

குலதெய்வம் இல்லாத குடும்பம் கிடையாது. குல தெய்வத்தை தவறாமல் வணங்கினால், வம்சம் ஏழேழு ஜென்மங்களுக்கும் குடும்பங்களைக் காப்பாற்றும் என்பது பெரிய நம்பிக்கை.
ஏழேழு ஜென்மம் என்பது 7x7 அதாவது 49 ஜென்ம ஆண்டுகள். 49 என்பதின் கூட்டுத் தொகை 4+9 = 13. இந்த எண்தான் ஒருவருடைய வம்சத்தை நிர்ணயிக்கும் முக்கியமான எண்.
ஜென்ம காலமான 13 ஜென்மத்துடன் ஒரு வம்சம் முடிவடைகின்றது என்று நம்பப்படுகின்றது. அதாவது எந்த ஒரு வம்சத்திலுமே 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குலதெய்வம் இருக்க முடியாது என்பது தெய்வக் கணக்கு. ஏதாவது ஒரு கட்டத்தில் அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களின் வம்சத்தினருக்கு குழந்தைப்பேறு இல்லாமலோ, அகால மரணங் களினாலோ, ஆண் வம்சவிருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது காரணத்தினால் வம்சம் அழிந்துவிடும். ஆகவே ஏழேழு ஜென்மங்களுக்கு மேல் எந்த வம்சத்தினரும் இருக்கமாட்டார்கள்.
வம்சக் கணக்கு விபரங்கள்:
ஒருவருக்கு பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன், அவனுக்குப் பிறந்த மகன் என ஆண் குழந்தை மட்டுமே வம்சத்தில் கணக்கில் வரும். ஒருவருடைய சராசரி வயது 50 என்றால் கூட அவருடைய தாத்தாவின், தாத்தாவின் பெரும் தாத்தாவின் காலம் என 13 ஜென்மங்களுக்கு முந்தைய காலம் எனக் கணக்கிட்டால் 13 x 50 = 650 ஆண்டுகள் என வரும்.
யாருக்காவது 650 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த அவர் சந்ததியினர் யார் என்பது தெரியுமா? குடும்பத்தில் 13 ஆம் வம்சத்தின் பெரிய தாத்தா யார் என்பது தெரியுமா? தெரியாது. அதனால்தான் ஒரு குல தெய்வம், ஏழேழு ஜென்மங்களுக்கு, அதாவது 13 ஜென்ம காலத்துக்கு ஒரு வம்சத்தைக் காப்பாற்றும் என்ற வார்த்தை வந்தது.
மகள் திருமணம் ஆனதும் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குலதெய்வத்தை, தனது குல தெய்வமாக ஏற்க உரிமை இல்லை. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகிவிடும்.
பலருக்கு குல தெய்வம் யார் என்பது தெரியாமல் இருக்கிறது. முன்பெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், தமது மகன்களுக்கு தாம் வணங்கும் குலதெய்வம் யார், அந்த ஆலயம் எங்கு உள்ளது என்பதைக் கூறுவார்கள். சில வருடங்களுக்கு ஒரு முறையாவது தமது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று பூஜித்துவிட்டு வருவார்கள். வீடுகளில் குல தெய்வ உண்டியல் இருக்கும். அதில் தமது காணிக்கைகளை போட்டுக் கொண்டே இருப்பார்கள். அவ்வபோது தாம் போக முடியாவிடிலும், குடும்பத்தில் யார் அங்கு செல்கிறார்களோ அவர்களிடம் அந்த காணிக்கைப் பணத்தை தந்து உண்டியலில் சேர்த்து விடுமாறு கூறுவார்கள்.
தமது பிள்ளைகள் வெளியூருக்குப் போகும்போது அவர்களுக்கு குல தெய்வம் யார் என்பதைக் கூறி குலதெய்வத்தின் படத்தையும் தருவார்கள். அது மட்டும் அல்ல எந்த ஒரு நல்ல காரியமும் வீட்டில் நடக்கும்போது, முதல் பிரார்த்தனை குலதெய்வத்திற்குத்தான் நடைபெறும். அதற்குப் பின்னரே மற்ற பூஜைகள் துவங்கும்.
ஆனால் காலபோக்கில் ஏற்பட்ட நாகரீக மாற்றங்களினால் வெளியூர் செல்லும் பிள்ளைகள் குல தெய்வம் என்ற கருத்தை மறந்து விட்டார்கள். திருமணம் ஆகி வேலைக்கு சென்றதும், கிடைக்கும் விடுமுறை நாட்களிலும் தமது குடும்பத்தினருடன் சேர்ந்து வெளியே செல்வதும், வெளியூர் செல்வதும் பழக்கமாகிவிட்டது. ஆனால் சில வருடங்களுக்கு ஒரு முறையாவது குல தெய்வ ஆலயத்துக்கு சென்று வணங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவது இல்லை.
குழந்தைகள் பிறந்து அவர்களுக்கு மொட்டை அடிக்கும்போது மட்டுமே குலதெய்வத்தை தேடுவார்கள். அது தெரியவில்லை என்றால் அதுவும் ஒரு சடங்குபோல பழனி, திருப்பதி அல்லது வைத்தீஸ்வரன் ஆலயம் என எங்காவது சென்று மொட்டைப் போட்டுவிட்டு வந்து விடுவார்கள்.
இவ்வாறு குலதெய்வத்தை மறந்து விடுபவர்களும், குலதெய்வ சிந்தனை இல்லாமல் இருப்பவர்களும், என்னதான் ஆலயத்தில் சென்று சடங்கை செய்தாலும், குல தெய்வத்தை மறப்பது, பெற்றோர்களை மறப்பது போன்றதே ஆகும். அதனால் அவர்கள் குல தெய்வத்தின் சாபங்களுக்கு ஆளாகிவிட, வம்சத்தை பல வகைகளிலும் பாதிக்கின்றது.
குல தெய்வமென்பது குலத்தைக் காக்கும் தெய்வம். எனவே, வருடத்தில் ஒரு தடவையாவது, வம்சத்தைக் காக்கும் குலதெய்வத்தின் கோவில் சென்று வழிபாடு செய்வது மிகவும் சிறந்ததாகும். சரிதானே!