பூலோக வைகுண்டத்திற்கு முந்திய ஆதி ரங்கம்! ஸ்ரீரங்கப்பட்டினம் கோவில் வரலாறு தெரியுமா?

பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் முதன்மையான ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதசுவாமி கோவிலின் ஆன்மீக மற்றும் வரலாற்று அதிசயங்கள்.
ஆதி ரங்கன் - Srirangapatna Temple
ஆதி ரங்கன் - Srirangapatna Temple
Updated on

ஸ்ரீரங்கப்பட்டினம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தில், காவிரி நதியால் சூழப்பட்ட அழகிய தீவு நகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோவில், தென்னிந்தியாவின் மிக முக்கிய பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் முதலாவதாகப் போற்றப்படுகிறது. பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சிரங்கத்தைப் போலவே, காவிரி நதி பிரியும் இடத்தில் அமைந்துள்ள இத்தலம், ஆன்மீகமும் வரலாறும் சங்கமிக்கும் அற்புத பூமியாகும்.

தல வரலாறு மற்றும் பெருமைகள்:

காவிரித் தாய், திருமாலின் மேல் கொண்ட பக்தியால் அவரைத் தன் மடியில் தாங்க வேண்டித் தவமிருந்த இடம் இதுவென்பது புராண வரலாறு. இத்தலத்தில் பெருமாள், "ஆதி ரங்கன்" என்று அன்போடு அழைக்கப்படுகிறார். அப்படி அழைக்கப்படுவதற்கான காரணம் காவிரி நதியின் போக்கில் அமைந்துள்ள 5 ரங்கநாதர் ஆலயங்களில் இதுவே முதலாவது என்பதால் "ஆதி ரங்கம்" என்று அழைக்கப்படுகிறது.

இங்கிருந்துதான் காவிரி பாயும் திசையில் ரங்கநாதர் தலங்கள் தொடங்குவதாக நம்பிக்கை.காவிரி நதி உருவாக்கும் மூன்று தீவுகளில் அமைந்த ரங்கநாதர் ஆலயங்களில் இதுவே முதன்மையானது என்பதால், இவரைத் தரிசித்த பிறகே மத்திய ரங்கனையும் (சிவசமுத்திரம்), அந்திய ரங்கனையும் (ஸ்ரீரங்கம்) தரிசிக்கும் பேறு கிடைக்கும் என்பதும் ஆன்மீக நம்பிக்கை.

கோவில் அமைப்பு மற்றும் மூர்த்தியின் சிறப்பு

விஜயநகர மற்றும் ஹோய்சள கட்டடக்கலையின் அற்புதக் கலவையாக இக்கோவில் திகழ்கிறது. கருவறையில் ஸ்ரீ ரங்கநாதசுவாமி, ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் (அனந்த சயனம்) கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். பெருமாளின் திருவடியின் அருகில் காவிரித் தாய் கைகூப்பி வணங்கியபடி அமர்ந்திருக்கும் காட்சி இத்தலத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும். தாயார் ஸ்ரீ ரங்கநாயகி என்ற திருநாமத்துடன் தனிச்சந்நிதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு நல்வாழ்வு அருள்கிறார்.

ஆதி ரங்கன் - Srirangapatna Temple
ஆதி ரங்கன் - Srirangapatna Temple

வரலாற்றுச் சிறப்பு

கங்கை வம்சத்து மன்னர் திருமலை யாரால் கி.பி. 949-இல் அடிக்கல் நாட்டப்பட்ட இக்கோவில், பின்னர் வந்த ஹோய்சள மற்றும் விஜயநகர பேரரசர்களால் விரிவுபடுத்தப்பட்டது. மைசூர் உடையார் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கிய இக்கோவில், ஹைதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆட்சிக் காலத்திலும் பெரும் மரியாதையுடன் பாதுகாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

திப்பு சுல்தான் இக்கோவில் பெருமாள் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தார். அவர் கோயிலுக்கு அளித்த வெள்ளிப் பாத்திரங்கள், தூபக் கரண்டிகள் மற்றும் திப்பு சுல்தானால் வழங்கப்பட்ட 'பச்சை நிறப் பட்டுத் தொட்டில்' போன்றவை இன்றும் கோவிலின் வரலாற்றுச் சான்றுகளாகப் போற்றப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
இரவுதோறும் பவானி அம்மனைக் காண கருவறைக்குள் வரும் 5 அடி நீள பாம்பு!
ஆதி ரங்கன் - Srirangapatna Temple

முதன்மையான திருவிழாக்கள்

வைகுண்ட ஏகாதசி: மார்கழி/தை மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவின்போது, பரமபத வாசல் (சொர்க்கவாசல்) திறக்கப்பட்டு, பெருமாள் ரத்னாங்கி அலங்காரத்தில் அருள் பாலிக்கிறார்.

ஸ்ரீரங்க ஜெயந்தி: ரங்கநாதசுவாமி இத்தலத்தில் எழுந்தருளிய நாளைக் குறிக்கும் வகையில் வைசாசி (வைகாசி) மாதத்தில் வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சுவாமிக்கு சிறப்புத் திருமஞ்சனமும், முத்துக்கள் மற்றும் ரத்தினங்கள் பதித்த 'ஸ்ரீரங்க முடி' கிரீட அலங்காரமும் நடைபெறும்.

தங்க கருடோத்சவம் (Bangarada Garudotsava): வைகாசி பௌர்ணமி அன்று நடைபெறும் இத்திருவிழாவில், சுமார் 8 அடி உயரமுள்ள தங்கத் தகடு பதித்த கருட வாகனத்தில் பெருமாள் வீதி உலா வருவார்.

ரத சப்தமி பிரம்மோற்சவம் (ரதோத்சவம்): மாசி மாதத்தில் நடைபெறும் பெரிய தேர் திருவிழா இது. விழா நாட்களில் பிரஹலாதோத்சவம், கஜேந்திர மோக்ஷம் மற்றும் பிரம்மாண்ட தேரோட்டம் நடைபெறும்.

உய்யாலோத்சவம் (ஊஞ்சல் உற்சவம்): ஆடி மாதத்தில் முதன்மை ஏகாதசியை முன்னிட்டு தொடர்ந்து ஐந்து நாட்கள் பெருமாளுக்கும், அதைத் தொடர்ந்து ரங்கநாயகி தாயார் மற்றும் ஸ்ரீகிருஷ்ணருக்கும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
ஆதி ரங்கன் - Srirangapatna Temple

கோயிலின் அபூர்வ சிறப்புத்தகவல்கள்

ஏழு தலை ஆதிசேஷன்: கருவறையில் பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஆதிசேஷன் நாகத்திற்கு 7 தலைகள் இருப்பது இத்தலத்தின் மிக அபூர்வமான அமைப்பாகும் (பொதுவாகப் பெரும்பாலான தலங்களில் 5 தலைகள் மட்டுமே இருக்கும்).

பெருமாளின் விஷ்ணு வடிவங்கள்: கோயிலின் முகப்பு மண்டபத் தூண்களில் விஷ்ணுவின் 24 அவதார வடிவங்கள் (24 Forms of Lord Vishnu) மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.

காவிரியின் அமைதியான தாலாட்டிலும், பிரம்மாண்டமான மதில்களுக்கு நடுவே துயிலும் ஆதி ரங்கனின் தெய்வீகத் தோற்றமும் பக்தர்களின் மனக்கவலைகளைப் போக்கி அமைதியைத் தருகிறது. வரலாற்றுப் பெருமையும், ஒப்பற்ற ஆன்மீக அதிர்வுகளும் நிறைந்த ஸ்ரீரங்கப்பட்டினம் ரங்கநாதரின் திருவடிகளைத் தரிசிப்பது ஆன்மீகப் பயணத்தின் மகத்தான பேறாகும்.

logo
Kalki Online
kalkionline.com