்டவர். ஹாஸ்பிடல், ஊசி என்றால் பயப்படுவார். சுகர் வேறு இருந்ததால், கட்டை விரலை எடுக்கும்படி ஆகிவிட்டால் என்ன செய்வது என்று மிகவும் கவலைப்பட்டுக் கொண்டு இருந்தார். மிகவும் பக்தி உணர்வு கொண்டவர். அந்தக் கால மனுஷி; ஆகையால், தங்கள் குலதெய்வத்தையும் காஞ்சி காமாட்சி அம்மனையும் வழிபடுவார். பாபாவிடம் அவ்வளவு நாட்டம் செலுத்தவில்லை.
தன் மகள் சொல்கிறாளே என்று கால் விரலுக்காக அவரிடம் பிரார்த்தனை செய்தார். "ஹே! பாபா! எல்லோரும் நம்புவதுபோல் உங்களுக்கு உண்மையிலேயே சக்தி இருந்தால் என் கால் காயம் விரைவில் குணமாக வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார். பிறகு சொந்த ஊருக்கு வந்துவிட்டார்.
இரண்டு மூன்று நாட்கள் கழித்து கோயிலுக்குச் செல்லும்போது, காலில் அவ்வளவாக வலி இல்லை. மேலும், காற்றில் ஒரு காகிதம் பறந்துவந்து இவர் காலுக்கு அருகில் விழுந்திருக்கிறது. அதை மிதிக்காமல் என்ன என்று எடுத்துப் பார்த்திருக்கிறார். பார்த்தால் புட்டபர்த்தி சாய்பாபாவின் படம். அதை எடுத்து, துடைத்து கண்ணில் ஒத்திக்கொண்டு வீட்டுக்கு எடுத்து வந்து ஒரு அட்டையில் ஒட்டி பூஜை அலமாரியில் வைத்து, தினமும் பூ போட்டு வழிபட்டு வந்தார்.
ஒரு வாரத்திற்குள், காலில் அடிபட்ட தழும்பு, ரத்தக்கட்டு, நகத்தில் பிளவு எதுவும் இல்லாமல் சுத்தமாக ஆறிவிட்டது. அம்மாவுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. நாங்கள் சென்றபோது எங்களிடம் சொல்லி நெகிழ்ந்தார். ஏற்கனவே மகா பெரியவா, ரமண மகரிஷி அவர்களிடம் பக்தி கொண்டவர். புட்டபர்த்தி பகவானிடமும் பூரண நம்பிக்கையுடன் பக்தி செலுத்த ஆரம்பித்தார். அவரைப் பின்பற்றி நாங்களும் பாபாவிடம் பக்தி செலுத்தி வருகிறோம்.
- லலிதா பாலசுப்பிரமணியன்