நூற்றியெட்டு திவ்ய தேசங்களின் தலைநகரம் ஸ்ரீ ரங்கமே. அரங்கனுக்கு கொண்டாடப்படும் அத்தனை விழாக்களுமே வித்தியாசமானவை, விசேஷமானவை. பெரிய கோயில், பெரிய சன்னிதி, பெரிய பெருமாள், பெரிய பிராட்டியார், பெரிய திரை, பெரிய திருமேனி என இப்படி எல்லாவற்றிலும் தனித்தன்மைகள் பலவற்றை பெற்ற ஒரே கோயிலான திருவரங்கத்தில் கொண்டாட்டப்படும் ஸ்ரீராம நவமி உத்ஸவமும் தனி சிறப்பு வாய்ந்த ஒரு உத்ஸவம்தான்.
பொதுவாக, ஸ்ரீராம நவமி பங்குனி மாதம் சுக்லபட்ச நவமி அன்று கொண்டாடப்படும். ஆனால், ஸ்ரீரங்கத்தில் மட்டும் சித்திரை மாத சுக்லபட்ச நவமி அன்று கொண்டாடப்படும். கோடைத் திருநாள் என்றழைக்கப்படும் பூச்சாற்று உத்ஸவம் ஸ்ரீராம நவமியை ஒட்டிதான் இந்த பூலோக வைகுண்டத்தில் வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். பூலோகத்தில் பூத்திருக்கும் பூக்கள் எல்லாம் ‘ரங்கா என்னை சாத்திகொள், ரங்கா என்னை ஏற்றுக்கொள்’ என மனதால் வேண்டி அரங்கனை அழகு செய்யும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும். இந்த பூச்சாற்று உத்ஸவம் வெளிக்கோடை, உள்கோடை என தலா ஐந்து நாட்கள் நடைபெறும். இவ்வருடம் ஏப்ரல் 13ம் தேதி இந்த உத்ஸவம் தொடங்கியது.
வெளிக்கோடை நாட்களில் மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் மணல்வெளியில் உள்ள வெளிக்கோடை நாலு மண்டபத்திற்கு உத்ஸவர் நம்பெருமாள் எழுந்தருளி அங்கு புஷ்பம் சாத்துப்படி கண்டருள்வார். இதில் ஸ்ரீராம நவமி அன்று மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை சேரகுலவல்லி தாயாருடன் சேர்த்தி சேவை கண்டருள்வது சிறப்பு.
வருடத்தில் மூன்று முறை நம்பெருமாள் கண்டருளும் சேர்த்திகள் மூன்றுமே சிறப்பானவை. பங்குனி மாதம் ஆயில்யம் அன்று உறையூர் சென்று அழகிய மணவாளனாக கமலவல்லி நாச்சியாரோடு கண்டருளும் சேர்த்தி. மற்றொன்று, பங்குனி உத்திரத்தன்று ஸ்ரீரங்க நாச்சியாரோடு கண்டருளும் சேர்த்தி, மூன்றாவது குலசேகர ஆழ்வாரின் மகளான சேரகுலவல்லியோடு ஸ்ரீராம நவமி அன்று கண்டருளும் சேர்த்தி.
ஆழ்வார்களிலேயே ஸ்ரீராம பிரான் மீது மிகுந்த பற்று கொண்டு பல பாசுரங்கள் அருளிய ஆழ்வார் என்ற பெருமை குலசேகர ஆழ்வாருக்கு உண்டு. குலசேகர ஆழ்வார் அவதரித்தது மாசி மாத புனர்பூச நட்சத்திரத்தில், ஸ்ரீராமர் அவதரித்தது சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரத்தில். தம், ‘பெருமாள் திருமொழியில்’, பத்தே பத்து பாசுரங்களினால் ராமாயணம் முழுவதையும் பாடி களித்தவர் குலசேகர ஆழ்வார்தான்.
பெரியாழ்வார் எப்படி ஸ்ரீகிருஷ்ணனின் லீலைகளை சொல்லி சொல்லி ஆண்டாளை வளர்த்தாரோ, அவளுள் கிருஷ்ண பக்தியை வளர்த்தாரோ, அப்படித்தான் குலசேகர ஆழ்வாரும் தம் மகளான சேரகுலவல்லியிடம் ஸ்ரீ ராமரை பற்றியும் அரங்கனை பற்றியும் சொல்லி சொல்லியே தம் செல்ல மகளை வளர்த்தார்.
ஸ்ரீராமருக்கு எப்படி அரங்கனின் மீது பக்தி இருந்ததோ, அப்படித்தான் குலசேகர ஆழ்வாருக்கும் அவர் தம் மகளான சேரகுலவல்லிக்கும் ஸ்ரீராமர் மீதும் அரங்கன் மீது அப்படி ஒரு அலாதியான பக்தி இருந்தது. அந்த பக்திக்கு பரிசாக அரங்கனே ஸ்ரீ ராம நவமி அன்று சேரகுலவல்லியை திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம். அதனால்தான் ஒவ்வொரு ஸ்ரீராம நவமி அன்றும் சேரகுலவல்லியோடு சேர்ந்து இருந்து சேர்த்தி சேவை தந்து, எளிமையான, உண்மையான பக்திக்கு நாம் என்றுமே பரிசளித்தே தீருவோம் என்று காட்டிக் கொடுத்துக் கொண்டு, காட்சி கொடுத்து கொண்டிருக்கிறார் நம்பெருமாள்.