நாளை (29.01.2025) அன்று தை அமாவாசை. இத்தினத்தில் ஒரு 20 நிமிடங்கள் மிக முக்கியமாகக் கருதப்படுவதற்குக் காரணம், அமாவாசையில் வரும் அபிஜித் நட்சத்திரமே ஆகும். அது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
அபிஜித் நட்சத்திர விபரங்கள்:
மாதம் தோறும் ஒன்று அல்லது இரண்டு முறைகள் அபிஜித் நட்சத்திர நேரமானது வரும். அந்த வகையில் தை மாதத்தின் அபிஜித் நட்சத்திர நேரம், தை அமாவாசையன்று வருகிறது. விசேஷமான அபிஜித் நட்சத்திர நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
பொதுவாக, நட்சத்திரங்கள் 27 என்பது வழக்கு. 28வது நட்சத்திரமாக இருக்கும் சக்தி வாய்ந்த அபிஜித் நட்சத்திரத்தை மனிதர்களிடம் கொடுத்தால், அவர்கள் அதை தவறாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா, இதனை தன்னுடைய மயில் இறகில் ஒளித்து வைத்ததாக நம்முடைய சாஸ்திரத்தில் உள்ள புராணக் கதைகள் சொல்கின்றன. உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 20 நிமிட காலம்தான் அபிஜித் நட்சத்திர நேரம் என்று கூறப்படுகிறது.
அபிஜித் முகூர்த்தம், அபிஜித் நட்சத்திரம் இரண்டும் வெவ்வேறுகள். அபிஜித் முகூர்த்தம் என்பது தினம்தோறும் மதியம் 11:45 மணி முதல் 12:15 மணி வரை இருக்கக்கூடிய காலகட்டமாகும். தினம் தோறும் இந்த நேரத்தில் நம்முடைய வேண்டுதலை பிரபஞ்சத்திடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும்.
அபிஜித் முகூர்த்ததை விட சக்தி வாய்ந்தது அபிஜித் நட்சத்திரம். இது, தை அமாவாசையன்று காலை 8:08 மணியிலிருந்து 8:32 மணி வரை உள்ளது. இந்த நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து, பிரார்த்தனை செய்து இந்தப் பிரபஞ்சத்திடம் சொல்லலாம்.
மேலும், முதல் முறை அபிஜித் நட்சத்திர நேரத்தில் என்ன பிரார்த்தனையை செய்கிறோமோ அது நிறைவடையும் வரை அடுத்தடுத்த மாதம் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்திலும், ஒரே பிரார்த்தனையாக செய்வது அவசியம். மாற்றி மாற்றி பிரார்த்தனை செய்தால் பலன் கிடைப்பது சிரமம்.
பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு வணங்கி, நல்ல வேலை கிடைக்க, நோய் நொடி தீர, பிள்ளைகள் நன்றாகப் படிக்க, கடன் தீர, திருமணம் நடக்க என்று பிரார்த்தனைகளை வைக்கலாம். அதற்குரிய ஸ்லோகங்கள் கூறி வழிபாடு செய்வது அவசியம்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமன் மந்திரம், கடன் சுமை குறைய மகாலட்சுமி மந்திரம், பண வரவு அதிகரிக்க குபேரர் மந்திரம் என இப்படித் தெரிந்த மந்திர உச்சாடனங்களைச் செய்து பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம். அல்லது அவரவர் குலதெய்வ வழிபாடு, இஷ்ட தெய்வ வழிபாட்டு மந்திரத்தைக் கூட சொல்லலாம். ஆக, மொத்தத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி, 20 நிமிடங்களில் பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு பிரார்த்தனையை சொல்வது மிகவும் முக்கியம்.
நம்பிக்கையோடு இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு. நல்லது நடக்கும். அமாவாசை திதியோடு சேர்ந்து இந்நட்சத்திரம் வருவதாவ், இந்த நேரத்தில் குலதெய்வத்திற்கும், முன்னோர்களுக்கும் நன்றி கூறலாம். இதன் மூலமும் நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.