
ஆலயம் திருக்கருகாவூர் கரு காக்கும் அன்னை கர்ப்பரட்சாம்பிகை
மகப்பேறு என்ற பாக்கியத்தை அருளும் சர்வ சக்தியுடைய பரமேஸ்வரி அருள் பெருக்கும் தலமே கர்ப்பரட்சாம்பிகை ஆலயம்.
தண்டகாரண்யம் என்று அழைக்கப்பட்ட இப்பகுதியில் நித்துருவர் என்னும் முனிவர் மனைவி வேதிகையுடன் ஆசிரமம் அமைத்து வசித்து வந்தார். தம்பதியர் பல வருடங்களாக குழந்தைப் பேறு இல்லாததால் விரதம் காத்து இத்தலத்து ஈஸ்வரனையும், ஈஸ்வரியையும் உள்ளம் உருக வழிபட்டனர்.
இறை அருளால் வேதிகை கருவுற்றாள். ஒரு சமயம் முனிவர் வெளியே சென்றிருந்தபோது, ஊர்த்துவபாதர் என்ற ரிஷி ஆசிரமத்திற்கு வந்தார். கருக்கொண்டிருந்ததால் வேதிகையை மசக்கை உபாதை வருத்திக் கொண்டிருந்தது. ஆகவே அவளால் ரிஷிக்குச் சரியான முறையில் சேவை புரிய இயலவில்லை. அது புரியாத ரிஷி, கோபம் கொண்டு சாபமிட, அதனால் அவளது கரு கலைந்தது. ஆசிரமத்துக்குத் திரும்பிய நிருத்துவர் விவரம் அறிந்து பதைபதைத்தார்.
வேதிகையோ அனலில் இட்ட புழுபோல் துடித்தாள். வருத்தம் மேலிட, ஈசனையும், உமையையும் அவர்களின் சந்நிதியில் வீழ்ந்து, அருள் வேண்டி அரற்றினாள். சாபத்தினால் நழுவிய வேதிகையின் கருவை, கர்ப்பரட்சகியான அம்பாள் ஒரு குடத்தில் ஏந்தி காத்து அருளினாள்.
அவ்வாறு காக்கப்பட்ட கருவை, சிசுவாகப் பிரசவித்து மகிழ்ந்தாள் வேதிகை. ஆனால் தன் குழந்தைக்கு, அவளால் தாய்ப்பால் அளிக்க முடியாமல் போனது. அப்போது, அம்பிகையின் ஆணைப்படி தெய்வப்பசு காமதேனு தோன்றி குழந்தைக்குப் பால் தந்தருளினாள்.
தம்பதியருக்கு கர்ப்பபுரீசுவரரும், கர்ப்பரட்சகி தேவியும் காட்சி அளித்தனர். அரிய பேறுபெற்ற வேதிகை தனக்கு அருளியது போலவே, பிற பெண்களுக்கும் கருகாத்து அருள வேண்டும் என்ற வரம் கோரினாள். அன்று முதல் கர்ப்பரட்சகாம்பிகை, தன்னை வழிபடும் கர்ப்பிணிகள் சுகப் பிரசவம் காண அருள்கிறாள். அதனால் கருகாத்த நாயகி என்றும் போற்றி வணங்கப்படுகிறாள்.
ஆலய பிராகாரத்தில் முல்லைவன நாதர் என்றும் அழைக்கப்படும் கர்ப்பபுரீச்வரரின் சந்நிதியில் அமைந்திருக்கும் லிங்கத் திருமேனி, உளிபடாத சுயம்பு உருவாகும். பஞ்ச பூதங்கள் மற்றும் அமுதம் சேர்ந்து தானாக உருவானது என்கிறது கோயில் புராணம். சுயம்பு மூர்த்தியாக, புற்று மண்ணால் உருவானவர் என்பதால் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. புனுகுச்சட்டம் மட்டுமே சாற்றப் படுகிறது. தீராத நோய் கண்டவர்கள், இந்த இறைவனைப் பணிந்து புனுகுச் சட்டம் சாற்றினால் நோய் தீருகிறது.
தனி சந்நதியில் கருணை பொங்கும் முகத்துடன் அருட்காட்சி வழங்கும் கர்ப்பரட்சாம்பிகையை தரிசிக்கலாம்.
இத்தலத்தில் எவ்வாறு பிரார்த்தனை மேற்கொள்வது?
திருமணத்திற்குக் காத்திருக்கும் மகளிர், இங்கு வந்து கர்ப்பரட்சாம்பிகையின் சந்நதிப் படியை நெய்யினால் மெழுகுகிறார்கள். அந்த நெய்ப் பரவலின்மீது கோலமிடுகிறார்கள். பிறகு அன்னைக்கு அர்ச்சனை செய்கிறார்கள். மனம் உருகிய இந்த பிரார்த்தனைக்கு விரைவில் திருமணம் கைக் கூடுகிறது.
வெகு காலத்திற்குக் குழந்தைப்பேறு இல்லாத மகளிர், தொட்டில் பிரார்த்தனையை மேற்கொள்கிறார்கள். அதாவது, கர்ப்பரட்சாம்பிகையின் பாதத்தில் வைக்கப்பட்டுள்ள முருகன் விக்ரகத்தை அர்ச்சகர் மூலமாக எடுத்துத் முந்தானையில் ஏந்திக் கொள்கிறார்கள்; பிறகு அருகில் உள்ள தங்கத் தொட்டிலில் அதை இட்டு பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள். இந்த வழிபாட்டுக்குப் பிறகு அன்னையின் அருள் அவர்கள் வயிற்றில் கருவாகத் தங்குகிறது.
இவ்வாறு கர்ப்பமுற்றவர்கள், தங்களுக்கு சுகப்பிரசவம் நிகழ, சுத்தமான விளக்கெண்ணெய் எடுத்து வந்து அர்ச்சகரிடம் கொடுக்கிறார்கள். அவர் அதனை அன்னையின் பாதத்தில் வைத்து அர்ச்சித்துக் கொடுப்பார். பிரசவ வலி ஏற்படும்போது வயிற்றில் இந்த எண்ணெயைத் தடவிக் கொண்டால், எந்தக் கோளாறும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ்கிறது என்பது பல பெண்களின் அனுபவம்.
அன்னையின் அருளால் திருமணம் ஆனவர்களும், குழந்தைப் பேறு பெற்றவர்களும், அன்னைக்குத் துலாபாரம் கொடுத்தோ, புடவை சாற்றியோ தம் நன்றிக் கடனை சமர்பிக்கிறார்கள்.
கருவுக்கு உயிர் கொடுக்கும் அன்னை கருகாத்த நாயகியும், அவ்வாறு உருவான குழந்தைக்கு ஏதேனும் நோய் வருமானால் அதனைத் தீர்த்தருளும் நாயகன் முல்லைவன நாதரும் என்றும் நமக்கு உற்ற துணையாய் இருந்து அருள் புரிகிறார்கள்.
தஞ்சாவூரிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ளது திருக்கருகாவூர் கோயில்.