

கதிரவன், பகலவன், ஞாயிறு என அனைவரும் போற்றி வணங்கும் கடவுள் சூரிய பகவான். இதிகாசம், வேதம், புராணங்கள், உபநிடதம், கவிதை ஆகிய அனைத்திலும் சூரியனின் முக்கியத்துவம் பேசப்பட்டுள்ளது. தமிழர் திருவிழா என்று விமரிசையாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகை, ஆங்கில வருட புத்தாண்டின் நடுவே பிறக்கிறது. அன்றைய தினம், உழவுத் தொழிலுக்கு வளம் சேர்க்கும் சூரியன் வடதிசை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்க, உத்தராயணமும் ஆரம்பமாகிறது. தை மாதம் முதல் ஆனி மாதம் வரை, ஆறு மாத காலமாக பயணம் தொடரும் காலகட்டத்தில், அதிகமான பகல் நேரம் மற்றும் குறைவான இரவு நேரம் இருக்கும்.
சூரியன் ஒன்பதாவது ராசியான தனுசுவிலிருந்து, பத்தாவது ராசியான மகரத்திற்குள் பிரவேசிக்கும் நாளே, மகர சங்கராந்தியாக நமது முன்னோர்களால் கொண்டாடப்பட்டது. மை தடவிய கண்ணாடி அல்லது டெலஸ்கோப் மூலமாக பூமியிலிருந்து பார்க்கையில், சூரியன் பிரம்மாண்டமாகத் தெரியும். மனிதனை பிரம்மிக்க வைக்கக்கூடிய சூரியனின் விட்டம் 86,4000 மைல்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.
வட்ட வடிவமான சூரியன் ஒரு முனையிலிருந்து மத்திய குறுக்கு ரேகை வழியாகப் பிரயாணம் செய்து எதிர் முனையை அடைய எடுக்கும் நேரம் 23 ஆண்டுகள், 8 மாதங்கள், 5 நாட்களாகும். சூரியன், உலகத்திலேயே முதன் முதலாக வழிபடும் தெய்வமாகும். சூரியன் இன்றி இவ்வுலகில் மனிதர்களும் மற்றைய உயிரனங்களும் கிடையாது. சூரியனின் சக்தியே ஆக்கல், அழித்தல் மற்றும் வாழ்வு, தாழ்வு ஆகியவற்றுக்கு ஆணிவேர் போல செயல்படுகிறது. எனவே, சூரியனை, நம் முன்னோர்கள் கடவுளாக எண்ணி வழிபட்டனர்.
சூரியனால் கிடைக்கும் நற்பயன்கள் அதிகம். மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத எல்லாவற்றையும் கொடுக்கின்ற சூரியனைப் பாராட்டி நன்றி தெரிவிக்கும் வகையில், சூரியோதயம் சமயம் பொங்கலிடப்படுகிறது. இந்நன்னாளே பொங்கல் திருநாளாகும். இந்தியாவில் மட்டுமல்லாது, ரோமாபுரியில் சூரியனின் பெயரில் காவியம்; கிரேக்க நாடு வழிபடும் தெய்வம் ஜீயஸ் எனப்படும் சூரியன்; ஜப்பான் நாட்டு தேசிய சின்னம் சூரியன் என பிற நாடுகளிலும் சூரியன் வழிபடப்படுகிறது.
சிலப்பதிகாரத்தின் மங்கல வாழ்த்துப் பாடலில் வரும் ‘ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்’ என்கிற புகழ்மிக்க வரிகள், சூரியனை போற்றுவதைக் குறிக்கிறது. உலகிற்கே தாய் சூரியன் ஆதலால், அதிலிருந்து பிறந்ததுதான் பூமி மற்றும் கிரகங்கள். உயிர் கொடுத்த தாயைக் கொண்டாடுவது போல, அனைத்து உயிர்கள் வளர்ச்சிக்கும் ஆதாரமான சூரியனைக் கொண்டாடும் நாளே தை மாதம் முதல் தேதியாகும்.
சூரியன் இல்லையென்றால் உயிர்கள் இல்லை; பயிர்கள் இல்லை; உலகமே இல்லை. சூரியன் பயணிக்கும் ரதத்தில் பூட்டியிருக்கும் ஏழு குதிரைகள், வாரத்திலுள்ள ஏழு கிழமைகளைக் குறிக்கின்றன. சூரியனின் மறு பெயரான ரகு என்பதிலிருந்து, ரகு வம்சம் ஆரம்பமானது. புகழ் பெற்ற பகீரதனும், ஸ்ரீராமரும் ரகு வம்சத்தில் பிறந்தவர்களாவர். தை மாதம் முதல் நாள் வரும் தித்திக்கும் தைப்பொங்கல், மகர சங்கராந்தியாக வட மாநிலத்திலும், பொங்கல் பண்டிகையாக தென்னாட்டிலும் சூரியனை வணங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.