வேலூர் மாவட்டம், சோளிங்கரில் உள்ள கடிகாசலம் மலையில் யோக ஆஞ்சனேயர் சங்கு, சக்கரத்துடன் காட்சி தருகிறார். இவரை அமாவாசை தினத்தில் தரிசித்தால் எதிரிகள் தொல்லை, கடன் பிரச்னை மற்றும் வீண் பயம் நீங்கும்.
புராண காலத்தில் வாழ்ந்த வாமதேவர், வசிஷ்டர், அத்ரி, ஜமதக்னி, கௌதமர், பரத்வாஜர் என்ற முனிவர்கள் மோட்சமடைய விரும்பினர். இதற்காக கடிகாசலம் மலையில் நரசிம்மரை நோக்கி தவம் இருந்தனர். காலன், கேயன் என்னும் அசுரர்கள் அவர்களுக்கு இடையூறு செய்தனர் .இதில் இருந்து முனிவர்களை விடுவிக்க ஆஞ்சனேயரை அனுப்பிய நரசிம்மர் அவருக்குச் சங்கு, சக்கரத்தையும் கொடுத்து அனுப்பினார். சக்ராயுதம் மூலம் அசுரர்களை வதம் செய்தார் ஆஞ்சனேயர்.
இதன் பின் முனிவர்களின் தவம் தடையின்றி நிறைவேறியது. இறுதியில், யோக நரசிம்மர் காட்சியளித்து முனிவர்களுக்கு மோட்சமளித்தார். அவரே இந்த மலைக்கோயிலில் யோக நரசிம்மராக அருள்புரிகிறார். ஐநூறு அடி உயரமுள்ள பெரிய மலையில் யோக நரசிம்மரின் சன்னிதி உள்ளது. மலைக்குச் செல்ல ஆயிரத்து முன்னூற்று ஐந்து படிகள் உள்ளன. மலையில் இருந்து நான்கு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சோளிங்கர் கோயிலில் உத்ஸவர் பக்தவத்சலப் பெருமாள், சுந்தரவல்லி தாயாருடன் அமிர்தவல்லி தாயாருக்கும் சன்னிதி உள்ளது.
அமிர்த குளம், தக்கான் குளம் என்னும் தீர்த்தங்கள் இங்கு உள்ளன. பெரிய மலைக்கு எதிரில் உள்ள சிறிய மலையில் ஆஞ்சனேயர் கோயில் கொண்டிருக்கிறார். அக்கோயிலை அடைய நானூற்றி ஆறு படிகள் ஏற வேண்டும். யோக நிலையில் உள்ள ஆஞ்சனேயரின் கைகளில் சங்கு, சக்கரம் உள்ளன. இவரது கண்கள் பெரிய மலையில் உள்ள நரசிம்மரின் பாதங்களை நோக்கியபடி இருப்பது சிறப்பு. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனைகளை அமிர்தவல்லி தாயாரிடம் கூறினால் அவர் நரசிம்மரிடம் அதை பரிந்துரைப்பார். நரசிம்மர் கோரிக்கையை நிறைவேற்றச் சொல்லி ஆஞ்சனேயரிடம் கூறுவார். எனவே, இங்கு தாயார், பெருமாள் பின்பு ஆஞ்சனேயர் என தரிசிக்க வேண்டும்.
மன நோயாளிகள் குணமடையவும் விரும்பிய மண வாழ்க்கை, குழந்தைப் பேறு உண்டாகவும், வியாபாரம் செழிக்கவும் பக்தர்கள் வழிபட்டு அன்னதானம் செய்கின்றனர். வீடு கட்டும் பணி விரைவில் நிறைவேற மலைப்பாதையில் கற்களை அடுக்குகின்றனர். நினைத்தது நிறைவேற பௌர்ணமி அன்று மலையைச் சுற்றுகின்றனர்.
புராணத்தின்படி சப்த ரிஷியின் முன்பு தோன்றி நரசிம்மர் அவர்களுக்கு முக்தியை அருளினார். இறைவன் இருபத்தி நான்கு நிமிடங்களில் இங்கு அவதரித்ததால் இந்த மலையில் இருபத்தி நான்கு நிமிடம் பிரார்த்தனை செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். எனவே, இந்த மலைக்கு கடிகாசலம் என்று பெயர் வந்தது. கடிகை என்றால் இருபத்தி நான்கு நிமிடங்கள் மற்றும் சலம் என்றால் மலை என்று பொருள். வேலூர் மாவட்டம், திருத்தணி செல்லும் வழியில் அறுபது கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கடிகாசலம் சோளிங்கர் நரசிம்மமர் மலைக்கோயில்.