
பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் இயற்பெயர் அருண்மொழித்தேவர். (சே - காளை, சேக்கிழார் - காளைக்கு உரியவர். உழவுத் தொழில் செய்த குடும்பத்தில் பிறந்து அரசரின் அமைச்சராகவும் சிவனடியாராகவும் விளங்கியதால் இவர் இப்பெயரில் அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது) பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கினார். அநபாய சோழன் என்று அழைக்கப்பட்ட இரண்டாம் குலோத்துங்க சோழன், சேக்கிழாரை தனது அவையில் முதலமைச்சராக ஆக்கிக் கொண்டார். அவரது சிறந்த அறிவைப் பாராட்டி அவருக்கு, ‘உத்தம சோழ பல்லவன்’ என்று பட்டம் வழங்கினார்.
சோழ மன்னன் கேளிக்கைகளில் ஈடுபட்டு காலத்தை வீணடிப்பதை எண்ணி வருந்திய சேக்கிழார், சுந்தரர் பாடிய திருத்தொண்டத் தொகையிலிருந்து சிவபெருமானின் தொண்டர்களான நாயன்மார்களின் வரலாற்றை எடுத்துக் கூறினார். இதனால் ஈர்க்கப்பட்ட மன்னன், நாயன்மார்களின் வரலாற்றை விரிவாக எடுத்துச் சொல்லும்படி அவரிடம் வேண்டினான்.
சேக்கிழார், ஒவ்வொரு நாயன்மார்களைப் பற்றிய தகவல்களையும் ஊர் ஊராகச் சென்று சேகரித்தார். அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று அங்குள்ள மக்களிடம் கேட்டு நிறைய குறிப்புகளைத் திரட்டினார். திரட்டிய தகவல்களைத் தொகுத்து ‘திருத்தொண்டர் புராணம்’ அதாவது, பெரிய புராணம் இயற்ற தில்லை வந்தடைந்தார். அங்கு நடராஜப் பெருமானை வணங்கி ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில், ‘உலகெலாம்’ என்று சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்க, ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கரியவன்’ என்று தொடங்கி பெரிய புராணத்தை இயற்றினார் சேக்கிழார். சித்திரை மாதம், திருவாதிரை நட்சத்திரத்தன்று பெரிய புராணத்தைப் பாடி முடித்த சேக்கிழாரை, அரசன் தனது பட்டத்து யானை மீது ஏற்றி, தானும் அமர்ந்து அவருக்கு சாமரம் வீசியபடி புராணத்தோடு ஊர்வலம் வந்தான்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த சேக்கிழார் பெருமான், கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருநாகேஸ்வரம் என்ற தலத்தில் அருளும் ஈசன் மீது மிகவும் பற்று வைத்து, அவரை அடிக்கடி சென்று தரிசித்து வந்தார். அமைச்சர் பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தான் பிறந்த ஊரான சென்னை குன்றத்தூரில், திருநாகேஸ்வரம் போலவே ஒரு சிவன் கோயிலை எழுப்பினார். இந்தக் கோயிலுக்கு, ‘வட நாகேஸ்வரம்’ என்று பெயர் சூட்டினார். நாகத்தின் கீழ் லிங்கம் இருக்கும்படி அமைத்து, ‘நாகேஸ்வரர்’ என்று பெயர் சூட்டி, இடைவிடாமல் ஆராதனை, திருவிழா நடக்க மானியம் அளித்தார்.
சேக்கிழார் பிரதிஷ்டை செய்த சிறப்பு வாய்ந்த லிங்கத் திருமேனி, சில ஆண்டுகளுக்கு முன்பு சேதம் அடைந்தது. பின்னமாகிய அந்த லிங்கத்தை நீக்கி விட்டு, வேறு லிங்கத்தை பிரதிஷ்டை செய்ய ஆலய நிர்வாகிகளும் பக்தர்களும் முடிவு செய்தனர். எனவே, மேல் பாகம் சேதமடைந்த லிங்கத்தை அகற்றி, கோயில் குளத்தில் வைத்துவிட்டு, பிராகாரத்தில் இருந்த அண்ணாமலையாரை எடுத்து கருவறையில் பிரதிஷ்டை செய்தனர்.
நாகேஸ்வரரை வைத்ததும் குளத்து நீர் முழுவதும் சிவப்பாக மாறியது. பக்தர்கள் காரணம் அறியாமல் திகைத்தனர். அன்று இரவு சிவனடியார் ஒருவரின் கனவில் தோன்றிய சிவபெருமான், குளத்தில் இருந்து லிங்கத்தை எடுத்து பழையபடி பிரதிஷ்டை செய்யும்படி அருளினார். அதன்படி பழைய சேதமடைந்த லிங்கத்தை குளத்திலிருந்து எடுத்து கருவறையில் பிரதிஷ்டை செய்ததும் குளத்து நீர் இயல்பாக மாறியது. சிறிது காலம் கருவறையில் வைத்து பூஜிக்கப்பட்ட அண்ணாமலையாரையும், சேக்கிழாரின் தனி சன்னிதியையும் இப்போதும் இந்தக் கோயிலில் தரிசிக்கலாம். ராகு தோஷ நிவர்த்தி தலமாக இந்தக் கோயில் விளங்குகிறது.