தர்காவுக்குள் நுழையும் பெருமாள்! ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் மற்றும் கிள்ளை தர்கா வரலாறு!

மாசி மகத்தில் நிகழும் அரிய அதிசயம்: ஆதி நவாப் வரலாற்று பின்னணியும் ஆன்மீக சிறப்புகளும்!
பூவராக சுவாமி - Killai Dargah
பூவராக சுவாமி - Killai Dargah
Updated on

ந்து முஸ்லீம் ஒற்றுமையை போற்றும் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பூவராக சுவாமி கோயில். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிள்ளையில் அமைந்துள்ள ஹஸ்ரத் சையத் ஷா ரஹ்மத்துல்லா தர்காவுக்குள் பெருமாள் நுழைவது வழக்கம்.

தர்காவுக்குள் நுழையும் பெருமாள் என்பது தமிழகத்தில் மத நல்லிணக்கத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் ஒரு நிகழ்வாகும். கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோவில் மாசிமகத் திருவிழாவின்பொழுது இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெறுகிறது.

அதேபோல் வைகாசி மாதத் தேரோட்டத்தின் பொழுது இஸ்லாமிய மக்கள் தேருக்கான கொடியை வழங்கி, பிரசாதங்களை பெற்றுச் செல்லும் வழக்கம் நீண்ட காலமாகவே தொடர்கிறது. இது மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது.

திருவிழாவின் தீர்த்தவாரிக்குச் செல்லும் பெருமாள் உற்சவர், வழியில் உள்ள இந்த தர்காவுக்குள் அழைத்துச் செல்லப்படுகிறார். தர்காவுக்குள் வரும் பெருமாளை இஸ்லாமியப் பெரியவர்கள் ஹிந்து முறைப்படி தாம்பூலத் தட்டில் பழம், அரிசி, பட்டு வஸ்திரம் சாற்றி மரியாதையுடன் வரவேற்கின்றனர்.

தர்கா நிர்வாகிகளிடம் நாட்டுச் சர்க்கரை, தீபம் உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டு, உலக அமைதிக்காக சிறப்பு பிரார்த்தனைகளும் செய்யப்படுகின்றன. வரலாற்று ரீதியாக ஆதி நவாப் என்ற இஸ்லாமியப் பெரியவரின் நோய் தீர்த்ததற்காக, அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக பல தலைமுறைகளாக இந்த வழக்கம் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

திருமாலின் பத்து அவதாரத்தில் வராக அவதாரம் சிறப்பு பெற்றது. புகழ்பெற்ற 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி பெருமாள், மாசி மகத் திருவிழாவின் போது கடலாடக் கிள்ளை கடற்கரைக்கு எழுந்தருளுவார். இந்த வீதி உலாவின் போது கிள்ளையில் அமைந்துள்ள இந்த தர்காவுக்குள் பெருமாள் நுழைவது வழக்கம்.

பூவராக சுவாமி - Killai Dargah
பூவராக சுவாமி - Killai DargahAI Image

ஸ்ரீமுஷ்ணம் வராகப் பெருமாள் கோவிலில் ஏழு நிலைகளுடன் ஒன்பது கலசங்களுடன் கூடிய ராஜகோபுரம் மேற்கு நோக்கிய நிலையில் நிற்கிறது. இங்குள்ள பெருமாள் சாளக்கிராமத்தால் ஆன சுயம்பு மூர்த்தியாக நின்ற கோலத்தில் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். இருப்பினும் இவரது திருமுகம் தெற்கு நோக்கி அமைந்துள்ளது.

மூலவரான பூவராக சுவாமி மனித உடலும் வராக முகமும்(பன்றி) கொண்டு சிறிய வடிவில் சுயம்புவாக அருள்பாலிக்கிறார். தாயார் பெயர் அம்புஜவல்லி (லட்சுமி தாயார்).

ராகு, கேது, குரு தோஷங்களை நிவர்த்தி செய்யும் தலமாக போற்றப்படுகிறது. ஸ்வயம் வியக்த க்ஷேத்திரம் என்று சொல்லப்படும் 8 திருத்தலங்களில் இதுவும் ஒன்று. நாங்குநேரி, திருவரங்கம், ஸ்ரீமுஷ்ணம், திருவேங்கடம், புஷ்கரம், நைமிசாரண்யம், பத்ரிநாத், முக்திநாத் ஆகிய 8 திருத்தலங்களும் ஸ்வயம் வியக்த சேத்திரங்களாகும். திருமலை திருப்பதிக்கு செல்பவர்கள் முதலில் இங்குள்ள வராகரை தரிசித்து விட்டு செல்வது வழக்கம்.

பெயர் காரணம்:

'முஷணம்' என்றால் நமக்குத் தெரியாமல் அபகரித்துச் செல்லுதல் என்று பொருள். இந்த திருத்தலத்திற்கு வரும் அடியவர்களின் பாவங்களை எல்லாம் அவர்களுக்கே தெரியாமல் இந்த ஊர் அபகரித்து விடுவதால்(முஷணம் செய்வதால்) 'ஸ்ரீமுஷ்ணம்' என்று பெயர் பெற்றது.

விஜயநகரப் பேரரசின் சிற்றரசரான மன்னர் அச்சுதப்ப நாயக் என்பவரால் இக்கோவில் கட்டப்பட்டது.

இதையும் படியுங்கள்:
சுவாமிமலை தங்க கவசம் வைரவேல் தரிசனம்! காணக் கண் கோடி வேண்டும்!
பூவராக சுவாமி - Killai Dargah

புராண வரலாறு:

மகாவிஷ்ணு வராக அவதாரம்(காட்டுப்பன்றி) எடுத்து இரண்யாட்சன் என்ற அசுரனிடம் இருந்து பூமியை மீட்டார். கடலுக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்த பூமியை தன்னுடைய இரண்டு கோரைப்பற்களில் தாங்கியபடி மேலே எழுந்து வந்து, மீண்டும் வான் வெளியில் நிலைபெறச் செய்தார் என்று புராண வரலாறு கூறுகிறது.

தன்னுடைய ஒரு விழிப் பார்வையால் அரச மரத்தையும், மறு விழிப் பார்வையால் துளசிச் செடியையும் உருவாக்கினார் என்றும், அவர் உருவாக்கிய அரசமரம் இந்த ஆலயத்தின் பின்புறம் உள்ள நித்ய புஷ்கரணி திருக்குளத்தின் தென்கரையில் உள்ளது. இதுவே இத்தலத்தின் விருட்சமாக போற்றப்படுகிறது.

பொதுவாக சங்கு சக்கரம் ஏந்தி 4 கரங்களுடன் காட்சி தரும் மகாவிஷ்ணு இங்கு வராக மூர்த்தியாக இரண்டு கரங்களுடன், அதுவும் இடுப்பில் கையை வைத்தபடி காணப்படுகிறார். அவருடன் ஸ்ரீதேவி பூதேவி தாயாரும் காணப்படுகின்றனர்.

பூவராகப் பெருமாளை வணங்கிட வாக்கு வன்மை, நிலைத்த செல்வம், மக்கட்பேறு, உயர்ந்த பதவி, நோயற்ற வாழ்வு, நீண்ட ஆயுள் பெற்று வாழலாம் என்று புராணங்கள் கூறுகின்றன.

இதையும் படியுங்கள்:
சோழர்கள் வழிபட்ட உக்கிர காளி கோயில்கள்: அறியப்படாத ரகசியங்களும் வரலாற்று அற்புதங்களும்!
பூவராக சுவாமி - Killai Dargah

பிரசாதம்:

பன்றியின் விருப்ப உணவான கோரைக்கிழங்கு மற்றும் அரிசி மாவு, வெல்லம், நெய் சேர்த்து செய்யப்படும் 'முஸ்தா சூரணம்' பிரசாதமாக வழங்கப்படுகிறது.

எப்படி செல்வது?

கடலூரில் இருந்து 60 கிலோமீட்டர் தூரத்திலும், விருத்தாச்சலத்தில் இருந்து 24 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. விருதாச்சலம், சிதம்பரம் ஆகிய ஊர்களிலிருந்து ஸ்ரீமுஷ்ணத்துக்கு நகரப் பேருந்து வசதி உள்ளது.

கோவில் காலை 6:00 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், தமிழகத்தின் தொன்மையான ஆன்மீக வரலாற்றுடன் பிணைந்துள்ள மத நல்லிணக்கத்தின் உன்னத பாரம்பரியத்தை உணர்வதுடன், உங்கள் வாழ்வில் உள்ள ராகு, கேது மற்றும் குரு தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கான ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் தரிசன வழிமுறைகளையும் முழுமையாகப் பெறலாம்.

logo
Kalki Online
kalkionline.com