கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்க வணங்க வேண்டிய இறைவன் யோக ஹயக்ரீவர். காஞ்சிபுரம் மாவட்டம், செட்டிப்புண்ணியத்தில் அமைந்துள்ளது ஸ்ரீதேவநாத பெருமாள் திருக்கோயில். இத்தலத்தில் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் நான்கு திருக்கரங்களுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் காட்சி தருகிறார்.
‘ஹயம்’ என்றால் குதிரை. ‘க்ரீவம்’ என்றால் கழுத்து. கழுத்து வரை குதிரை உருவம் கொண்ட தெய்வம் இவர். மூலவர் வரதராஜ பெருமாள் மற்றும் ஸ்ரீ ஹேமாபுஜவல்லி தாயார். உத்ஸவர் யோக ஹயக்ரீவர் எனும் தேவநாதப் பெருமாள். குதிரை முகமும் மனித உடலும் கொண்ட மகாவிஷ்ணுவின் அம்சம் இவர். இவரை கல்வி தெய்வம் எனக் குறிப்பிடுகிறார்கள். இப்பெருமானை வணங்க கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கலாம். இவர் ஞானத்திற்கு அதிபதி. நேரில் இத்தலம் வர முடியாத பக்தர்களுக்காக யாகத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட ஹயக்ரீவர் படம், பிரசாதம் மற்றும் பேனாக்கள் கொண்ட பாக்கெட்டை தபாலில் அனுப்பி வைப்பதும் இத்தலத்தில் சிறப்பாக நடைபெறுகிறது.
யோக ஹயக்ரீவருக்கு திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி துளசி அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செய்கிறார்கள். கல்வியில் சிறந்து விளங்கவும், ஞாபக சக்தி அதிகரிக்கவும், தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெறவும் இங்கு நிறைய பிள்ளைகள் தங்கள் பெற்றோருடன் வந்து பூஜையில் கலந்து கொள்கிறார்கள். திருமணத்தடை நீக்கவும், வியாபாரம் செழிக்கவும் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
மது, கைடபன் என்னும் அசுரர்கள் பிரம்மாவிடம் இருந்து வேதங்களைப் பறித்துக்கொண்டு பாதாள உலகத்திற்கு சென்றனர். அதனை மீட்டுத் தரும்படி பிரம்ம தேவன், மகாவிஷ்ணுவை வேண்டினார். மது கைடபர்கள் குதிரை முகம் உடையவர்கள். ஆதலால் மகாவிஷ்ணுவும் குதிரை முக அவதாரம் எடுத்து அவர்களுடன் போர் புரிந்து வேதங்களை மீட்டு பிரம்மாவிடம் கொடுத்தார். குதிரையின் தலையும் மனித உடலும் கொண்ட தனிச்சிறப்பு கொண்ட ஹயக்ரீவராக மகாவிஷ்ணு அவதாரம் எடுத்தார்.
இந்த அவதாரத்தின் நோக்கம் அசுரர்களால் திருடப்பட்ட வேதங்களை மீட்டெடுப்பது ஆகும். 1480ம் காலகட்டத்தில் வாழ்ந்த மத்வ குருவான மகான் ஸ்ரீ வாதிராஜர் ஹயக்ரீவரை உபாசனை தெய்வமாகக் கொண்டவர். இவர் அனுதினமும் ஹயக்ரீவருக்கு படைக்கும் பிரசாதத்தை ஹயக்ரீவரே வந்து உண்பாராம்.
கல்வியும், செல்வமும் பெருக இங்குள்ள ஹயக்ரீவரை பக்தர்கள் வணங்குகிறார்கள். இக்கோயிலில் புதன்கிழமைகளில் சிறப்பு பூஜை நடத்தப்படுகிறது. இவருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது சிறப்பாகக் கூறப்படுகிறது. இவரை வணங்கி வர, கல்வியில் முன்னேற்றமும், ஞாபக சக்தி கூடுவதும், தேர்வு எழுதும்போது துணை நிற்பார் என்ற நம்பிக்கையிலும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஹால் டிக்கெட் வாங்கிய கையோடு தேர்வு எழுதப்போகும் பேனாவுடன் இங்கு வந்து ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து அவருடைய ஆசீர்வாதத்துடன் எடுத்துச் செல்கின்றனர். இதன் காரணமாக செட்டிபுண்ணியம் ஹயக்ரீவர் கோயில் சிறப்புப் பெற்று உள்ளது.
இக்கோயிலில் உள்ள ஸ்ரீராமர் சிலையின் கணுக்காலில் ஒரு ரட்சை காணப்படுகிறது. இம்மாதிரி அமைப்பு வேறு எந்த ராமர் கோயில் சிலையிலும் இல்லை என்று கூறப்படுகிறது. தாடகை வதத்தின்போது ராமருக்கு திருஷ்டி படாமல் இருப்பதற்காக விசுவாமித்திர முனிவர் இந்த ரட்சையை கட்டினார் என்று கூறுகிறார்கள்.
இங்குள்ள ஸ்ரீ யோக ஹயக்ரீவரையும், ஸ்ரீதேவநாதப் பெருமாளையும், தாயாரையும், சீதா ராமரையும் வழிபட, குடும்பத்தில் அறிவும், ஞானமும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு புதன்கிழமையிலும், திருவோணம் நட்சத்திரத்தன்றும் ஹயக்ரீவருக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்து ஏலக்காய் மாலை சாத்தி வழிபட ஞானமும், அறிவும் மேம்படுவதுடன் ஞாபக சக்தியும் அதிகரிக்கும்.